.
சிவாஜி படங்களில் நாதஸ்வரம் வாசித்துள்ளார், தவில் வாசித்துள்ளார் , சித்தார் மீட்டியுள்ளார் , இப்படி நடித்தவரை பரத நாட்டியம் ஆடுபவராக நடிக்க வைத்து பார்க்க இயக்குநர் பி. மாதவனுக்கு, கதாசிரியர் பாலமுருகனுக்கும் ஏற்பட்ட விபரீத ஆசைதான் பாட்டும் பரதமும் படமாகும். 1975ம் ஆண்டு வெளியான இப் படத்துக்கு ஐம்பது ஆண்டுகளாகி விட்டன.
தனது அருண் பிரசாத் மூவிஸ் நிறுவனம் மூலம் எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய தொடர் வெற்றி படங்களை தயாரித்து இயக்கி வெற்றி கண்ட மாதவன் கலரில் இந்தப் படத்தை தயாரித்தார். அதிலும் சிவாஜிக்கு இரட்டை வேடம் . ஒரு சிவாஜிக்கு ஜெயலலிதா காதலி என்றால், மற்றைய சிவாஜிக்கு ஜெயலலிதா அம்மா!
1967ம் வருடம் எம் ஜி ஆரின் காவல்காரன் படத்தில் ஜெயலலிதா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டி வந்த போது தாய் வேடத்தில் நடித்தால் தன் மகளின் இமேஜ் கெட்டு விடும் என்று ஜெயலலிதாவின் தாயார் சந்தியா மறுத்தார். இதனால் பட முடிவில் அவர் குழந்தைக்கு தாயாவது போல் காட்டி படத்தை முடித்தார் தயாரிப்பாளர் ஆர் எம் வீரப்பன். இப்போது எட்டாண்டுகள் கழித்து சிவாஜிக்கே தாயாக நடித்திருந்தார் ஜெயலலிதா. எல்லாம் காலத்தின் கட்டாயம்!
தொழிலதிபரான ரவி பிஸ்னெசில் பணம் பண்ணுவதைத் தவிர வேறு எதுவும் அறியாதவன். கலைக்கும் அவனுக்கும் வெகு தூரம். பரதத்தில் தேர்ச்சி பெற்ற லலிதா அவனின் அறியாமையை ஏளனமாக பேசி விட ஆத்திரப்படாமல் அவளையே காதலிக்கத் தொடங்கி விடுகிறான். லலிதாவும் அவனை காதலிக்கிறாள். அவளின் தந்தையோ தன் மகளை ஒரு கலைஞனுக்கே மணம் செய்து கொடுப்பேன் என்று தீர்மானமாக சொல்லி விட , ரவி எல்லா வேலைகளையும் ஒதுக்கி விட்டு பரதம் பயிலுகிறான். அது மட்டுமின்றி பரத நாட்டிய போட்டியில் ஆடி லலிதாவையே வெற்றியும் கண்டு விடுகிறான். லலிதாவின் தந்தை வேறு வழியின்றி கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்கிறார். ஆனால் இப்போது எதிர்ப்பு ரவியின் தந்தை மூலம் வருகிறது. அவரின் சதியால் காதலர்கள் பிரிகிறார்கள். இதற்கு இடையில் லலிதா தாயாகிறாள். லலிதாவத் தேடி ரவி அலைகிறான். ஆண்டுகள் கடந்து பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே மீதிப் படம்.
இந்தப் படத்தின் கதை வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். சிவாஜியை நடன கலைஞராக காட்ட அவர் எடுத்த முயற்சி படத்தையே ஆட வைத்து விட்டது. ஆனாலும் தனது நடிப்பினால், முக பாவத்தால் ரசிகர்களை கவருகிறார் சிவாஜி. படத்தில் சிவாஜிக்கு இரட்டை வேடம். ஒன்றில் பரதம் ஆடுகிறார், மற்றையது டிஸ்கோ. ஜெயலலிதா ஆடுகிறார், பாடுகிறார் , உணர்ச்சிகரமாக நடிக்கிறார். வித விதமான நடன காட்சிகளில் சோபிக்கிறார். ஆனாலும் சிவாஜிக்கு அம்மாவாக அவரை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்!ஆர் .எஸ் .மனோகர் கண்டிப்பான தந்தை , நடன வித்துவான். அவருக்கு சளைக்காத கண்டிப்பான அப்பா சுந்தரராஜன். அப்பப்பா!
75ம் ஆண்டுகளில் சிவாஜி படம் என்றால் எம் ஆர் ஆர் வாசுதான் காமெடி என்றாகி விட்டது. இதிலும் அவர்தான் . ஆனாலும் யார் காமெடி என்றாலும் ஜோடி மனோரமாத்தான். இதில் ரெகார்ட் டான்ஸ் வேறு ஆடுகிறார் அவர். விஜயகுமார் அழகாக காட்சி தருகிறார். பக்கோடா காதர் நடிப்பு பிரமாதம். இவர்களுடன் ஸ்ரீப்ரியா , சுகுமாரி, சாமிக்கண்ணு, வீரராகவன், ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்தின் பாடல்களை கண்ணதாசன் புனைய , எம் எஸ் விசுவநாதன் இசையமைத்தார். சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான் , தெய்வத்தின் தேர் எடுத்து தேவியை தேடு பாடல்கள் கருத்தோடு அமைந்தன. நடனம் சம்பந்தப்பட்ட படம் என்பதால் கோபி கிருஷ்ணா, பி. எஸ் கோபாலகிருஷ்ணன், சலீம் என்று மூன்று நடன ஆசிரியர்கள் . மூவரும் குறை சொல்ல முடியா வண்ணம் நடனங்களை அமைத்திருந்தார்கள்.
படத்தை பி. என் . சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார். தொடர்ந்து சிவாஜிக்கு வெற்றிப் படங்களையே கொடுத்துக் கொண்டிருந்த மாதவன் இம் முறை தனது சொந்த கலர் படத்தில் அடி வாங்கினார். மூன்று கருப்பு வெள்ளைப் படங்களான எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா தந்த அபரிதமான வெற்றியை கலர் படமான படும் பரதமும் தர தவறி விட்டது. இந்தப் படத்துக்கு பிறகு அவர் சிவாஜி நடிப்பில் எந்தப் படத்தையும் தயாரிக்கவும் இல்லை.
No comments:
Post a Comment