வெனிசுவெலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா
பங்களாதேஷில் வெடிக்கும் வன்முறை - பிஎன்பி கட்சித் தலைவரின் வீடு தீக்கிரை : ஏழு வயது மகள் படுகொலை
அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்
வெனிசுவெலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா
Published By: Digital Desk 2
22 Dec, 2025 | 01:47 PM
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின்படி, வெனிசுவெலாவில் மற்றொரு எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அமெரிக்க கடலோரக் காவல் படையினர் குறித்த கப்பல் சிறைபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுவெலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகக் குற்றஞ்சாட்டி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்’ என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.
வெனிசுவெலா ஜனாதிபதி மக்துரோவை “போதைப் பொருள் பயங்கரவாதி” என ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், வெனிசுவெலா கடலோரப் பகுதியில் எண்ணெய்க் கப்பல் ஒன்றை அமெரிக்க படை நேற்று முன்தினம் (20) சிறைபிடித்துள்ளது.
வெனிசுவெலா ஜனாதிபதி மதுரோ மீதான அழுத்தத்தை ட்ரம்ப் தொடா்ந்து அதிகரித்துவரும் நிலையில், இரு வாரங்களில் வெனிசுவெலா கடலோரப் பகுதியில் 2ஆவது எண்ணெய்க் கப்பல் இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
பங்களாதேஷில் வெடிக்கும் வன்முறை - பிஎன்பி கட்சித் தலைவரின் வீடு தீக்கிரை : ஏழு வயது மகள் படுகொலை
Published By: Digital Desk 2
21 Dec, 2025 | 02:53 PM
பங்களாதேஷில் பிஎன்பி கட்சித் தலைவரின் வீட்டைப் பூட்டி சில மர்ம நபர்கள் தீ வைத்ததில் கட்சித் தலைவரின் 7வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்தாண்டு பங்களாதேஷில் நடந்த மிகப் பெரிய போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது ஏற்பட்ட மோசமான வன்முறையில் ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டது.
அதன் பிறகு அங்கு இயல்பு நிலை திரும்பவே பல மாதங்களானது.
இந்தச் சூழலில் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
முன்னாள் பிரதமர்
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இளம் அரசியல் தலைவரான ஷெரிப் உஸ்மான் ஹாடி கடந்த வாரம் திடீரெனக் கொலைசெய்யப்பட்டார்.
அவர் அடுத்தாண்டு பங்களாதேஷில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்ததுடன், அதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது மர்ம நபர் ஒருவரால் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் படுகாயமடைந்த உஸ்மான் ஹாடி, மேல்சிகிச்சைக்காகச் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து மீண்டும் பங்களாதேஷில் வன்முறை வெடிக்க ஆரம்பித்தது.
7 வயதுடைய மகள்
இந்த நிலையில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சித் தலைவரின் வீட்டை வெளியில் இருந்து பூட்டி சில மர்ம நபர்கள், தீயிட்டனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் கட்சித் தலைவரின் 7 வயதுடைய மகள் உயிரிழந்ததுடன். மேலும், மூவர் படுகாயமடைந்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று சனிக்கிழமை (20) அதிகாலை இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பபானிகாஞ்ச் ஒன்றியத்தின் பிஎன்பி உதவி அமைப்புச் செயலாளரும் தொழிலதிபருமான பெலால் ஹொசைனின் தாயார் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில். "நான் இரவு உணவு சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்றேன்.
அதிகாலை 1 மணியளவில் விழித்தபோது, எனது வீட்டிற்கு அருகே உள்ள என் மகனின் வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டேன்.
இதையடுத்து அலறிக்கொண்டே வெளியே ஓடி வந்தேன். அவர்களைக் காப்பாற்ற முயன்றேன். இருப்பினும், வீட்டின் இரு கதவுகளும் வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தன.
உள்ளே நுழைய முடியவில்லை. இறுதியில் என் மகன் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.அதன் பிறகு அவனது மனைவி நஸ்மா மற்றும் கைக்குழந்தை வெளியே வந்தனர். அவர்களின் மற்ற மகள்கள் இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரு மகள் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். இருப்பினும், இளைய பேத்தி உயிரிழந்துவிட்டார்" என்றார். நன்றி வீரகேசரி
அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்
Published By: Digital Desk 2
21 Dec, 2025 | 11:46 AM
தாய்வான் எல்லையில் வலம் வரும் போர்கப்பல் மற்றும் போர் விமானங்களினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தாய்வான் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் தீவுதான் தைவான்.
1949இல் சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து தாய்வான் தனிநாடாக
பிரிந்து சென்றது. ஆனாலும் சீனா தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாகவே பார்த்து வருகிறது.
ஆனாலும் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தாய்வான் அதனை மறுத்து வருகிறது.
இவ்வாறான பின்னனியில் தாய்வான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுடியயுள்ளது.
இந்நிலையில் தைவான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் , தாய்வானை சுற்றி சீனாவின் 7 விமானங்களும், 11 கடற்படை கப்பல்களும் ரோந்து வந்ததை உறுதி செய்துள்ளது.
மேலும் அவர்களின் ஆயுதப்படைகள் நிலவரத்தை கண்காணித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வரும் தாய்வான் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த செயலால் கிழக்காசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
சீனா தாய்வானை ஒருபோதும் பிரிக்க முடியாத பகுதி என்று கருதி வருகிறது. எனவே தான் தாய்வானைஅடிக்கடி அச்சுறுத்தி, அதன் சுயாட்சியை மிரட்டுவதற்காக, அடிக்கடி தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது.
இதில் விமானங்கள், போர்க்கப்பல்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சுற்றி வளைப்பதும், அதன் விமான பாதுகாப்பு மண்டலத்தில் ஊடுருவுவதும், போர் ஒத்திகைகள் செய்வதுமாக அந்தப் பகுதியில் எப்போதும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
அதேவேளை, தீவு நாடான தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தாய்வானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதுடன் சீனா படையெடுக்கும் பட்சத்தில் தாய்வானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளமையயும் குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி






No comments:
Post a Comment