பாராளுமன்றத் தேர்தலில் இருந்து ஒதுங்கிய அரசியல் பிரபலங்கள்!

 October 14, 2024 6:00 am 

சுதந்திர இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. ஒரு கோடி 70 இலட்சத்துக்கும் மேற்பட்டட மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றனர். அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களுமாக 690 வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 8,388 பேர் இத்தேர்லில் அபேட்சகர்களாகக் களம் இறங்கியுள்ளனர்.

இது வரலாற்று முக்கியத்துவம்மிக்க தேர்தலாக அமையுமென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனெனில் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெறாத பல நிகழ்வுகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.

இந்நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது. அத்தேர்தலில் 39 பேர் அபேட்சகர்களாகப் போட்டியிட்டனர். அவர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களில் ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டு பாராளுமன்ற அரசியலில் 45 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர். அவர் ஐந்து தடவைகள் பிரதமராகப் பதவி வகித்துள்ளதோடு அமைச்சு பதவிகள் பலவற்றையும் வகித்திருக்கிறார். அதேநேரம் எதிர்க்கட்சி தலைவராகவும் பல வருடங்கள் இருந்துள்ள அவர், நாட்டின் ஜனாதிபதி பதவியையும் இறுதியாக வகித்துள்ளார்.

அதேநேரம் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக மாத்திரமல்லாமல், ஏற்கனவே அமைச்சுப் பதவியையும், பிரதியமைச்சர் பதவியையும் வகித்துள்ளார். பாராளுமன்ற அரசியலில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள இவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆவார்.

நாமல் ராஜபக்‌ஷ ஏற்கனவே அமைச்சராகப் பதவி வகித்துள்ளதோடு, ஒரு தசாப்தத்திற்கும் மேற்பட்ட பாராளுமன்ற அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ளார். அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகனான இவர், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவருமாவார்.

இவ்வாறு பரந்த பாராளுமன்ற அரசியல் அனுபவத்தைக் கொண்டிருந்த அரசியல் ஜாம்பவான்கள் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் அநுர குமார திசாநாயக்க போட்டியிட்டார். அவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற அரசியல் அனுபவத்தை கொண்டிருந்ததோடு, ஒரு வருடம் அமைச்சுப் பதவியையும் சில வருடங்கள் எதிர்க்கட்சி பிரதம கொரடா பதவியையும் வகித்துள்ளார். கடந்த 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 4 இலட்சத்து 18 ஆயிரத்து 553 வாக்குகளை, அதாவது அளிக்கப்பட்ட வாக்குகளில் 3.16 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த கட்சியொன்றின் தலைவர், ‘எமது அபேட்சகர் சஜித் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 55 இலட்சம் வாக்குகள் பெற்றவர். அவர் அதிலிருந்து மேல்நோக்கிச் சென்று அமோக வெற்றிபெறுவார்’ என்று கூறியிருந்தார்.

ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது அவர், “3 வீத வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசாநாயக்கவினால் 55 இலட்சம் வாக்குகளைப் பெறுவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத காரியம்’ என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்தார்.

அதேபோன்று சஜித் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் எனக் கருதி சில அரசியல் கட்சிகளும் குழுக்களும் அவருக்கு ஆதரவு நல்கின.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே மக்களில் பெரும்பாலானவர்கள் ஒருபுறமும் கட்சிகளின் தலைவர்கள் இன்னொரு புறமுமாகக் காணப்படும் நிலை உருவானது. ஏனெனில் நாடு பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாவதற்கும், வளர்முக மூன்றாம் மண்டல நாடாகத் தொடர்ந்தும் காணப்படவும் நாட்டில் அதிகரித்துள்ள ஊழல் மோசடிகளும், வீண்விரயங்களும், அதிகாரத் துஷ்பிரயோகங்களுமே காரணம் என்பதை மக்கள் அறிந்திருந்தனர். அதனால் பாரம்பரிய அரசியலில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் உறுதியான தீர்மானம் எடுத்திருந்தனர்.

மக்கள் பொறுமை காத்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்திருந்தனர். அந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியில் அவர்கள் பங்காளர்களாகினர். இவ்வாறான சூழலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தித் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு 57 இலட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளை அளித்து நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக்கியுள்ளனர். கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் அவருக்கு மேலதிகமாக 53 இலட்சம் மக்களின் வாக்குகள் கிட்டியுள்ளன.

ஆனால் சஜித் பிரேமதாச 2019 தேர்தலில் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற போதிலும், இம்முறை தேர்தலில் 45 இலட்சத்து 30 ஆயிரத்து 902 வாக்குகளையே பெற்றுள்ளார். அவர் கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் 10 இலட்சம் வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்திருப்பது தெளிவாகின்றது.

அதேநேரம் தேசிய மக்கள் சக்தித் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகி சுமார் 20 நாட்கள்தான் கடந்துள்ளன. பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் இறுதி தினமான கடந்த வெள்ளிக்கிழமையை (11.10.2024) எடுத்து பார்த்தால் அது வரலாற்றில் அழியாத்தடம் பதிக்கும் தினமாக அமைந்திருக்கிறது.

அதாவது இந்நாட்டின் அரசியலில் பெரும் ஜாம்பவான்களாக விளங்கிய பலர் இப்பொதுத்தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டுள்ளனர். அவர்களில் பாராளுமன்ற அரசியலில் சுமார் 50 வருட அனுபவத்தையும் இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவி வகித்த அனுபவத்தையும் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ, 30 வருடங்களுக்கு மேற்பட்ட பாராளுமன்ற அரசியல் அனுபவத்தையும் ஒரு தடவை ஜனாதிபதி பதவியை வகித்த அனுபவத்தையும் கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியை சுமார் இரண்டரை வருடங்கள் வகித்த அனுபவம் கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

அதிலும் குறிப்பாக 1936 முதல் கடந்த 88 வருடங்களாக செயற்பாட்டு பொதுத்தேர்தல் அரசியலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினர் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு விமல் வீரவன்ச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சமல் ராஜபக்‌ஷ, விஜயதாச ராஜபக்‌ஷ, சரத் பொன்சேகா, அலி சப்ரி, பந்துல குணவர்தன, டபிள்யு.டி ஜோன் செனவிரத்ன, பிரசன்ன ரணதுங்க, லொஹான் ரத்வத்த, எஸ்.பி. திஸாநாயக்க, சான் விஜயலால் டி சில்வா, கனக ஹேரத், விமலவீர திஸாநாயக்க, வாசுதேவ நாணயக்கார, ஜனக பண்டார தென்னக்கோன், பிரியங்கர ஜயரத்ன, லக்‌ஷ்மன் கிரியல்ல, செஹான் சேமசிங்க, நாலக்க கொடஹேவா, கீதா குமாரசிங்க, வஜிர அபேர்தன, பாலித ரங்கே பண்டார உள்ளிட்டோரும் இத்தேர்தலில் போட்டியிடாது முழுமையாக தவிர்ந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்‌ஷ, தினேஷ் குணவர்தன, ஜி.எல்.பீரிஸ், காமினி லொக்குகே, டளஸ் அழப்பெரும, சி.பி. ரத்நாயக்க, திஸ்ஸ விதாரண, திஸ்ஸ குட்டியாராச்சி, சாகர காரியவசம், டளஸ் அழகப்பெரும, தலதா அத்துகோரள, ட்ரான் அலஸ், பைசல் முஸ்தபா உள்ளிட்டோர் இத்தேர்தலில் போட்டியிடாது அவர்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

கடந்த காலத்தில் அரசியலில் பெரும் ஜாம்பவான்களாக விளங்கிய இவர்களால் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கு முன்பாக நின்றுபிடிக்க முடியாதிருப்பதையே இவர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொண்டிருப்பது எடுத்துக் காட்டுகிறது. தாம் இத்தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் தங்களுக்கு அளிக்கும் பதில் எவ்வாறு இருக்கும் என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருப்பதால்தான் அவர்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர். அதுவே மக்களின் பரவலான கருத்தாகும்.

ஆகவே பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெறும் என்பதையே இந்நாட்டு அரசியல் ஜாம்பவான்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டமை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.  மர்லின் மரிக்கார் - நன்றி தினகரன் 

No comments: