பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

 












 
    







மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண்  … ஆஸ்திரேலியா



பாரதி வந்தார் பற்பல பாடினார்
பண்டிதர் ஒதுக்கினார் பாமரர் ஏந்தினார்
காரிருள் போக்கிடும் கதிரவன் ஆகினார்
கன்னித் தமிழின் காவலன் ஆனார்

பாட்டில் புதுமை பதத்தில் புதுமை
ஊட்டியே கவிதை உவப்பாய் அளித்தார் 
நாட்டை நினைத்து நல்லன மொழிந்தார்
நாடே அவரின் உயிராய் இருந்தது

பாரதி காலம் கவிமணி இருந்தார்
நாமக் கல்லின் நற்கவி இருந்தார் 
எட்டய புரத்து பாரதி மூச்சை
சுப்பு ரத்தினமே சுவாசித்து நின்றார்

நாமக் கல்லார் நற்கவி ஆவார்
கவிமணி தமிழின் கற்கண் டாவார்
பரதி தாசனாய் வந்தார் ஒருவர்
அதுவே அவரின் ஆசியே ஆகும் 

சுப்பு ரத்தினம் எழுந்தார் தாசனாய்
சுப்பிர மணிய பாரதி வாழ்த்தினார் 
வாழ்த்திய வாழ்த்து வளர்ந்தே வந்தது
மாநிலம் பாரதி தாசனைப் பெற்றது

அன்னிய ஆட்சியில் பாரதி வாழ்ந்தார்
அடிமை என்பது அனலாய் கொதித்தது
அனலை அகற்றப் பாரதி பாடினார்
அடிமைக் கெதிராய் படைப்புகள் ஈந்தார்

பாரதி தாசனின் காலமோ வேறு
அடிமை அகன்று சுதந்திரம் மலர்ந்தது
தமிழே ஆட்சி தமிழே தலைமை
அதனால் தமிழை அமுதம் என்றார் 

பாரதி தமிழை தேனாய் ஆக்கினார்
அவரின் தாசனோ உயிராய் ஆக்கினார்
பரதி வழியில் பயணந் தொடரினும்
அவரின் சிந்தனை புதிதாய் மிளிர்ந்தது

கல்வியை இருவரும் கண்ணே என்றனர்
பெண்ணின் கல்வியை பெரிதாய் எண்ணினர்
குருவின் கருவை மனத்தில் கொளினும்
அவரின் சிந்தனை அகன்றே நின்றது

பாரதி உள்ளம் புதுமைகள் இருந்தும் 
பக்தியை பாரதி பக்குவம் என்றார்
பாரதி தாசனோ பக்தியைப் பாரா
புரட்சிக் கவியாய் ஊர்வலம் வந்தார் 

பாரதி பாடல்கள் திரைக்கு வந்தன
பாரதி தாசனே திரைக்குள் நுழைந்தார்
நாடகம் எழுதினார் நடிக்கவும் செய்தார்
நாட்டுப் பாடலை நயமுடன் அணைத்தார்

புரட்சிக் கவிஞராய் இருவரும் எழுந்தார்
புதுமைகள் புகுத்தி கவிஞராய் ஒளிர்ந்தார்
பாரதி வாழ்த்திய கவிஞராய் அமைந்தார்
பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் 

No comments: