இயற்றியவர் –‘சிவஞானச் சுடர்’ பல்மருத்துவக் கலாநிதி பாரதி இளமுருகனார்
‘ஊனுடம்பு ஆலயமாம் ஒப்புயர் விலாச்சிவன்
உவந்துறையும் உள்ளம்பெருங் கோயில்’என்று
மானுடர்க்கு உணர்த்தியதே தமிழ்த்திரு மந்திரம்!
‘ மகத்தான பிறப்பான மனிதப் பிறப்பை’
‘வானுறையும் தேவருக்கும் கிட்டா தொன்றை ’
வையகத்து மனிதனவன் பெற்றி ருந்தும்
தானுணர்ந்து பிறப்பினது இலக்கை எய்தத்
தவறியவன் இறந்துபிறந் துழல்கின் றானே!
அழிவற்றவெம் உயிருக்குத் தந்த உடலுடன்
அறவாழ்வில் வாழ்வாங்கு வாழ்ந்து வினைகள்
அழிவுற்ற நிலைகாண அகவழி பாட்டை
ஆற்றியிறை பணியியற்றித் தியான வழியால்
அழிவில்லாப் பேரின்பந் தன்னை வேண்ட
அனைத்துப்பா சங்களெல்லாம் அகற்றி ஈற்றில்
அழிவோபிறப் பிறப்போவிலாப் பேற்றை ஈய்ந்து
அந்திவண்ணன் அடைக்கலந்தந் தணைப்பா னன்றோ?
உடலின்நற் தூய்மைதனை ஓம்பிட வேண்டும்
உயிர்நாடும் மனத்தூய்மை உண்மையில் வேண்டும்!
திடமான உடலுக்குத் தூயசத் துணவைத்
தேவையென்று பசியுணர்ந்து கொடுத்து வந்தால்
கடமைகளைச் சிறப்பாக இயற்றி உடலும்
களைநீக்கிப் புத்துணர்ச்சி பெற்றுச் சிலிர்க்கும்!
நடமாடச் சூழலதன் தூய்மை காக்க
நாளாந்தம் மாசுசேரா நிலைபேண வேண்டும்.
தூய்மைதனை அனுதினமும் அகத்திலும் புறத்திலும்
துலங்கவிட நற்பண்பும் தோன்றி அந்தோ
வாய்மையொடு இன்சொல்லும் அணியா யிலங்க
வாழ்ந்திடுவீர்! பார்ப்போர்க்கு உங்கள் வாழ்க்கை
தாய்மையதன் மேன்மைபோல் வாழ்வாங்கு வாழத்
தக்கதொரு உதாரணமாய்த் திகழும்! மக்களோ
பேய்கள்போல் அலைந்துலைந்து மாழா திருக்கப்
பேணவேண்டும் பழந்தமிழர் விழுமி யங்கள்!
நிலையில்லாப் பொருள்கள்மேல் வாழ்நா ளெல்லாம்
நித்தமுமே பேராசை வைத்து வாழ்ந்து
இலௌகீத ஆசைகளை வளர்ப்ப தோடு
இடர்ப்பட்டுப் பணம்காணி சேர்ப்ப தையே
தலையாய பணியாகப் பிறந்ததன் பயனெனத்
தவறான நம்பிக்கை கொண்டே பலரும்
உலைந்தலைந்து வாழ்நாளை வீணே தொலைத்து
உண்மைப்பொருள் காணாது மடிகின் றாரே!
அத்துவிதப் பேற்றதனை அடைய வேண்டி
அரன்தாளைச் சரணடைந்து நிற்போ மாயிலெண்
பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதம்
படைத்தருளி உய்விக்கும் பரம தயாளன்
சித்தம்உறை பாசமலப் பேரிருள் அகற்றிச்
சிவமாக்கித் திருவடியிற் சேர்ப்பா னன்றோ?
உத்தமமாம் நிராதார யோகம் இயற்றி
உய்யும்வழி தனைத்தேர்ந்து சிவனடி சேர்வாம்!
அரும்பத
விளக்கம்:-
நிராதார யோகம் - பொருள்களின்
துணையின்றி இறையருளால் இறைசிந்தனை மூலம் இறைவனுடன் ஒன்றிணைவதற்குரிய – அதிசிறந்த
தியானப்பயிற்சியைக் குறிப்பது
அக வழிபாடு – மனதாலே
இறைவழிபாடு செய்தல்
பரம தயாளன் – சிவபெருமான்
அந்திவண்ணன் - சிவபெருமான்
உண்மைப்பொருள் - அழியக்கூடிய இந்த உலகப் பொருள்களுக்குப் பின்னால்
இருக்கும் நிலையான "பரம்பொருளை" அல்லது "இறைவனை"யே உண்மைப் பொருள்
எனச் சைவசித்தாந்தம் குறிப்பிடுகிறது.
அத்துவிதம்
- இரண்டு அற்ற ஒரு நிலை. இதுசிவம் இது ஆன்மா
எனப் பிரித்தறிய முடியாத கலப்பு நிலையே அத்துவிதம்
அரன் - சிவபெருமான்
எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதம் -- (84,00000)
எண்பத்து நான்கு லட்சம் வகையான பிறப்பு வேறுபாடுகள் கடவுளின் படைப்பிலே உள்ளது.
பாசமலப் பேரிருள் = பாசம்
+ மலம்
+ பெரும்இருள்,
பாசம் – பந்தம், மலம் - ஆணவம்
- கன்மம் மாயை ஆகிய மலங்கள் இருள்
- மேலே கூறியவற்றால் ஏற்படும் மனமயக்க அறியாமை
சிவமாக்கி – சிவத்தன்மை
அடையச்செய்து




No comments:
Post a Comment