இலங்கைச் செய்திகள்

 புதிய அரசியலமைப்பு உருவாக்க தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்று வாய்ப்பு ; அதுவரை 13ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்க வேண்டும் - சர்வதேச சிறுபான்மையினக்குழு வலியுறுத்தல்

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் தேவராசா - மட்டக்களப்பில் நினைவேந்தல்!

 இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்; பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவிப்பு

பதுளையின் 68% நிலம் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது - தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை!

மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்த அழுத்தம் வழங்குங்கள் ; இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் 



புதிய அரசியலமைப்பு உருவாக்க தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்று வாய்ப்பு ; அதுவரை 13ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்க வேண்டும் - சர்வதேச சிறுபான்மையினக்குழு வலியுறுத்தல்

Published By: Vishnu

25 Dec, 2025 | 06:46 PM

(நா.தனுஜா)

தேசிய மக்கள் சக்திக்கான சிறுபான்மையினத்தவரின் ஆதரவு என்பது இதுவரை சிறுபான்மையின அரசியலை வடிவமைத்த அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளான மனித உரிமைகள், நீதி மற்றும் அரசியல் சுயாட்சி என்பவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு சமமானதா? என 'சர்வதேச சிறுபான்மையினக்குழு' எனும் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

அதேவேளை இலங்கையின் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் கூடிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாய்ப்பு தேசிய மக்கள் சக்தி வசமிருப்பதாகவும், அதனை உருவாக்கும் வரை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் சீர்குலைந்துவரும் சிறுபான்மையின அரசியல் போக்கு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின்கீழ் 'சர்வதேச சிறுபான்மையினக்குழு' எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 50 பக்க ஆய்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கை அரசியலின் மிகமுக்கியமானதொரு காலகட்டத்தில் இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது. சிறுபான்மையினத்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் மாற்றத்தை முன்னிறுத்தி, சமத்துவத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் ஒடுக்குமுறைகளை இல்லாதொழித்தல் ஆகிய வாக்குறுதிகளை அளித்த கட்சியொன்றை வாக்களித்துத் தெரிவுசெய்துள்ளனர். நாட்டின் பெரும்பான்மையின மக்களைப்போல அவர்களும் ஊழலை முடிவுக்குக்கொண்டுவரல், அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் பின்னரான பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பவற்றையே கோருகின்றனர். அவற்றை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பேரினவாதப்போக்கையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்தது. இருப்பினும் தேசிய மக்கள் சக்திக்கான சிறுபான்மையினத்தவரின் ஆதரவு என்பது அவர்கள் இதுவரை முன்னுரிமை அளித்துவந்த விடயங்களில் ஏற்படும் மாற்றத்துக்கு சமமானதா? இதுவரை சிறுபான்மையின அரசியலை வடிவமைத்த அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளான மனித உரிமைகள், நீதி மற்றும் அரசியல் சுயாட்சி என்பவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு சமமானதா? என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும் இலங்கை சுதந்திரமடைந்திலிருந்து நாம் அறிந்த சிறுபான்மையின அரசியல் பிரதிநிதித்துவம் இப்போது வெகுவாக மாற்றமடைந்துள்ளது. பழைய தேசிய அரசியல் கட்சிகள் தம்மைத்தாமே நிலைமாற்றத்துக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அச்செயன்முறையின்போது மிகப்பொருத்தமான சிறுபான்மையின அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான வாய்ப்புக்கள் உருவாகும்.

நீண்டகாலமாகப் பழக்கப்பட்ட முகங்களுடன் நாட்டிலுள்ள சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அண்மையகாலங்களில் அவற்றுக்கான அங்கீகாரத்தைப் பெருமளவுக்கு இழந்துவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றியினால் ஏற்பட்ட விளைவுகள் நிரந்தரமில்லாத போதிலும், அவ்விளைவுகள் சிறுபான்மையின அரசியல் கட்சிகள் தாம் செய்யத்தவறிய விடயங்களை சுயபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்தைத் தோற்றுவித்துள்ளன. இவ்வேளையில் சிறுபான்மையினக்கட்சிகள் நாட்டின் அரசியலில் தமது வகிபாகம் என்னவென்பதை மீளாய்வுக்கு உட்படுத்தவேண்டும். அத்தோடு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டியது மிக அவசியமாகும்.

தற்போது தேசிய மக்கள் சக்தியிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி இலங்கையின் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாய்ப்பு அதன்வசம் உள்ளது. அதேபோன்று நீண்டகால வரலாற்றைக்கொண்ட உரிமைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளுக்கும், மூன்று தசாப்தகால மோதலுக்கு வித்திட்ட அடிப்படைக்காரணங்களுக்கும் தீர்வு காண்பதே சகல கட்சிகளினதும் முன்னுரிமைக்குரிய இலக்காக இருக்கவேண்டும். அதன்படி புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 






இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் தேவராசா - மட்டக்களப்பில் நினைவேந்தல்! 

25 Dec, 2025 | 04:43 PM

இலங்கையில்  படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை தேவராசாவின்  39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் வள நிலையத்தில் இன்று (25) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. 

கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணன் இல்லத்தின் செயலாளர் உ.உதயகாந்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது மறைந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை


தேவராசாவின் திருவுருவப் படத்துக்கு அன்னாரின் உறவினரான அக்கரைப் பாக்கியனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் உறுப்பினர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணனால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.

பின்னர், அன்னாரது உறவினரான அக்கரைப் பாக்கியன் பேருரை ஆற்றினார். 

1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  இலங்கையில்  படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளராக கணபதிப்பிள்ளை தேவராசா கருதப்படுகிறார்.   

























நன்றி வீரகேசரி 




இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்; பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவிப்பு 

Published By: Vishnu

25 Dec, 2025 | 05:14 AM

(நா.தனுஜா)

பிரித்தானிய அரசாங்கம் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக  தடைகளை விதித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன. தடை விதிப்புக்கள் தொடருமென வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்துள்ளார்.

பிரித்தானியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு கூட்ட ம் கடந்த வாரம் இம்பெற்றிருந்த நிலையில் அங்கு கருத்துரைத்த உமா குமாரன் எம்.பி. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக தமிழ்ச்சமூகத்துக்கான நீதி தொடர்பில் முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் தான் வலியுறுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்புவதற்கு ஏதுவான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால் போர்க்குற்றங்களிலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் விசாரணைகளோ அல்லது சிறப்பு நீதிமன்ற விசாரணைகளோ மேற்கொள்ளப்படவில்லை' என அவர் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று, 'பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர், தப்பிப்பிழைத்தோர் என யாருக்கும் செவிசாய்க்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு இலங்கை அரசு தவறியிருப்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ரோம சாசனத்தில் கைச்சாத்திடுவதற்கும், இவ்விவகாரம் சார்ந்த அரசியல் தன்முனைப்பை வெளிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்குரிய நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின்மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்குமா?' எனவும் உமா குமாரன் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர், தமிழ்ச்சமூகம் தொடர்பில் நீண்டகாலமாகத் தாம் கொண்டிருக்கும் நியாயபூர்வமான கரிசனைகள் தொடர்பில் பிரஸ்தாபித்தார். அத்தோடு மனித உரிமைகள் சார்ந்து நிலவும் கரிசனைக்குரிய விடயங்களுக்குத் தீர்வுகாணுமாறு தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகவும், இருப்பினும் இதுசார்ந்த நிலையான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

'மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான செயற்திறன்மிக்க, நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கியிருக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன' என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார்.

அதனைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த உமா குமாரன், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைவிதிப்பு மேலும் பரவலாக்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.   நன்றி வீரகேசரி 






பதுளையின் 68% நிலம் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது - தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு 

Published By: Vishnu

24 Dec, 2025 | 08:59 PM

பதுளை மாவட்டத்தில் உள்ள மொத்த நிலத்தில் கிட்டத்தட்ட 68% நிலச்சரிவு அபாயத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கூறுகிறது.

பாதகமான வானிலை காலத்தில் பதுளை மாவட்டத்தில் 368 பெரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்தார்.

இதன் விளைவாக, இதுவரை சுமார் 650 அதிக ஆபத்துள்ள வீட்டு அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.   நன்றி வீரகேசரி 







பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை! 

Published By: Digital Desk 2

24 Dec, 2025 | 04:00 PM

கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) பிற்பகல்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பான வழக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை  (23) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, அர்ச்சுனா மன்றில் ஆஜராக தவறியமையால், நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது. 

பிடியாணை உத்தரவுக்கு அமைய, இராமநாதன் அர்ச்சுனா இன்று கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.  

இதன்போது அவரை பிணையில் விடுவிக்க  கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 






மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்த அழுத்தம் வழங்குங்கள் ; இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல் 

Published By: Vishnu

24 Dec, 2025 | 04:06 AM

(நா.தனுஜா)

வட, கிழக்கு மாகாணங்களில் பேரனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் நடவடிக்கைகளில் தாம் உள்வாங்கப்படவில்லை எனவும், மாகாணசபைகள் இயங்குநிலையில் இருந்திருந்தால், இந்த நிவாரண வழங்கல் செயன்முறைகள் அதனூடாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிடம் கூட்டாக கரிசனையை வெளிப்படுத்தி தமிழ்த்தலைவர்கள், இவ்வனர்த்தத்தைக் காரணங்காட்டி மாகாணசபைத்தேர்தல்களை பிற்போடாமல் விரைந்து நடாத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதுமாத்திரமன்றி 'தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பொதுத்தேர்தல் மூலம் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களையும், நாம் ஆட்சியமைத்திருக்கும் உள்ளுராட்சி மன்றங்களையும் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, 'பிரஜா சக்தி' எனும் பெயரில் ஏதோவொரு திட்டத்தை முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும் அது எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றிய தகவல்கள் எதுவுமில்லை' எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (23) பி.ப 3.00 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்றக்குழுத் தலைவர் சி.சிறிதரன், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றிருந்ததுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டிருந்தார்.

அதன்படி சந்திப்பின் தொடக்கத்தில் 'தித்வா' சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

எனினும் நிவாரண வழங்கல் நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், மாகாணசபைகள் இயங்குநிலையில் இல்லாததன் காரணமாக தாம் அவற்றில் உள்வாங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டனர். 'மாகாணசபைகள் இயங்குநிலையில் இருந்திருந்தால், இந்த நிவாரண வழங்கல் செயன்முறைகள் அதனூடாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பொதுத்தேர்தல் மூலம் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களையும், நாம் ஆட்சியமைத்திருக்கும் உள்ளுராட்சி மன்றங்களையும் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, 'பிரஜா சக்தி' எனும் பெயரில் ஏதோவொரு திட்டத்தை முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும் அது எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றிய தகவல்கள் எதுவுமில்லை' என அவர்கள் கரிசனை வெளியிட்டனர்.

அதேபோன்று தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், 'மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை. நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்' என்று வலியுறுத்தினர்.

அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும், அதற்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக பெயர் எதுவாக இருப்பினும், அர்த்தமுள்ள சமஷ்டி தீர்வு உள்வாங்கப்படுவதற்கும், உச்சபட்ச அதிகாரப்பகிர்வை மேற்கொள்வதற்கும் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் எனவும் ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் இச்சந்திப்பின்போது பலாலி அபிவிருத்தி குறித்து நீண்டநேரம் பேசப்பட்டது. அவ்விமான நிலையத்தை வர்த்தக ரீதியில் வருமானம் ஈட்டும் விமானநிலையமாக மாற்றியமைப்பதற்கு, வெறுமனே ஓடுபாதையை மாத்திரம் அபிவிருத்தி செய்வது போதுமானதன்று எனவும், மாறாக அதனை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். அத்தோடு காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி விவகாரத்தில் அரசாங்கத்துக்கு அவசியமான அழுத்தங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பமாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இச்சந்திப்பின் முடிவில் மாகாணசபைத்தேர்தல்கள் இன்னமும் நடாத்தப்படாமை குறித்தும், அதனை நடாத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியதையும் வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூட்டாகக் கையளிக்கப்பட்டது.   நன்றி வீரகேசரி 







வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் 

Published By: Vishnu

23 Dec, 2025 | 07:16 PM

(இணையத்தள செய்திப் பிரிவு )

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

“டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில்


முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது.

அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார். 


குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இலங்கை தமிழ் அ


ரசியல் தலைவர்கள், டித்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான உடனடி நிவாரணம் முதல் நீண்டகால புனர்வாழ்வு வரை இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். அத்துடன், அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்கு மிக அவசியமானது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி 






No comments: