நேற்று இன்று நாளை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 திரைப் படங்களில் வில்லன் கதாநாயகனை துன்புறுத்துவான்,


பலவித சிரமங்களை ஏற்படுத்துவான் , கொடுமைக்கு மேல் கொடுமைப படுத்துவான். இறுதியில்தான் கதாநாயகன் போராடி வில்லனை வெற்றி கொள்வான். ஆனால் நிஜ வாழ்வில் கதாநாயகன் வில்லனை கஷ்டப்படுத்தி, சீரழித்து , வெறுத்துப் போக வைத்து இறுதியில் பிழைத்துப் போ என்று விமோசனம் அளித்த சம்பவம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்றது. அதற்கு காரணமாக அமைந்த படம்தான் நேற்று இன்று நாளை.

தமிழ் சினிமாவில்பிரபல வில்லன் நடிகராகவும், குணச்சித்திர

நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ் ஏ அசோகன். பி ஏ பட்டதாரியான இவர் எல்லாத் தயாரிப்பாளர்களினாலும் விரும்பப்படும் ஒருவராக திகழ்ந்தார். அதே போல் எம் ஜி ஆரின் அன்புக்கும் உரிய ஒருவராக விளங்கினார். இதன் காரணமாக எம் ஜி ஆரின் பெரும்பாலான படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதைத் தவிர ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன் ஆகியோரின் பல படங்களிலும் இவர் நடித்து வந்தார். ஒரு சில சிவாஜி படங்களிலும் அசோகன் நடித்து , அவரின் நடிப்பு சிலாகித்து பேசப்பட்டது. பழகுவதற்கு இனியவராகவும், பிறருக்கு உதவுபவராகவுமே எல்லோரும் அவரை அடையாளம் கண்டிருந்தனர்.
 

இந்த அசோகனுக்கு போதாதா வேலையோ என்னவோ சொந்தமாக படம் தயாரிக்கும் ஆசை வந்தது. அதுவும் எம் ஜி ஆர் நடிப்பில் படம் தயாரிக்கும் எண்ணம் ஏற்படவே அதற்கமைய நேற்று இன்று நாளை படத் தயாரிப்பு ஆரம்பமானது. படத் தயாரிப்பு தொடங்கிய போது எம் ஜி ஆர் தி மு கவில் இருந்தார். அசோகனுக்கும் தி மு க ஆதாரவாளராகவும், கருணாநிதியின் அபிமானியாகவும் விளங்கினார். இதன் காரணமாக சிக்கலின்றி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது .

ஆனால் 1972ம் வருடம் அக்டோபர் மாதம் எம் ஜி ஆர் தி மு காவில்

இருந்து வெளியேற்றப் பட்டதும் நிலைமை தலை கீழாக மாறியது. அ தி மு க என்ற புதிய கட்சி தொடங்கியதில் ஏற்பட்ட பணி அழுத்தம், கருணாநிதியின் தரப்பில் இருந்து தொடர்ந்து ஏவப்பட்ட தாக்குதல்கள், ஏனைய படங்களுக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்களை அணுசரிக்க வேண்டிய நிர்பந்தம், சொந்தப் படமான உலகம் சுற்றும் வாலிபன் வெளியீட்டில் ஏற்பட்ட காலதாமதம் என்பன காரணமாக அசோகனின் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்கியது. இதன் காரணமாக கடன் சுமை ஏறவே அசோகன் உணர்ச்சி வசப்பட்டு எம் ஜி ஆருக்கு எதிராக சில வார்த்தைகளை சொல்லி விட அவை எம் ஜி ஆரை உஷ்ணப்படுத்தி விட்டது. இதன் காரணமாக எம் ஜி ஆர் , அசோகன் உறவில் விரிசல் விழத் தொடங்கியது. எம்ஜி ஆர் படத்தில் நடிக்க கால் ஷீட் கொடுப்பதை தவிர்த்துக் கொண்டார். நேற்று இன்று நாளைக்கு கொடுத்த திகதிகள் எல்லாம் புதிதாக தன்னிடம் அடைக்கலமாக வந்த இயக்குனர் ஸ்ரீதர், இதயம் பேசுகிறது மணியன் போன்றவர்களின் படங்களுக்கு கொடுக்கப்பட்டன. அதன் பின் இறுதியில் எம் ஜி ஆரே மனம் இரங்கி ஒரு வழியாக படத்தை முடித்து கொடுக்க மூன்று ஆண்டுகள் கழித்தே படம் திரைக்கு வந்தது!


சதிகாரர்களால் சிறு குழந்தையாக இருக்கும் போது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படும் மாணிக்கம் , நண்பனுக்கு உதவப் போய் சிறை சென்று திரும்புகிறான். அவனுக்கு சேரியை சுத்தரிக்கும் வேலை கிடைக்கிறது. அதனை செய்து மக்களின் அபிமானத்தைப் பெரும் அவன் ஆப்பக்கார அன்னம்மாவின் காதலுக்கும் வசமாகிறான். இதற்கிடையில் மாணிக்கத்தின் தாயை கொன்று அவனை அனாதரவாக்கிய நல்லசிவம், தயாளன் இருவருக்கும் உதவும் நிலைக்கும் உள்ளாகிறான். தயாளனின் மகள் நடிகை சுமதி அவனை காதலிக்கிறாள். சித்தப்பிரமைக்கு உள்ளான நல்லசிவத்தின் மகள் அமுதாவை குணப்படுத்தும் பொறுப்பும் அவனை சேர்கிறது. இதே காலகட்டத்தில் நல்லசிவம், தயாளன் இருவரின் சுயரூபமும் மாணிக்கத்துக்கு தெரிய வருகிறது. அவர்களை மாணிக்கம் பழி வாங்கினானா, அல்லது பெருந்தன்மையுடன் உதவினானா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் கதையை நெல்லை வெங்கடாசலம் எழுத, வசனங்களை

சொர்ணம் எழுதினார். கருணாநிதியின் நெருங்கிய உறவினரான சொர்ணம் , கருணாநிதியை கிண்டல் செய்வது போல் பல இடங்களில் வசங்களை எழுதி இருந்தார். அது மட்டுமன்றி எம் ஜி ஆரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய அவருக்கு இதுவே எம் ஜி ஆருடனான கடைசி படமானது. படத்தின் ஒளிப்பதிவை ஆரம்பத்தில் கருணாநிதியின் உறவினரான அமிர்தம் கையாண்டு, பின்னர் அவர் படத்தில் இருந்து கழற்றப்பட்டு ஏ. சண்முகம் மீதி படத்தி்ன் ஒளிப்பதிவை கவனித்துக் கொண்டார்.
 
படத்தில் எம் ஜி ஆருக்கு மூன்று ஜோடிகள். மஞ்சுளா, லதா, ராஜஸ்ரீ, மூவரில் ஆப்பக்கார அன்னம்மாவாக வரும் மஞ்சுளாவின் நடிப்பும் , பேசும் பாணியும் ஜோர். பாடல் காட்சிகளில் மஞ்சுளாவும், லதாவும் எம் ஜி ஆருடன் நெருங்கி நடித்திருந்தனர். இவர்களுடன் வி கே ராமசாமி, தேங்காய் சீனிவாசன், நம்பியார், காந்திமதி, எம் ஜி சக்ரபாணி,ஐசரிவேலன், வி. கோபாலகிருஷ்ணன் , பேபி இந்திரா, ஆகியோரும் நடித்தனர். படத்தை தயாரித்த அசோகனும் வில்லனாக வந்து எம் ஜி ஆருடன் ஒரு சண்டைக் காட்சியில் மோதுகிறார்.
 
படத்துக்கு இசை எம் எஸ் விசுவநாதன். பாடல்கள் எல்லாமே சூப்பர். சுரதாவின் நெருங்கி நெருங்கி பழகும் போது, புதுமைப்பித்தனின் பாடும் போது நான் தென்றல் காற்று, நீ என்னனென்ன சொன்னாலும் கவிதை, அவினாசிமணியின் அங்கே வருவது யாரோ,கண்ணதாசனின் இன்னொரு வானம் , இவற்றோடு வாலியின் நான் படித்தே காஞ்சியிலே நேற்று ஆகிய பாடல்கள் இன்றும் பிரபலமாக உள்ளன.
படத்தை ப . நீலகண்டன்எம் ஜி ஆரின் மனம் அறிந்து இயக்கியிருந்தார். நேற்று நல்ல மனதோடு தொடங்கி, இன்று இழுபட்டு, நாளை திரைக்கு வந்த படம் எம் ஜி ஆர், அசோகன் உறவில் நிரந்தர விரிசலை உருவாக்கிய போதிலும் ரசிகர்களை ஆதரவை பெற்றுக் கொண்டது!

1982ம் ஆண்டு அக்டோபர் பத்தொன்பதாம் திகதி காலமான அசோகனின் 42வது நினைவு தினம் இவ்வாண்டாகும்!

No comments: