'போரினை விரும்பேல்' - பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்


சியக் கண்டம் போர்ப் பதற்றத்திற்கு ஆளாகியிருக்கிறது.

எப்படி கொரோனாக் காலத்தில் எல்லார் கவனமும் அதிலாக, நீதிமன்றால் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் 'நைஸாக' இலங்கையில் விடுவிக்கப்பட்டாரோ, அப்படித்தான் சீனாவும் இந்திய எல்லைப் பகுதியில் 'நைஸாக' தன் காரியம் சாதிக்கிறது. எல்லார் கவனமும் தன்னிடமிருந்து பரவிய நோயிலாக, சீனா, தன் கால்களை அகல விரிக்கத் துடிக்கிறது.

இதற்கு அடிப்படையான இந்திய, சீனா முரண்பாடு பல தசாப்த வரலாறு கொண்டது.

எனினும், உலகமே பொது எதிரியாகிய கண்ணுக்குத் தெரியாத வில்லனை அகற்றப் போராடிக் கொண்டுள்ள நிலையில் இப்பொழுது வெடித்துள்ள விரிசலானது, மனுக்குலத்தின் சாபம் எனப்படத் தக்கது.

இந்திய - சீனப் படை அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என்றும், பதற்றநிலை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்றும் அறிக்கைகள் விடப்பட்டாலும், 'ராணுவ வாகனங்களின் அசாதாரண போக்கைப் பார்க்கும்போது எங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது' என்று கலங்கி விழிக்கும் லடாக் கிராமவாசிகளின் கூற்று, உண்மையை உரத்துச் சொல்கிறது.

புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் - அங்கம் 01 முருகபூபதி


 ( மதுரை  உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய தொடர் ஆய்வரங்கில்,  மெல்பனிலிருந்து காணொளியூடாக சமர்ப்பிக்கப்பட்ட உரை )
அறிமுக உரை:  ஜான்ஸி ராணி – மதுரை
முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13)  இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை லெட்சுமணன்.
முருகபூபதி இலங்கையில்  நீர்கொழும்பூரில் தற்போதைய  விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்தா வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட போது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.
இவர் 1972 இல் 'கனவுகள் ஆயிரம்' என்ற சிறுகதை மூலமாக மல்லிகை இதழில் அறிமுகமானார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான சுமையின் பங்காளிகள் 1974  இல் வெளியானது. இந்நூலுக்கு இலங்கை சாகித்திய விருது  1975 இல் கிடைத்தது.
1972 முதல் நீர்கொழும்பு பிரதேச வீரகேசரி நிருபராக பணியாற்றிய இவர்,   1977 இல்  இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கினார்.   1985 இல் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில்  மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் - மாணவர் விழாவில் கலந்து கொண்டார்.  நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.
 1987 இல் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர்.  சிறுகதை, நாவல் , கட்டுரை,  நேர்காணல் , பயண இலக்கியம்,  சிறுவர் இலக்கியம்,  விமர்சனம்,  புனைவுசாரா பத்தி எழுத்துக்கள்   முதலான துறைகளில் எழுதுகிறார்.   இதுவரையில் 24 நூல்கள்  எழுதியுள்ளார்.
பறவைகள் நாவலுக்கு 2003 இல் இலங்கையில் சாகித்திய விருது கிடைத்தது.
முருகபூபதியின் சிறுகதைகள், கட்டுரைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
இவரது படைப்புகளை,  இலங்கை பேராதனை பல்லைக்கழக மாணவி ஒருவரும் தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழக  மாணவி ஒருவரும் தமது MPhil பட்டத்திற்காக  ஆய்வு மேற்கொண்டனர்.

"அப்துல் கலாம் துறையூர் சரஸ்வதி கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?

.

"அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?
என்ன ஜான் சொல்றே ?"
"ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி."
"எப்போ நடந்தது இது ?
எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"
நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.
ஆம்.
அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.
அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.
"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.
கலாம் சொன்னார்
அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.
காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு 47.
இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.
கலாம் தொடர்ந்தார் :
"கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்
அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது.
அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."
"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.
"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"
ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.
அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.
ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.
கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்.
"சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."
"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்."

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -19 கந்தன் தேடிய வள்ளியும் - அம்பி தேடிய தமிழும் ! தெற்கிலும் கிழக்கிலும் ஆடிப்பாடி மகிழும் குறவர் குலத்துப்பெண்டிர் !!


ஆசிரியனாகவும்  இலக்கியவாதியாகவும் இயங்கிக்கொண்டு,  தமிழர் அரசியலிலும் காலை ஊன்றியிருந்த எனக்கு  இலங்கையின் பல பாகங்களிலிலும் நண்பர்கள்  இருந்தார்கள்.
இதற்கு முதல்,  நான் எழுதிய   எனது சொல்லாத கதைகள் 18 ஆவது அங்கத்தில் எனது வேலணைப்பயணம் பற்றி படித்திருப்பீர்கள். வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் அக்காலப்பகுதியில் நடந்த பல கவியரங்குகளில் கலந்துகொண்டதை நினைத்துப் பார்க்கும்போது மனதில் சஞ்சரிக்கும் சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் போலிருக்கிறது. 
முருக வழிபாடு தமிழகத்திலிருந்து இலங்கை – சிங்கப்பூர் – மலேசியா மற்றும் தென்கிழக்காசியா எங்கும் பரந்து, ஈழத்தமிழர்களின் அந்நியப்புலப்பெயர்வையடுத்து,  அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா,  மற்றும் அய்ரோப்பிய நாடெங்கும் படர்ந்திருப்பதை பார்க்கிறீர்கள்.
தென்னிலங்கையில் மாணிக்க கங்கைக் கரையோரம் அமைந்துள்ள கதிர்காமம் தேவஸ்தானத்தின் ஐதீகக்கதைகள் பற்றியும் அறிவீர்கள்.
கதிர்காம வனத்தில்தான் முருகன் வள்ளியை சந்தித்தார் என்றும் சொல்லப்படுகிறது. வள்ளிக்கு  குறமகள் என்றும் ஒரு பெயர். குறவர்கள் குறிசொல்வார்கள். பாசிமணி விற்பார்கள். நாடோடிகளாக  அலைவார்கள்.
தங்களுக்கென ஒரு பண்பாட்டுக்கோலத்தை பாரம்பரியமாக பின்பற்றுவார்கள். இந்த விளிம்பு நிலை மக்கள் பற்றிய அபிப்பிராயம் இலங்கை, இந்தியாவில் வேறுபட்டிருக்கும்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்  அவரது  சகநடிகை ஜெயலலிதாவும்   ஒளிவிளக்கு  என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் குறவர்களாகத்தோன்றி,
 “  நரிக்கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்…. “  என்று பாடி ஆடி நடிப்பார்கள்.
இந்தப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவுவதற்கு முன்பே இலங்கையில் நான் அந்த குறமக்களை நேருக்கு நேர் கிழக்கிலங்கையில் மண்டூரில் பார்த்து பரவசமடைந்துள்ளேன்.
  சென்னையில்  நடந்த உலகத் தமிழராய்ச்சி  மாநாட்டில் புகாரில் ஒரு நாள் கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றதற்கான தங்கப்பதக்கத்தை எனக்குச்  சூட்டியவரும்  மக்கள் திலகம்தான் என்பதை முன்னைய சொல்லாத கதைகள் பதிவொன்றில் சொல்லியிருக்கின்றேன்.
அன்று அவர்  அறிஞர் அண்ணாவின் தி. மு. கழகத்தில்  பொருளாளராக இருந்து கொண்டு திரையில் தோன்றி மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார்.
ஏழைப்பங்காளனாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் தொண்டனாகவும் தனது சினிமாப்   பாத்திரங்களை வடிவமைத்துக்கொண்டு,  மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார்.  விவசாயியாக, தொழிலாளியாக,  தீய சக்திகளையும் நல்வழிப்படுத்தும் நாயகனாக,  பல்வேறு பாத்திரங்களில் தோன்றிய அவர்,   அடிநிலையில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களான குறவர்களின் நேர்மையையும் வாழ்வுக்கோலத்தையும் சித்திரிக்கும் காட்சியில் அவர்களாகவே வந்து தோன்றி அம்மக்களின் உள்ளங்களையும் கவர்ந்தார்.

விக்ரோரியா கேசி தமிழ் மன்றத்தின் காணோளி ஒன்றுகூடலில் கவியரசு கண்ணதாசன் நினைவுப்பகிர்வு நவரட்ணம் வைத்திலிங்கம் - மெல்பன்


வியரசு  கண்ணாதாசனின் 93 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ,  நேற்று ஞாயிற்றுக்கிழமை 28 ஆம் திகதி  மாலை விக்ரோரியா
கேசி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் காணொளி நினைவுப்பகிர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது.
மூத்தோர் முற்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த

வழமையான  இந்த ஒன்று கூடல் நிகழ்வின்போது,   கடந்த வாரத்தைப்போன்று  எழுத்தாளர் திரு.  ஆவூரான் சந்திரன் தனது கேசி தமிழ் மன்ற வானொலி நிகழ்ச்சியாக ஒருங்கமைத்து வழங்கும்  பொங்கும் பூம்புனல் நிகழ்வுடன் கண்ணதாசன் நினைவுப்பகிர்வு ஆரம்பமானது.

கவிஞர் கண்ணதாசன் நினைவாக அவரது  பாடல்களும் ஒலிபரப்பாகியது.  அரிய பல தகவல்களுடன்  நினைவுரையை  எழுத்தாளர் திரு. முருகபூபதி  நிகழ்த்தினார்.  ,
அவரது உரையைத் தொடர்ந்து,   ஆவூரான் சந்திரன், கண்ணதாசன் பற்றிய பல தகவல்களை ,  கேள்வி - பதில் மூலமாக அவரிடமிருந்து வெளிவரச்செய்து அனைவரும் அறியும்படி இந்நிகழ்ச்சியை தொய்வின்றி ரசித்து மகிழும் வண்ணம் நடத்தினார். 
 இருபத்தேழு அங்கத்தவர்களுடன் இரண்டு மணி நேரம் நீடித்த நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந் நிகழ்ச்சியில் ஆவூரான் சந்திரனுக்கு  பாடல்கள் தொகுத்துக் கொடுப்பதற்கு  செல்வன் ஆரூரன் மதியழகன் துணையாற்றினார்.  

படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 24 - கவியரசு கண்ணதாசன் ( 1927 – 1981 ) பிறந்த தினம் வனவாசமும் - மனவாசமும் முருகபூபதி


எனது வாழ்நாளில் நான் சந்தித்து பேசுவதற்கு பெரிதும் விரும்பியவர்கள் பலர்.  குறிப்பாக கவிஞர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களைத்தான்  நான் சந்திப்பதற்கு மிகவும் விரும்புவேன்.
ஏனென்றால் நானும் அவர்களின் வர்க்கத்தைச் சேர்ந்தவன்.
கவிஞர் வாலியை சந்தித்திருக்கும் நான் அவர் பற்றி ஒரே ஒரு கட்டுரைதான் எழுதியிருக்கின்றேன். ஆனால்,  கவியரசு கண்ணதாசனை சந்திக்கமுடியாமலேயே அவரது எழுத்துக்களைப்  படித்தும் அவரது பாடல்களில் லயித்தும் அவரது  மனைவியார் பார்வதி அம்மா, மற்றும் அவரது மகன்மார் காந்தி, கலைவாணன், அண்ணாத்துரை, மற்றும் பேரப்பிள்ளைகள்,  மருமகள் மீனா காந்தி கண்ணதாசன், சகோதரர்  இராம கண்ணப்பன்  ஆகியோருடன் உறவாடியும் உரையாடியும் - அவர்களின் அன்பான உபசரிப்பில் திழைத்தும், பல கட்டுரைகளை கடந்த காலங்களில் எழுதியுள்ளேன்.
எனது மனைவி மாலதியின் தம்பி கவிஞர்  “காவ்யன்  “ முத்துதாசன் விக்னேஸ்வரன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில், கண்ணதாசன் இல்லத்தில் அமைந்திருந்த கண்ணதாசன் பதிப்பகத்திலும் பணியாற்றியிருப்பவர். அத்துடன் இயக்குநர் கலைவாணன் கண்ணதாசனின் வா அருகில் வா திரைப்படத்திலும் சில காட்சிகளில் நடித்திருப்பவர். அதன் துணை இயக்குநருமாவார்.  பலரது பார்வையில் கண்ணதாசன் என்ற நூலின் தொகுப்பாசிரியருமாவார்.
அவரே எனக்கு கண்ணதாசனின் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். 1984  ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் திருமதி பார்வதி அம்மா கண்ணதாசன் அவர்களை சந்தித்துவிட்டு வந்து,  இலங்கை வீரகேசரி பத்திரிகையிலும் விரிவான கட்டுரை எழுதியிருக்கின்றேன். அதனை  சிங்கப்பூர்  பத்திரிகை ஒன்றும் மறுபிரசுரம் செய்துள்ளது.  மீண்டும் 1990 ஆம் ஆண்டு எனது குழந்தைகளுடன் அங்கே சென்றும்  அவரைப் பார்த்துள்ளேன். அவ்வேளையில்தான் அவர் நோய்வாய்ப்பட்டு  சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரைச்சென்று பார்த்து சுகநலம் விசாரித்தேன். மறுநாள் அவர் கணவர் சென்றவிடத்திற்கு போய்விட்டார்.  மரணச்சடங்கிலும் கலந்துகொண்டேன்.
பாவமன்னிப்பு திரைப்படத்தில் வரும் காலங்களில்  அவள் வசந்தம் பாடலை தன்னை மனதில் வைத்தே அவர் எழுதினார் எனச்சொல்லியிருந்தவர்தான் பார்வதி அம்மா.  பல திரைப்படப்பாடல்களின் பின்னணிக்கதைகளையும் அவர் என்னிடம் குதூகலத்துடனும் மனவலியுடனும் சுவாரசியத்துடனும்  பகிர்ந்துள்ளார்.

இலங்கைச் செய்திகள்


இராணுவத்தால் வீடு நிர்மாணிப்பு

பட்டதாரிகள் விழிப்படைந்து அரசியலுக்குள் வர வேண்டும்

கருணாவிடம் வாக்குமூலம் பெற CIDயிற்கு உத்தரவு

என்னை கைது செய்வதா? அது முடியாத காரியம்

கருணா மீதான விசாரணை நடவடிக்கை; புனர்வாழ்வு பெற்ற புலிகள் கலக்கத்தில்

ஹரீன் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டும்

கருணா அம்மானுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

வனவள திணைக்களத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்

நடராஜசிவமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

கருணா மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டு தெரிவிப்பு

அரசுக்கு வைத்த பொறியில் சிக்கி சின்னாபின்னமாகிய சஜித் அணி


இராணுவத்தால் வீடு நிர்மாணிப்பு



போரால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு வட்டாரம் ஜே 27 கிராம சேவையாளர் பிரிவில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய அடிக்கல் நாட்டி வைத்தார்.
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் சமூக சேவைகளில் ஒன்றாகிய வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கு வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 512 பிரிகேடியர் படைத் தலைமையகத்தின் 51 பிரிவில் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்  நன்றி தினகரன் 

உலகச் செய்திகள்


கொரோனா சோதனையை குறைக்க டிரம்ப் உத்தரவு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி: ஜாக்சனின் சிலையை அகற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி

வெளிநாட்டு ஊழியர்களுக்கான அமெரிக்க விசா தடை நீடிப்பு

உலக கொரோனா தொற்று 9 மில்லியனைத் தாண்டியது

கொவிட்–19: புதிய தடுப்பு மருந்து பிரிட்டனில் சோதனை

நிர்க்கதியான ரொஹிங்கியர்களை மீட்டுவந்த இந்தோனேசிய மீனவர்கள்

சீன அதிகாரிகளுக்கு தடை: அமெரிக்க செனட் ஒப்புதல்

 ‘சருமத்தை வெண்மையாக்கும்’ பொருட்களுக்கு கடும் அழுத்தம்



கொரோனா சோதனையை குறைக்க டிரம்ப் உத்தரவு



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சோதனைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், தாம் அவ்வாறு கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
“சோதனை என்பது இருபுறமும் கூர்மையான கத்தி” என்றார் அவர். அமெரிக்காவில் இதுவரை 25 மில்லியன் பேரிடம் வைரஸ் தொற்றுச் சோதனை நடத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வளவு அதிகமான சோதனைகள் நடத்தப்படுகின்றனவோ, அவ்வளவு அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்படுவர் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
கோவிட் –19 நோய்க்குப் பல்வேறு பெயர்கள் இருப்பதாகக் கூறிய அவர், தாம் அதற்கு ‘குங் ப்லுௗ’ எனப் பெயரிடுவதாக கூறினார்.
ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள துல்ஸா நகரில் நடைபெற்ற, முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் இதனைத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் முதலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவானவர்களே கலந்துகொண்டனர்.     நன்றி தினகரன் 

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 42 முருகபூபதி


வெளியே சென்றிருந்த ஜீவிகாவும் ஜெயசீலனும் வீடு திரும்பியபோது, கலகலப்பு மீண்டும் ஜீவிகாவின் களீர் சிரிப்புடன் தொடங்கியது.
 “ அபிதா…. உங்களுக்கும் சேர்த்து ஐஸ்கிறீம் வாங்கி வந்துள்ளோம்.  இது கொஞ்சநேரம் ஃபிரிட்ஜில் இருக்கட்டும்  “ எனச்சொன்னவாறு, அந்த ஐஸ்கிறீம் கன்டேயினரை உள்ளே வைத்தான் ஜெயசீலன்.
‘  யாருக்கு ஐஸ்…?  எந்தக்  கொஞ்சலுக்கு…?  ‘ அபிதா மனதிற்குள் சிரித்தாள்.
“  வெளியே போய்வந்திருக்கிறோம். நீங்க போய் முதலில் குளித்துவிட்டு வாங்க.   “ ஆசனத்தில் அமரச் சென்ற சீலனை, ஜீவிகா கலைத்தாள்.
“  என்ன சொல்லுறீர்… நான் மாற்று உடுப்பு ஏதும் கொண்டு வரவில்லை.  “ 
“  அதெல்லாம் தரலாம். பாத்ரூமில் வோஷிங் மெஷின் இருக்கிறது.  போட்டால், எடுத்து காயப்போடலாம். போகும்போது அயர்ன் பண்ணித்தாரன்.  லண்டன் பெரியப்பாவின் சாரம்  மாற்றுடைக்கு  இருக்கிறது. தாரன். “  ஜீவிகா அதனை எடுக்க திரும்பியபோது,  “ வேறு என்ன இருக்கிறது..?  “ என்று சீலன் கண்ணைச் சிமிட்டிக்கேட்டான்.
“  அடியிருக்கிறது….  ஆளைப்பாரு ஆளை…?  “  முகத்தை சுழித்துக்கொண்டு லண்டன்காரரின் உடைகளுக்கு மத்தியிலிருந்து ஒரு சாரமும், ரீ சேர்ட்டும் எடுத்துவந்தாள் ஜீவிகா.
 “ அபிதா… இந்த மெடமுடன் எப்படி காலம் தள்ளுறீங்க...  “ என்று அபிதாவைப்பார்த்துக் கேட்டான் சீலன்.
“  நான் காலம் தள்ளுவது ஒரு புறம் இருக்கட்டும், நீங்கள் இனிமேல் எவ்வாறு காலம் தள்ளப்போகிறீர்கள்..? அதைப்பற்றி யோசியுங்க அய்யா.  “   என்றாள் அபிதா.
 “ என்ன அய்யாவா…? எனக்கு உங்களை விட வயது குறைவாகத்தான் இருக்கும்.  தம்பி என்று கூப்பிடுங்க.  சீலன் – ஜெயா என்றும் கூப்பிடலாம் .  “ 
 “  சரி தம்பி….. போய் குளித்துவிட்டு வாங்க தம்பி. நானும் குளிக்கவேண்டும் தம்பி… இனிப்போறீங்களா தம்பி…. “ ஜீவிகா சீலனை குளியலறை நோக்கித்தள்ளிவிட்டு களீரென சிரித்தாள்.
இந்த வேடிக்கைக்கூத்து எதனையும் பார்ப்பதற்கு  சுபாஷினி, மஞ்சுளா, கற்பகம் ரீச்சர், லண்டன்காரருக்கு சந்தர்ப்பம் இல்லாமல்போய்விட்டதே…! என்று அபிதா மனதிற்குள் சிரித்தாள்.
அத்துடன் இனம்புரியாத பயமும் அவளது மனதில் துளிர்விட்டது.

தமிழ் சினிமா - பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் எப்போதும் ஹீரோக்களின் ராஜ்ஜியம் தான் இருக்கும். ஆனால், அதை கடந்து தற்போது ஹீரோயின்களின் கை தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் ஜோதிகாவின் நடிப்பில் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள படம் பொன்மகள் வந்தாள். பல தடைகளை கண்ட இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? பார்ப்போம்.
கதைக்களம்
ஊட்டியில் தொடர்ச்சியாக 5 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதோடு 2 இளைஞர்களும் கொலை செய்யப்படுகின்றனர்.
இவை அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் செய்தது ஜோதி என்ற சைக்கோ பெண் தான் என கூறி போலிஸாரே அவரை கொல்கின்றனர்.
நீண்ட நாட்கள் கழித்து ஜோதி தவறு செய்யவில்லை என்று பாக்யராஜ் இந்த வழக்கை மீண்டும் எடுக்க, பாக்யராஜ் மகள் ஜோதிகா இந்த கேஸை எடுத்து நடத்துகிறார்.
ஜோதிக்கும் ஜோதிக்காவிற்கும் என்ன தொடர்பு, அவர் ஏன் இந்த கேஸை எடுக்க வேண்டும், எடுத்த வழக்கை வெற்றிகரமாக முடித்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பொன்மகள் வந்தாள் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள பெரிய தமிழ் படம் என்பதால், ரசிகர்களிடம் இப்படத்தை பார்க்க பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதன்படியே பலரும் நேற்று இரவே இப்படத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் எதிர்ப்பார்ப்பு போலவே ஜோதிகா இப்படத்தில் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார்.
வென்பா என்ற கதாபாத்திரத்தில் வக்கீலாகவே வாழ்ந்துள்ளார். அதும் பார்த்திபனை எதிர்த்து அவர் வாதாடும் காட்சிகள் எல்லாம் தியேட்டராக இருந்தால் விசில் பறந்திருக்கும்.
படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்ல, யார் இந்த ஜோதி, யார் இந்த கொலைகளை எல்லாம் செய்தது என்ற காட்சிகள் சுவாரஸ்யமாக செல்ல, அதற்கான விடைகள் மெல்ல இரண்டாம் பாதியில் வரவர, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் அதிர வைக்கின்றது.
எதிர்த்து வாதாடும் பார்த்திபம், நீதிபதியாக வரும் பிரதாப் என அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர்.
இதையெல்லாம் விட எடுத்துக்கொண்ட கதைக்களம், இன்றைய சமூக சூழ்நிலையில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை பெட்ரிக் மிக அழுத்தமாக கூறியுள்ளார்.
இதற்கு பக்கபலமாக ராம்ஜி ஒளிப்பதிவு ஊட்டியை நம்மை உணர வைக்கின்றார், அதோடு அந்த நீதிமன்ற காட்சிகளை எடுத்த விதம் சூப்பர், கோவிந்த் வசந்த் இசை கதையின் உயிரோட்டத்திற்கு உதவுகின்றது.
ரூபனின் எடிட்டிங் படத்தை கண கச்சிதமாக கொடுத்துள்ளது.
க்ளாப்ஸ்
படத்தின் நடித்த நடிகர், நடிகைகள்.
ஜோதிகாவின் டாப் 5 பெர்ப்பாமன்ஸில் ஒன்றாக இதை சொல்லலாம்.
படத்தில் எடுத்துக்கொண்ட களம், நம் சமூகத்தில் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றது.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி நீதிமன்ற காட்சிகள் ஒரு சில இடங்களில் நீளமாக செல்வது போன்ற உணர்வு.
மொத்தத்தில் எடுத்த வழக்கில் ஜோதிகாவின் அமோக வெற்றியே இந்த பொன்மகள் வந்தாள்.





நன்றி    CineUlagam 


கற்றுத் தந்தபாடம் அர்த்தமுள தன்றோ ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


விட்டுவிடு என்றால் விட்டுவிட மாட்டார்
செத்திடுவாய் என்றால் செவிமடுக்க மாட்டார்
தொற்றிவந்த கொரனா கற்றுத்தந்த பாடம்
விட்டுவிட்டு விலகி நிற்கவைத்த திப்போ   !

மதுவருந்தும் பலபேர் மாறிவிட வைத்து                                 
புகைவிரும்பும் பலபேர் அதைநினையா நிற்க                            
தனிமை எனும்பாடம் தந்ததிந்த கொரனா                                    
அதுவெமது வாழ்வில் அதிகநன்மை யன்றோ !

சூழல் தூய்மையாக துணையாக நின்று                                
வீடு கோயிலாக ஆகிவிட வைத்து                                    
பாடசாலை வீட்டில் புகுந்திடவே வைத்த                               
பாடமது எமக்கு நல்திருப்பம் அன்றோ    !

கடை  உணவெமது வயிறடையா வண்ணம்                             
வீட்டுணவு உடலைக் காத்திடவே வைத்து                                  
கூட்டமதில் இணையா குடும்பதில் இணைய                           
காட்டி நின்றபாடம் கருத்தினிலே கொள்வோம் !

அஞ்சலிக்குறிப்பு: தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த மண்டூர் மகேந்திரன் முருகபூபதி


தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த மண்டூர் மகேந்திரன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்துள்ளது. 
1970 இல் உருவான  ஶ்ரீமா – என். எம். பெரேரா – பீட்டர் கெனமன் கட்சிகளின் கூட்டரசாங்கம் ஜனநாயக சோஷலிஸ குடியரசை நிறுவியதையடுத்து.,  சட்டமேதை என நன்கு அறியப்பட்ட  கொல்வின் ஆர். டீ. சில்வா எழுதிய புதிய அரசியல் அமைப்பின் எதிரொலியாக , அதுவரையில் சமஷ்டி கோரிவந்த தமிழரசுக்கட்சியினரும் தமிழ் இளைஞர் பேரவையினரும் அந்த அரசியல் அமைப்பினை தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினர்.
அதே சமயம் , அந்த கூட்டரசாங்கம் சில முற்போக்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்கியதுடன், பல நிறுவனங்களை அரசுடைமையாக்கி இலங்கை வானொலியை – ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமாக்கியது.  திரைப்படக்கூட்டுத்தாபனம் அமைத்து உள்ளுர் சிங்கள – தமிழ் சினிமாவுக்கும் ஊக்கம் கொடுத்தது.
அத்துடன் தென்னிந்திய வணிக இதழ்களின் மீதும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால், இலங்கையில் பல தமிழ் சிற்றிதழ்களும் வெளிவரத்தொடங்கின. வீரகேசரி நிறுவனமும் மாதம் ஒரு நாவல் திட்டத்தில் பல ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிடத்தொடங்கியது.
அஞ்சலி, ரோஜாப்பூ ,  மாணிக்கம் ,  தமிழமுது,  பூரணி  முதலான கலை இலக்கிய இதழ்களும் வெளிவரத்தொடங்கின.
இக்காலப்பகுதியில்  கொழும்பில் இயங்கிய தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் இணைந்து இயங்கியவர்தான் மண்டூர் மகேந்திரன்.
அச்சமயம் கொழும்பில் புதுக்கடை பிரதேசத்தில் இயங்கிய இலங்கை வங்கிக்கிளையில் பணிபுரிந்த இணுவையூர் இரகுபதி பால ஶ்ரீதரனும் அவ்விளைஞர் பேரவையில் முக்கிய பங்கெடுத்திருந்தார்.
இவர் கலை, இலக்கிய ஆர்வம் மிக்கவர்.  இவருடன் அதே வங்கியில் பணியாற்றிய கைலாசபிள்ளை என்பவரின் மனைவி சரோஜினியும்  கலை, இலக்கிய ஆர்வத்துடன் மாணிக்கம் என்ற மாத இதழை தொடங்கினார்.
இந்த இதழ் கொழும்பு பாமன்கடையில் கல்யாணி வீதியில் அமைந்திருந்த கைலாசபிள்ளை – சரோஜினி தம்பதியரின் இல்லத்திலிருந்து வெளிவந்தது.

தாய்வீடு அச்சுப் பத்திரிகை இனி ஒலி இதழாகவும் - படிக்கலாம் & கேட்கலாம் - கானா பிரபா


கனடாவில் இருந்து வெளிவரும் “தாய்வீடு” மாதப் பத்திரிகை பல்லாண்டுகளாக நடப்புச் செய்தி விமர்சனங்கள், வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு குறித்த திரட்டுகளோடு வெளிவரும் கனகாத்திரமான இதழாகும்.

இன்று தொழில் நுட்பத்தின் அடுத்த பாய்ச்சலாக ஒலிப்புத்தகங்கள் பெருகி வரும் சூழலில் தாய்வீடு பத்திரிகை இந்த ஜூன் மாத இதழில் இருந்து ஒலியிலும் பயணிக்க ஆரம்பிக்கிறது. அதாவது குறித்த பத்திரிகையின் கட்டுரைகளை அழுத்தும் போது அது ஒலி ஊடகம் வழியாக வாசிக்கின்றது. விளம்பர பக்கத்தை அழுத்தினால் குறித்த விளம்பரதாரரின் இணையப் பக்கம் செல்கிறது.

தமிழை வாசிக்கப் பழகுவோருக்கும்மொழியைச் செவி வழியாக உய்த்துணர்வோருக்கும் இந்த ஒலி இதழ் முயற்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது.

பத்திரிகைத் துறையில் புதுமை படைத்திடும் தாய்வீட்டுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

இந்த ஒலி வழி வாசிப்புச் செயன்முறை குறித்த என் காணொளிப் பகிர்வு இது.