நவராத்திரி துதி - அலைமகள் , கலைமகள் , விஜயதசமி வீரதுர்க்கை துதி

 













அலைமகள் துதி 
அருள் புரிவாயே அம்மா இலக்குமி ! 


         மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. ஆஸ்திரேலியா



செல்வம் செல்வம் தேயாச் செல்வம்
தேடித் திரிகிறோம் தெரியவே இல்லை
அனைத்துச் செல்வமாய் ஆகியே இருக்கிறாய் 
அம்மா லக்சுமே அடியினைத் தொழுகிறோம்

நிறைந்த செல்வம் நீயே அம்மா
நினது அருளே அனைத்தும் அம்மா
அலைந்து திரிகிறார் செல்வந் தேடி
அவரின் மனத்தைத் திருத்திடு அம்மா

ஓய்வே இல்லா உழைக்கிறார் அம்மா
உழைத்து உழைத்துக் குவிக்கிறார் அம்மா
அருளை அன்பை மறக்கும் அவரை
திருத்திடு தாயே திருவடி சரணம் 

வாழும் வரைக்கும் செல்வம் வேண்டும்
செல்வம் உன்னருள் பெற்றிட வேண்டும்
திருவருள் நிறைவுடன் செல்வம் சேர்ந்திட
அருள் புரிவாயே அம்மா இலக்குமி 























கலைமகள் துதி 
திருவடி சரணம் கலைகளின் தாயே !


      மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. ஆஸ்திரேலியா


கற்பன யாவும் கற்றிட வேண்டும்
கசடுகள் அகலக் கற்றிட வேண்டும்
கண்ணியம் நிறையக் கற்றிட வேண்டும்
கையணைத் திடுவாய் கலைமகள்த் தாயே

கற்றிடும் தலைமுறை பெருகிட வேண்டும்
கற்றிடும் வகையில் நின்றிட வேண்டும்
கற்றிடும் அனைவரும் கடவுளை எண்ணி
கருமங்கள் ஆற்றிட வைத்திடு தாயே

கல்வியைக் காசாய் ஆக்கிறார் தாயே
கற்றுக் கொடுப்பார் கயவர்கள் ஆகிறார்
கல்விக் கூடங்கள் கண்ணியம் காத்திட
கலைமகள் தாயே கருணையைக் காட்டு 

வற்றிடாக் கல்வியை வழங்கிடு தாயே
மனமதில் மாசினைப் போக்கிடு தாயே
தினமுமே உன்னைத் தொழுகிறோம் தாயே
திருவடி சரணம் கலைகள்த்  தாயே 

வெள்ளைக் கமலம் இருப்பிடம் கொண்டாய்
விரும்பி ஏட்டினைக் கையினிற் பிடித்தாய்
உள்ளம் விரும்பிட படைப்பவன் நாவில்
வெள்ளை உடையுடன் அமர்ந்தாய் சரணம் 

கலைகளின் தாயே சரணம் சரணம்
நிலை குலையாமல் காத்திடு அம்மா
உலகிடை உயர்ந்தோர் போற்றிட அறிவை
தந்திடு சரஸ்வதித் தாயே சரணம் 

























வீரதுர்க்கை துதி 
     விஜய தசமி வெற்றியின் நாளே  !

          மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. ஆஸ்திரேலியா 



வீரமும் விவேகமும் வித்தையும் இணையும்
தாரக மந்திரம் சக்தியே ஆகும்
வளமும் தருவாள் வாழ்வும் தருவாள்
மண்ணும் விண்ணும் நிறைவாள் சக்தி

ஒன்பது நாளும் ஒவ்வொரு படியாய்
உயர்ந்திடும் ராத்திரி நவராத் திரியாகும்
பத்தாம் நாளில் பக்குவம் பெறுவோம்
அத்தினம் சக்தியின் ஆற்றலாய் எழுந்திடும்

வெற்றி என்பது சக்தியே ஆகும்
வீரமும் சக்தியே ஈரமும் சக்தியே
செல்வம் கல்வி அனைத்தும் சக்தியே
அனைத்தும் அமைந்தால் வெற்றியின் விஜயமே

ஆணவம் இருந்தால் அனைத்தும் அழியும்
ஆணவம் என்பதை அழிப்பவள் சக்தியே
ஆணவ அரக்கனை அழித்திடு நாளாய்
அமைவதே விஜய தசமியின் தத்துவம் 

செல்வமும் கல்வியும் வீரமும் நிறைந்தால்
உள்ளே ஆணவம் உருவாகத் தொடங்கும்
ஆணவம் எழுந்தால் அழிவே நிச்சயம்
அதுவே விஜய தசமியின் தத்துவம்

சக்தியால் கிடைக்கும் சக்திகள் யாவும்
சரியான வழியில் பயன்பட வேண்டும்
மற்றவர் அழிவை மனமதில் கொண்டால்
சக்தியால் தண்டனை கிடைத்தே தீரும்

ஒன்பது நாளும் உயர்வுடை நாளே
உள்ளம் உருகி வழிபடல் வேண்டும்
பக்தியின் மயமாய் சக்தியைப் போற்றினால்
வெற்றிகள் நிச்சயம் சக்தியே கொடுப்பாள் 

உள்ளம் உருகினால் உவப்பாள் சக்தி
கள்ளம் நிறைந்தால் கடிவாள் சக்தி
அள்ளி அணைக்கும் சக்தியின் நாளே
வெற்றியாம் விஜய தசமியே ஆகும் 




   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
   மெல்பேண் …. ஆஸ்திரேலியா

No comments: