நேர்வழியில் வாழ்வாய் – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சி மண்டிலம்)

தன்னலம் மட்டுமே சரியென

உன்னை உயர்த்திட ஒதுங்கினால்

என்றுமே வெற்றிதான் இல்லையென்றே

நன்றாய் நெஞ்சினில் நாட்டுவாய்!        (1)

 

செய்யும் தொழிலைச் செம்மையாய்

செய்து வாழ்தலே சிறப்பாம்,

பொய்யை அதிலே புகுத்தினாலே

எய்தும் வெற்றிதான் இல்லையே!   (2)

 

உன்வழி நேர்வழி ஒன்றுதான்

என்றே வாழ்தலில் இன்பமே!

இன்றே அவ்வழி ஏற்றிடுவாய்

நன்றே வாழ்வாய் நாளுமே!        (3)

No comments: