.
ஜனாதிபதி நாளை அமெரிக்காவிற்கு விஜயம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண்களை விமான பணிப்பெண்களைப் போன்ற சீருடையில் பணியமர்த்த நடவடிக்கை
கொழும்பு - புறக்கோட்டை தீ விபத்து ; விசாரணை செய்ய குழு நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை திங்கட்கிழமை (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்பார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொள்வார்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண்களை விமான பணிப்பெண்களைப் போன்ற சீருடையில் பணியமர்த்த நடவடிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துநர்களாக பெண்களையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
அந்தவகையில், அவர்களுக்கு விமானப் பணிப்பெண்களின் சீருடைக்கு போன்ற சீருடை வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை பணியமர்த்துவதற்கான நேர்காணல்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் பெண் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப கட்டத்தில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பஸ்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கொழும்பு - புறக்கோட்டை தீ விபத்து ; விசாரணை செய்ய குழு நியமனம்
கொழும்பு, புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள மின்சாதனப் பொருட்கள் கடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் விசாரணை செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவிற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், சட்டதரணி சுனில் வட்டகல தலைமை வகிக்கிறார்.
சனிக்கிழமை மதியம் பற்றிய தீ சுமார் 12 மணி நேரம் நீடித்த நிலையில், பாரிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கொழும்பு நகராட்சி மன்ற தீயணைப்புத் திணைக்களத்தின் தீயணைப்புப் பிரிவுகள், இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த பணியார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருந்தனர்.
அருகிலுள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்க சுமார் 15 தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் விமானப்படை பெல்-212 ஹெலிகொப்டர் தீயணைப்பு நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன.
No comments:
Post a Comment