உலகச் செய்திகள்

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க தயார் - உக்ரைன் ஜனாதிபதியிடம் டிரம்ப்

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள் - பிள்ளைகளின் உடல்களை சுமந்தபடி மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்" - காசாவில் மீண்டும் பெரும் அவலம்

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது குறித்து ஆராய்கின்றார் டிரம்ப்

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ - உலகின் மிகவும் மும்முரமான ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது.

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை பலவந்தமாக அகற்றிய பொலிஸார் - கூடாரங்கள் இடித்தழிப்பு

 பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் : உடல்நிலை நிலை எவ்வாறு உள்ளது..? 



உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க தயார் - உக்ரைன் ஜனாதிபதியிடம் டிரம்ப் 

Published By: Rajeeban

20 Mar, 2025 | 11:26 AM
image

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஒரு மணிநேரம் நல்லதொரு தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக தளமான ட்ருத் சோசியலில் இது குறித்து எழுதியுள்ள டிரம்ப் ரஸ்யாவையும் உக்ரைனையும் அவர் அவர் கோரிக்கைகள் தேவைகளின் அடிப்படையில் இணைப்பதை நோக்கமாக கொண்டது இந்த பேச்சுவார்த்தை என தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த முயற்சிகள் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் விரிவான அறிக்கையொன்றை விடுத்துள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ உக்ரைன் மேலதிக வான்பாதுகாப்பு பொறிமுறைகளை பெறுவதற்கு உதவுவதாக டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார் என குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக ஐரோப்பாவிடமிருந்து  .

உக்ரைனின் மின்விநியோகம் அணுஉலைகள் குறித்து ரஸ்ய உக்ரைன் தலைவர்கள் விவாதித்தனர் என குறிப்பிட்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர், அமெரிக்காவிடம் மின்சாரம் மற்றும் பயன்பாட்டு நிபுணத்துவம் உள்ளதால்  உக்ரைனின் மின்விநியோகத்தினை நிர்வகிப்பதில் அமெரிக்கா உதவக்கூடும் என டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

மின்நிலையங்கள் அணுஉலைகள் அமெரிக்காவின் உரிமையானால்,அது அந்த உட்கட்டமைப்பிற்கு சிறந்த பாதுகாப்பாக அமையும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

மின்நிலையங்கள் குறித்து பேசப்பட்டது ஆனால் ஜபோரிஜியாவில் உள்ள அணுஉலை குறித்தே பேசப்பட்டது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதியுடனான இந்த உரையாடல் பெரும் நிம்மதியாக அமையும்.

டிரம்புடன் ,உரையாடல் நேர்மறையானது,வெளிப்படையானது, குறிப்பிடத்தக்கது என உக்ரைன் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 




தலைக்கு மேலே 16 போர் விமானங்கள் - பிள்ளைகளின் உடல்களை சுமந்தபடி மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்" - காசாவில் மீண்டும் பெரும் அவலம் 

Published By: Rajeeban

18 Mar, 2025 | 05:06 PM
image

காசா மீது மீண்டும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை அந்த பயங்கரமான தருணங்களை காசா மக்கள்  ஊடகங்களிற்கு விபரித்துள்ளனர்

16 விமானங்கள் தலைக்கு மேலே காணப்பட்டன, பலர் தங்கள் குழந்தைகளின் உடல்களை தூக்கியவாறு மருத்துவமனைக்கு வந்தனர் என ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் காசாவின் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் சத்தத்தை கேட்டு  அச்சத்துடன் கண்விழித்தோம் என ஆசிரியர் அகமட் அல் ரிஸ்க் அல் ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

குண்டுவீச்சின் ஆரம்ப தருணங்களை பகிர்ந்துகொண்டுள்ள அவர் நாங்கள் அஞ்சிநடுங்கினோம் எங்கள் பிள்ளைகளும் அஞ்சி நடுங்கின பல உறவுகள் எங்களின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக எங்களை தொடர்புகொண்டார்கள், அம்புலன்ஸ்கள் ஒரு வீதியிலிருந்து மற்றைய வீதிக்கு ஒடத்தொடங்கின என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளின் உடல்களை கையில் சுமந்தபடி குடும்பங்கள் மருத்துவமனைக்கு வரத்தொடங்கின என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் தலைக்கு மேலே 16 போர்விமானங்களும் ஆளில்லா விமானங்களும் காணப்பட்டன  நாங்கள் பெரும் அச்சத்தில் சிக்குண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

காசா மருத்துவமனைகள் முற்றாக செயல் இழந்து காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே காசாவின் சுகாதார கட்டமைப்பு முற்றாக  சிதைவடைந்துள்ள நிலையிலேயே இந்த தொடர்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்

ஐந்து செகன்டிற்கு ஒரு வெடிப்பு சத்தம் கேட்பதாக ஐநாவின் பணியாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

யுனிசெவ் அமைப்பின் பேச்சாளர் ரொசாலியா பொலொன் தென்காசாவின் அல்மவாசியில் உள்ளார்.

இது அனைவருக்கும் மிகவும் கடினமான இரவு என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

பாரிய வெடிப்பு சத்தங்கள் காரணமாக நான் கண்விழித்தேன்,நான் தங்கயிருந்த வீடு குலுங்கியது,அடுத்த 15 நிமிடங்கள் நாங்கள் ஒவ்வொரு ஐந்து செகன்டிற்கும் ஒரு வெடிப்புச்சத்தங்கள் என்ற அடிப்படையில் வெடிப்பு சத்தங்களை கேட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளியே அலறல்களையும் அம்புலன்ஸ் சைரன்ஸ்களையும் கேட்டதாக தெரிவித்துள்ள அவர் தலைக்கு மேலே விமானங்களின் இரைச்சல் கேட்டது என தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான பொருட்கள்,எரிபொருட்கள் சமையல் எரிவாயு போன்றவற்றின் விநியோகத்தினை நிறுத்தி மின்சார விநியோகத்தினை நிறுத்திய பின்னரே இந்த தாக்குதல்கள்இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

15 மாதங்களிற்கு முன்னரே சுகாதாரசேவையை முற்றாக அழித்துவிட்டனர் என தெரிவித்துள்ள  அவர்நான் பேசிய சிறுவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர் அதிர்ச்சியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

காசாவில் பணிபுரியும் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் இஸ்ரேல் மீண்டும் வான் வழித்தாக்குதலை மேற்கொண்டவேளை தான் பார்த்த முழுமையான படுகொலை மற்றும் அழிவு குறித்து ஸ்கை நியுசிற்கு தெரிவித்துள்ளார்.

டெய்ர் அல் பலாவில் உள்ள நாசர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பெரோஸ் சித்வா இஸ்ரேலின் புதிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நான் ஆறு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டேன், இவர்களில் சிலர் ஆறுவயதிற்கு உட்பட்ட குழந்தைகள் துரதிஸ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிரிழக்கப்போகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது பேரழிவு , கூடாரங்கள்மீதுகுண்டுகளை வீசினால் இதுவே நடக்கும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தாலும் அமெரிக்காவின் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிடும்,மரதன் குண்டுவெடிப்பின் போது நான் அங்கிருந்தேன் அங்கு பெரும் குழப்பம் நிலவியது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அன்று பார்த்தது காசாவில் இன்று நான் பார்த்தன் சிறிய அளவே என அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது குறித்து ஆராய்கின்றார் டிரம்ப் 

18 Mar, 2025 | 02:22 PM
image

ரஸ்யாஉக்ரைன் யுத்தநிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக ரஸ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியாவை 

 ரஸ்யாவின்  ஒரு பகுதியாக அங்கீகரிப்பது குறித்து   அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆராய்ந்து வருகின்றார்.

அமெரிக்க ஜனாதிபதியும் ரஸ்ய ஜனாதிபதியும் 30 நாள் யுத்த நிறுத்தம் குறித்து தொலைபேசி மூலம் பேச்சுகளில் ஈடுபடுபடவிருந்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களிற்கு முன்னர் விமானத்தில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் டிரம்ப் பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சொத்துக்களை பிரிப்பது குறித்து ஏற்கனவே பேசியுள்ளனர்,நான் காணி மற்றும் வலுசக்தி திட்டங்கள் குறித்து புட்டினினுடன் பேசுவேன் என குறிப்பிட்டிருந்தார்.

2014 பெப்ரவரியில் கிரிமியாவை ரஸ்யா ஆக்கிரமித்தது.

எனினும் அது தனது பகுதி என ரஸ்யா தெரிவிப்பதை உலகஒழுங்கு நிராகரித்துள்ளது.

யுத்த நிறுத்த முயற்சிகள் வெற்றியடையவேண்டும் என்றால் உக்ரைன் தனது பகுதிகள் சிலவற்றை விட்டுக்கொடுப்பது உட்பட விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராகயிருக்கவேண்டும் என அமெரிக்க அதிகாரிகள்  ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 






அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ - உலகின் மிகவும் மும்முரமான ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது. 

21 Mar, 2025 | 01:03 PM
image

லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில்  ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

உலகின் மிக மும்முரமான விமானநிலையமாக வர்ணிக்கப்படும் ஹீத்ரோ விமானநிலையம்; அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் விமானநிலையம் மீண்டும் திறக்கப்படும் வரை எந்த காரணம் கொண்டும் பயணிகளை அங்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேற்கு லண்டனில் உள்ள விமானநிலையத்தில் இன்று மாத்திரம் 1351 விமானங்களின் பயணம் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெய்ஸ் என்ற பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் மூண்ட தீ காரணமாக 16300 வீடுகளிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்  150 பேர் வரை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டதை தொடர்ந்து தாங்கள் திருப்பி அனுப்பப்பட்ட அனுபவத்தை பல பயணிகள் பகிர்ந்துவருகின்றனர்.

அமெரிக்காவிலிருந்து லண்டனிற்கு சென்ற டெல்டா எயர்லைன்ஸ் விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாக கிம் மிக்கெல் ஸ்கிபிரெக் தெரிவித்துள்ளார்.

லண்டன் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஹீத்ரோ செல்லும் விமானம் மினியோபொலிஸிற்கு செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என விமானபணியாளர்கள் அறிவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானம் மூன்று மணிநேர பயணத்தின் பின்னர் மீண்டும் திரும்புகின்றது என அறிவிக்கப்பட்டவேளை மக்கள் தங்கள் ஆதங்களை வெளியிட்டனர் ஆனால் தற்போது அனைவரும் அமைதியாகவுள்ளனர் அவர்கள் விமானத்திற்கு பிரச்சினையில்லை  என தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.    நன்றி வீரகேசரி 





இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை பலவந்தமாக அகற்றிய பொலிஸார் - கூடாரங்கள் இடித்தழிப்பு 

20 Mar, 2025 | 12:39 PM
image

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஓராண்டுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் குண்டுகட்டாக கைது செய்த போலீசார் விவசாயிகளின் போராட்ட மேடை கூடாரங்களை இடித்து அகற்றினர்.

பஞ்சாபில் போராடி வந்த விவசாயிகள் அமைத்த முகாம்களை போலீசார் இடித்து அகற்றி உள்ளனர். பஞ்சாபில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வந்த ஏராளமான விவசாயிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஇபஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து போராட்டட்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்சர்வான் சிங் பாந்தர் மற்றும் ஜக்ஜித் சிங் தல்லேவால் உள்ளிட்ட பல விவசாயத் தலைவர்கள் புதன்கிழமை இரவு  ஷம்பு மற்றும் கானௌரி போராட்ட இடங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களை மொஹாலியில் பஞ்சாப் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். ஷம்பு எல்லைப் போராட்ட இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது பஞ்சாப் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலால் விவசாயிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று திடீரென போலீசார் விவசாயிகளை அப்புறப்படுத்தி கூடாரங்களையும் அகற்றினர். விவசாயிகளின் போராட்ட மேடையையும் போலீசார் அகற்றியதால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மத்திய வேளாண் அமைச்சர் உட்பட மத்தியக் குழுவுடன் விவசாயிகள் குழு ஒரு சந்திப்பை நடத்தியதை தொடர்ந்து இந்த மோதல் வெடித்துள்ளது. சந்திப்பை தொடர்ந்து கானௌரி மற்றும் ஷம்பு எல்லைப் பகுதிகளுக்கு விவசாய தலைவர்கள் சென்று கொண்டிருந்தபோது காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.  பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கூடாரங்களையும் பஞ்சாப் காவல்துறை இடித்தது. ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் புள்ளிகளுக்கு அருகிலும் பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பந்தேர் மற்றும் டல்லேவால் தவிர அபிமன்யு கோஹர்இ காகா சிங் கோத்ரா மற்றும் மஞ்சித் சிங் ராய் ஆகியோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று விவசாயத் தலைவர் மங்கத் தெரிவித்தார்.

கானௌரி போராட்டக் களத்தில் இருந்த ஒரு விவசாயி, போலீசார் வந்தபோது சுமார் 500 பேர் அங்கு இருந்ததாக  இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார் . "மார்ச் 21 அன்று புதிய விவசாயிகள் குழு வரவிருந்ததால் கூட்டம் குறைவாக இருந்தது" என்று அவர் கூறினார் இணைய வசதிகள் தடைசெய்யப்பட்டுள்ளன மேலும் தளங்களிலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

காவல்துறை விளக்கம்:

சம்பவம் தொடர்பாக பாட்டியாலா டிஐஜி மன்தீப் சிங் கூறுகையில் "சம்பு எல்லையில் விவசாயிகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர். இன்று,  நீதிபதிகள் முன்னிலையில் அவர்களுக்கு முறையான எச்சரிக்கை வழங்கப்பட்ட பின்னர் போலீசார் அந்த பகுதியை அகற்றினர். ஒரு சிலர் வீட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். எனவே அவர்கள் ஒரு பேருந்தில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். கூடுதலாக இங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் வாகனங்கள் மாற்றப்படுகின்றன. முழு சாலையும் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்படும். ஹரியானா காவல்துறையும் தங்கள் நடவடிக்கையைத் தொடங்கும். எந்த எதிர்ப்பும் இல்லாததால் நாங்கள் எந்த பலத்தையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. விவசாயிகள் நன்றாக ஒத்துழைத்தனர் அவர்கள் தாங்களாகவே பேருந்துகளில் அமர்ந்தனர்" என தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் : உடல்நிலை நிலை எவ்வாறு உள்ளது..? 

Published By: Digital Desk 3

19 Mar, 2025 | 10:57 AM
image

விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர் (62), இன்று புதன்கிழமை அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.

பரசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் 4 பேரும் உற்சாகத்துடன் கையசைத்தனர். தற்போது அவர்களால் நடக்க முடியவில்லை என்றாலும், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் மிகவும் ஆரோக்கியமாக உள்ளனர் என்று இருவரையும் பரிசோதித்த பின் நாசா அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி இருவரின் உடலும் புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப ஒத்துழைக்க தொடங்கி உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்வெளி மையத்தில் இருந்தபோது அவர்களின் உடல் எடையற்றதைப் போன்று இருந்திருக்கும். அதனால் தசை உள்ளிட்ட உறுப்புகள் புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப சீராக செயல்பட நேரம் பிடிக்கும் என்று நாசா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 286 நாட்கள் விண்வெளியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.   நன்றி வீரகேசரி 



No comments: