( இலங்கையிலிருந்து வெளியாகும் ஞானம் மாத இதழ் ( 290 ஆவது இதழ் ) இம்மாதம் ( ஜூலை ) அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளரும், ஓவியருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களை அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளது. இவ்விதழில் இவரைப்பற்றி எழுத்தாளர் முருகபூபதி எழுதிய பதிவு இங்கே தரப்படுகிறது )
உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம் விட்டு உலகின் எந்தப்பாகத்திற்குச்சென்று வாழ நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக எனது அவதானத்தில் மற்றும் ஒருவரை ஞானம் இதழில் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.
எனினும், இவருக்கு அறிமுகம் அவசியமில்லைத்தான். கருத்தாழமும்
உயிர்ப்பும் இணைந்த தனது வண்ண ஓவியங்கள் மற்றும் ஆக்க இலக்கியப்படைப்புகளின் மூலமாக
எமது வாசகர்களுக்கு, குறிப்பாக ஞானம் மாத இதழின் அபிமான வாசகர்களுக்கு நன்கு
அறிமுகமானவர்தான் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் வதியும் ஓவியர் – படைப்பிலக்கியவாதி
கிறிஸ்டி நல்லரெத்தினம்.
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு இவரது பூர்வீகம்.
தனது கல்வியை மட்டுநகர் புனித. மிக்கேல் கல்லூரியில் நிறைவு செய்துவிட்டு, கணக்கியலில் தேர்ச்சி பெற்று இலங்கையில் முன்னணியில் திகழ்ந்த தனியார் வர்த்தக வங்கியில் கடமையேற்றார்.
1970 களில் இலங்கையில்
நன்கு அறியப்பட்ட ஓவியர் செள அவர்களின் மருமகன்தான் கிறிஸ்டி. ஓவியர் செள அவர்களின்
கருத்துப்படங்களையும் ஓவியங்களையும் கொழும்பில் இளம்பிறை ரகுமான் நடத்திய அரசு வெளியீடு
நூல்களில் குறிப்பாக, ஈழத்தின் மூத்த கவிஞர் மஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பா தொகுப்பில் வாசகர்கள்
பார்த்திருக்கலாம்.
கிறிஸ்டி
நல்லரெத்தினம், தனது இளமைப் பருவத்திலிருந்தே ஓவியக்கலையில் நாட்டம் மிக்கவராகவிருந்தார்.