சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 11 தெருத்தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு! திருட்டுத்தேங்காய் சாபத்திற்கு!! தேங்காயின் விதிப்பயன் என்ன...? - முருகபூபதி



   பயன்தரும்  மரங்களின்  பெயர்களையும்  எழுதி,  அதில் ஒன்றைத்தெரிவுசெய்து,  அது  தரும்  நல்ல  பயன்களைப்பற்றி எழுதச்சொன்னார்  ஆசிரியர்.   இந்தச்சம்பவம்  நான்  ஐந்தாம்  வகுப்பு படித்த காலத்தில்  நடந்தது.

எனது  வகுப்பில்  பெரும்பாலான  மாணவ  மாணவிகள்  தென்னை மரம்  பற்றியே  எழுதியதற்குக்காரணம்,  எங்கள்   ஊரில்  அந்த மரங்கள்தான்  அதிகம்.   நாம்  பனைமரத்தை  படங்களில்தான்  பார்த்திருந்த  காலம்.

தென்னையின்   பயன்பாடு பற்றி  நிறையச் சொல்லமுடியும்.  ஆனால்,  அந்த  பால்யகாலத்தில்  எமக்குத் தெரிந்ததையே  எழுதினோம்.
தெங்கு  ஆராய்ச்சி  நிலையம்,   தேங்காய்  எண்ணெய்  தொழிற்சாலை, தேங்காய்  துருவல் (Desiccated Coconut)    தொழிற்சாலை  என்பன  எங்கள் நீர்கொழும்பூரில்   இருந்தன.   தென்னந்தோட்ட  உரிமையாளர்கள்  பலர்  தமக்குள்  சங்கமும்  வைத்திருந்தனர்.
ஆனால் , இவைபற்றிய  எந்த  ஞானமும்  இல்லாமலேயே  நானும் சகமாணவர்களும்   தென்னையின்  பயனை   நன்றாக  எழுதி ஆசிரியரிடம்  சிறந்த  மதிப்பெண்களும்  பெற்றோம்.

பாடசாலைக்கு  அருகில்  அமைந்த  கோயில்களில்  யாராவது பக்தர்கள்   வந்து  தேங்காய்  உடைத்து  பிரார்த்தனை  செய்தால்எமக்கு  கொண்டாட்டம்தான்.   பாடசாலை  இடைவேளை  நேரத்தில் சிதறுதேங்காய்  பொறுக்கிய  அந்தக்காலத்தை  மறக்கத்தான்  முடியுமா.?
 
கோயில்  அய்யரோ  அல்லது  பண்டாரமோ  வந்து  அவற்றை பொறுக்குவதற்கு  முன்னர்  நாம்  முந்திவிடுவோம்.   சில  சமயங்களில்    அவர்கள்  முந்துவார்கள். கோயில்  வெளிவீதியில்  சிதறு தேங்காய்களை  காயவைத்து கொப்பறையாக  மாற்றி,  தேங்காய்  எண்ணெய் தொழிற்சாலைக்கு அனுப்புவார்கள்.



பிரதான   கடைவீதியில்   எந்தக்  கடை  முதலாளி,  ரதங்களுக்கு முன்னால்  அதிகம்  தேங்காய்  உடைத்தார்  என்பதை  நானும் நண்பர்களும்  ஆராய்ந்தது   பால்யத்தின்  வசந்தகாலங்களில்தான்.

ஆனால்,  அதில்  பதுக்கல்  வர்த்தகத்தின்  மூலம்  பொருளீட்டிவிட்டு பாவசங்கீர்த்தனமாக  எத்தனைபேர்  தெய்வத்திற்கு  தேங்காய் உடைக்கிறார்கள்  ????  என்பதை  ஆராயும்  வயது  அல்ல  அந்த பால்யகாலம்.


 திடீரென்று   ஒரு நாள்  ஏன்  தேங்காய்  அடித்து  பிரார்த்திக்கிறார்கள் ? - என்ற    கேள்வி  மனதில்  எழுந்தது.   மனதை  தூய்மையாக  வைத்திருக்கவேண்டும்.   மனதில்  ஈரம்  இருக்கவேண்டும்.  தேங்காயை  உடைத்தால்  உள்ளே  தூய்மையான  வெண்மையும்  நீரும்  இருக்கிறது  என்று  வீட்டில்  விளக்கம்  சொன்னார்கள்.

அம்மாவுக்கு   தினமும்  காலையில்  தேங்காய் துருவிக்கொடுத்திருக்கின்றேன்.    அதில்தான்  அம்மா  சட்னி, துவையல்    செய்வார்கள்.  தேங்காய்  எமது  வீட்டின் வறுமையைப்போக்கிய   காலத்தையும்  மறக்க முடியாது.   

" நன்றி  ஒருவருக்குச்  செய்தக்கால்  அந்நன்றி  என்று  தருங்கொல்  என  வேண்டா -
நின்று   தளரா  வளர்தெங்கு  தாளுண்ட  நீரைத்  தலையாலே  தான் தருதலால் "
 என்ற   அவ்வையாரின்   மூதுரையை  பாடசாலையில்  கேட்டதும் அந்தப்பருவத்தில்தான்.

                                 தென்னையின்  பெயருடன்  எங்கள்  நாட்டில்  பல  ஊர்கள்  ( பொல்கஹவெல,   பொல்வத்தை,   தென்னைமரவடி ) திகழ்ந்திருக்கின்றன  என்பதை  அறிந்தது  மற்றுமொரு  பருவத்தில்.

" கேணி  யருகினிலே - தென்னைமரம்  கீற்று  மிளநீரும்
பத்துப்பன்னிரண்டு   தென்னை  மரம்  பக்கத்திலே   வேண்டும் " என்ற  பாரதியின்  பாடலிலும்

தென்னங்   கீற்று     ஊஞ்சலிலே
தென்றலில்    நீந்திடும்    சோலையிலே
சிட்டுக்குருவி     ஆடுது
தன்    பெட்டைத்துணையைத்தேடுது...
என்ற  ஜெயகாந்தனின்  ( பாதை  தெரியுது பார் - திரைப்படப்பாடல்) 
பாடலிலும்   சொக்கி  மகிழ்ந்த  பருவம்  மற்றும்  ஒரு  காலம்.

தேங்காய்,  இளநீர்  விற்று  குடும்பத்தை  காப்பாற்றும்  ஏழைகளையும் மத்திய தரவர்க்கத்தினரையும்,   தென்னந் தோட்டச்சொந்தக்காரர்களான   பெரும்  தனவந்தர்களையும் வாழ்க்கைப்பாதையில்  சந்தித்திருக்கின்றோம்.
நான்கூட  ஒரு  காலத்தில்  தேங்காய்  விற்று  வருமானம் தேடியிருக்கின்றேன்.    தேங்காயின்  உரிமட்டையும் விற்பனைக்குரியது. வடபகுதியில் இதனை பொச்சுமட்டை என்பார்கள்! மலையகத்தில் சொன்னால் அடிக்க வருவார்கள்!

தேங்காய்ச்சிரட்டை,   வடக்கில்  மேல்  சாதிக்காரர்,  தாழ்த்தப்பட்ட ஏழை  எளிய  குடிமக்களுக்கு  தண்ணீர்,  தேநீர்  கொடுக்க பயன்பாட்டிலிருந்திருக்கிறது.    இதனை   அறிந்துகொண்டது  எனது மற்றும்   ஒரு  பருவகாலத்தில்.

தேங்காயில்   பின்வரும் உயிர்ச்சத்துக்கள்  இருக்கின்றன  என்பதை அறிந்தது தமிழ்  விக்கிபீடியா  பயன்பாட்டுக்கு  வந்த  கணினி  யுகத்தில்.

நார்ப்பொருள்,  மாப்பொருள்சர்க்கரை  , கொழுப்புபுரதம், தயமின்,    ரிபோஃபிளாவின்   , நியாசின்    , பான்டோதெனிக்  அமிலம்  , உயிர்ச்சத்து B6  , இலைக்காடி  (உயிர்ச்சத்து B9 )  ,உயிர்ச்சத்து C , கல்சியம்இரும்பு , மக்னீசியம் ,  பொட்டாசியம் ,   துத்தநாகம்  .

இவ்வளவு  பயன்களைத்தரும்  தேங்காயில்  மற்றுமொரு  அபூர்வ குணம்,  பயன்பாடு  இருக்கிறது  என்பதை   ( தற்காலத்தில் )  இலங்கை   அரசியல் வாதிகள்  மக்களுக்கு  சொல்லியிருப்பது  21   ஆம் நூற்றாண்டு  காலத்தில்.

தற்பொழுது   பீல்ட்  மார்சல்  தரத்துக்கு  உயர்த்தப்பட்டுள்ள  முன்னாள் இராணுவத்தளபதி   சரத்பொன்சேக்காவுக்கு  பாராளுமன்றில்  யூ. என்.பி . செயற்குழு  தமது  கட்சியின்  சார்பில்  ஒரு  ஆசனத்தை வழங்கியது. அவ்வேளையில்  தேங்காய்  பற்றியும் சிந்திக்க  வேண்டிவந்தமையால்தான்   இந்த  தேங்காய்  மகத்மியம் பதிவின் ஊடாக சொல்லத்தவறிய கதைகளை எழுதுகின்றேன்.  

இலங்கையில்   ராஜபக்க்ஷேக்களின்  முன்னைய  அரசு  2009  மே  மாதம் புலிகளுடனான இறுதிப் போரில்  வெற்றிகண்டு ஒன்பது ஆண்டுகளாகின்றன.   கொழும்பில் சரத்பொன்சேக்காவும்  ராஜபக்க்ஷே  சகோதரர்களும்,    போர்க்காலத்தில்  பிரதி  பாதுகாப்பு  அமைச்சராக இருந்தவருமான (இன்றைய ஜனாதிபதியும்)  மைத்திரியும்  தேங்காய்ப்பாலில்  செய்த  பால்சோறு   வெட்டிப்  பகிர்ந்துண்டு, வெற்றிக்களிப்பை கொண்டாடினார்கள்.  

சிறிதுகாலத்தில்   சரத்பொன்சேக்கா  பதவியிலிருந்து  நீக்கப்பட்டு சிறைக்கு   அனுப்பிவைக்கப்பட்டார்.   அப்பொழுது  அவருக்கு  அங்கே தேங்காய்ப்பாலில்  செய்த  கறியுடன்  உணவு  தரப்பட்டிருக்கலாம்.

அத்தகைய   உணவை   மறுத்து,  வீட்டிலிருந்து  அம்மாவின் கைப்பக்குவத்தில்  சமைத்த  உணவைத் தருவிக்கும் யோஷித்த ராஜபக்ஷவின்   கைதைத் தொடர்ந்து,  மகிந்த   அணியினர்  தற்போதைய  நல்லாட்சிக்கு  (?)   சாபமடும்   வகையில்  சீனிகம தேவாலயத்தில்   நூற்றுக்கணக்கான  தேங்காய்களை உடைத்த செய்தியையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்!

தமிழர்களும் இந்துக்களும் தேங்காயை   நிறைகுடத்திற்கும்  பூசைகளுக்கும்  (காளாஞ்சி) பயன்படுத்துவதை   பார்க்கின்றோம்.   மக்களுக்கும்  பயன்பட்டு, மருத்துவ  குணங்களும்  கொண்டிருக்கும்,  தேசத்தின்  பொருளாதார வளத்திற்கும்  உதவும்  தேங்காய்க்கு,  சாபமிடும்  சக்தியும்  இருக்கிறது   என்ற  செய்தியை   இன்றைய  தென்னிலங்கை  அரசியல் வாதிகள்   தெரிவித்துள்ளனர்.

இதனை எனது மற்றும் ஒரு பருவகாலத்தில் (அறுபது வயதிற்குப்பின்னர்)  பார்க்கின்றேன்.

ராஜபக்‌ஷே  அரசு  போரில்  வெற்றிபெற்ற  களிப்பில்  தேங்காய்பால் சோறு  உண்டபோது,   தமிழகத்தில்  அரசியல்வாதிகள்  இவர்களுக்கு கொடும்பாவி  எரித்து  கண்டனம்  தெரிவித்தனர்.
அப்பொழுது   தமிழக  தலைவர்களை   கோமாளிகள்  என்று வர்ணித்தவர்  சரத்பொன்சேக்கா.   இன்று  இலங்கையிலும்  அரசியல் கோமாளிகள்   இருக்கிறார்கள்  என்பதை   அவர்  எம். பி.யாக தெரிவான  தருணத்தில்  நாம்  அறிந்தோம்.

மறைந்த  எம்.பி.,   எம்.கே.டீ. எஸ்.  குணவர்தனாவுக்குத்தான் சரத்பொன்சேக்கா   நன்றி  தெரிவிக்கவேண்டும்.
முன்னர்  ஒரு  எம். பி.   இறந்தால்,   அந்தப்பதவி  வெற்றிடத்திற்கு இடைத்தேர்தல்  நடக்கும்.
ஆனால், ஜே.ஆரின்  புண்ணியத்தால்  இன்று  நாடாளுமன்றில்  ஆசனம்   கிடைக்காமல்  ஏங்கும்  பலரும்  அடுத்து  யார்  மறைவார்கள்?  என்று  காத்திருக்கின்றனர்!

 தேங்காயில்  சாபமிடும்,   சூனியம்  செய்யும்  மகத்துவம்  தெரிந்திருப்பின்    இன்று  எத்தனை  பேர்  யார்  யாருக்காக தேங்காய்களுடன்  ஆலயங்களுக்கு  இரகசியமாக  சென்று வருகிறார்கள்  ? என்பது  அவ்வாறு  செல்பவர்களின் மனச்சாட்சிக்குத்தான்  தெரியும்.

எனக்கு   இன்னமும்  நினைவிருக்கிறது.
எங்கள்  ஊருக்கு  அருகில்  இருக்கும்  கட்டான  தொகுதியில்  கே.சீ. டீ. சில்வா   என்ற  ஸ்ரீலசுக  எம்.பி . காலமானார்.   அவ்வேளையில் தெருவெங்கும்   வெள்ளைக்கொடிகள்  பறக்கவிடப்பட்டு,   சில்வாவின் படங்கள்  சுவர்களில்  ஒட்டப்பட்டன.   செய்தி  சேகரிக்கச்  சென்றபோது சில்வாவிடம்   முன்னர்  தோற்றிருந்த  விஜயபால  மெண்டிஸ்  என்பவர்,  தமது  ஜீப்பில்  வந்துகொண்டிருந்தார்.   அவரைக்கண்ட அவருடைய   கட்சி  ஆதரவாளர்  ஒருவர்,
"  மாத்தையாட்ட  ஜயவேவா, இதிங்   மாத்தாயா  தமய்  அபே  மந்திரிதுமா "  ( துரைக்கு வாழ்த்துக்கள்.    இனிமேல்  துரைதான்  எங்கள்  மந்திரி)  என்று உரத்துச்சொன்னார்.

விஜயபால மெண்டிஸ்  எங்கள்  ஊர்  மேயர்  முதலியார்  மெண்டிஸின்   மகன்இந்தக்குடும்பத்திற்கும் எங்கள் ஊரில் நிறைய தென்னந்தோட்டங்கள் இருந்தன.  அந்த  ஆதரவாளர்  சென்னது  கட்டானையில் நடந்த   இடைத்தேர்தலில்  பலித்தது.

சில வருடங்களுக்கு முன்னர் 68  ஆவது  சுதந்திரதினம்  கொழும்பில்  கொண்டாடப்பட்ட வேளையில்    அதனை   எதிர்த்தவர்கள்,  சீனிகம  தேவாலயம்  சென்று அரசுக்கு   சாபமிட்டு  தேங்காய்களை   உடைத்திருக்கிறார்கள்.

இதில்   வேடிக்கை   என்னவென்றால்,   ஒரு  காலத்தில்  இலங்கையில்  மார்க்ஸின்  பிதா  என  வர்ணிக்கப்பட்ட பிலிப்குணவர்தனாவின்   மக்கள்  அய்க்கிய  முன்னணியின்  தலைவர் தினேஷ்  குணவர்தனா   இந்த  தேங்காய்  உடைப்பு  சாபமிடும் போராட்டத்தில்    முன்னிலை   வகித்துள்ளார்.

இந்த   பகுத்தறிவாளர்களின் (?)  செய்கைக்கு  குருநாகலில்  நடந்த கூட்டத்தில்   ( கவனிக்கவும்:- குருநாகல்  மகிந்தர்  வென்ற  தொகுதி) எதிர்வினையாற்றிய   பிரதமர்  ரணில்  விக்கிரமசிங்கா  என்ன சொன்னார் தெரியுமா?

" தற்பொழுது  தேங்காயின்  விலை   குறைந்துள்ளது.   தேங்காய் உடைத்து   சாபமிடுபவர்கள்  ஒன்றிரண்டல்ல,  நாடுபூராவும்  பத்து இலட்சம்    தேங்காயாவது  உடையுங்கள்.   அவ்வாறு  செய்தால் நாடுபூராகவும்  தேங்காய்களுக்கு  தட்டுப்பாடு  வரும்.    தேங்காயின் விலை   உயரும்.   வடமேல்  மாகாண   மக்கள்  அதனால் பயனடைவார்கள்.   அரசின்  தென்னந் தோட்டங்களில்  தேங்காய்களை திருடி   கோயிலில்  உடைக்கவேண்டாம்  எவ்வளவோ திருடியவர்களுக்கு  தேங்காய்  திருடுவது  பெரிய விடயமல்ல."
இந்தப்பேச்சு   ரணில்   விக்கிரமசிங்காவின்  வலதுசாரி முதலாளித்துவச் சிந்தனையின்  வெளிப்பாடு.

" திருட்டுத்தேங்காய்   உடைத்து  சாபமிட்டால்  அதனை  கடவுளே பார்த்துக்கொள்வார் " - என்று   நல்லாட்சியின்  மகளிர்  விவகார அமைச்சர்   சந்திராணி  பண்டார  அநுராதபுரத்தில்  நின்று  சொன்னார்!

இறுதியாக   நடந்த  இலங்கை  அதிபர்  தேர்தலுக்கு  முன்னர் ஒருநாள்  மதியம்  காலிவீதியில்  அமைந்த  அலரி  மாளிகையின் முன்னால்  நின்று  தேங்காயின்  மீது  கற்பூரம்  கொளுத்தி  அதனை வீதியில்   அடித்து  ராஜபக்க்ஷ  ஆட்சிக்கு  சாபமிட்ட  ஒரு பெண்ணைப்பற்றியும்   அறிந்திருப்பீர்கள்.

                                 தனது  கணவர்,  ஊடகவியலாளர்  பிரகித்  எகனிலியகொட காணமல்போய்   ஆயிரம்  நாட்கள்  கடந்தும்  அவருக்கு  என்ன நடந்தது ?  என்பது  தெரியாத  நிலையில்  அந்தப்பெண்  கதறிக்கதறி தேங்காய்  உடைத்து   சாபமிட்டதனால்தான் -  அன்றைய  அதிபர் தோல்வியுற்றார்  என்று  அவரின்  ஆதரவாளர்கள்  நம்பியிருப்பதன் விளைவா   அதன்பின்னர்   அவர்கள்  சீனிகம  தேவாலயத்தில்  மைத்திரி - ரணில்   கூட்டு  நல்லாட்சிக்கு  எதிராக  நடத்திய  தேங்காய்  உடைப்பு சாபமிடும்  போராட்டம்  என்றும்  யோசிக்கத்தூண்டுகிறது!!!

பாவம்   தேங்காய் !!!!    அது  என்ன  பாவம்  செய்ததோ????
தேங்காயின்  பயன்பாடு  பற்றி  சிறுவயதில்  நாம்  அறிந்ததற்கும், இன்றைய  இலங்கை  அரசியல்வாதிகள்  தமது  செய்கையின்  மூலம் கூறும்  பயன்பாட்டுக்கும்  இடையில்  பகுத்தறிவுவாதம்  வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது!

சிங்களத்தலைவர்கள்தான் இவ்வாறு தேங்காய் உடைக்கிறார்கள் என்று பார்த்தால் தமிழ்த்தலைவர்களும் தேர்தல் வெற்றிக்காக உடைக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச்சேர்ந்த வடமகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெறவேண்டும் என்று வடக்கில் நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் ஆயிரத்து எட்டு தேங்காய்கள் உடைத்தார்.

சீனிகம தேவாலயத்தில் மார்க்ஸின் பிதாவின் புதல்வர் தினேஷ் குணவர்தனாவும் தேங்காய் உடைக்கிறார், வடக்கிலே தமிழ்த்தேசியத்தின் புதல்வர் சிவாஜிலிங்கமும் உடைக்கிறார்.!!

அதற்கு அவர் தரப்பில் சொல்லப்பட்ட காரணம்:
"ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்று அதிபரானால் இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்று நம்புகிறோம். அமெரிக்காவின் வலுவான தலையீட்டின் மூலமாகத்தான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைக் காண முடியும். இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்துக்கு ஹிலாரியின் வெற்றி மிக முக்கியமானது. அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நல்லூர் கந்தசாமி கோயிலில் தேர்தல் நாளன்று, ஆயிரத்தெட்டு தேங்காய்கள் உடைக்கின்றோம்.

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்காலத்தில் யார் தரப்பு வெற்றிபெறவேண்டும்? என்று சிவாஜிலிங்கம் தேங்காய் உடைத்தார் என்பதுதான் தெரியவில்லை?!

தமிழகத்திலும் சட்டமன்றத்தேர்தல் நடந்தபோது ஜெயலலிதாவின் வெற்றிக்காகவும், அவர் சிறை சென்றசமயம் அவர் விடுதலையாகவேண்டும் என்பதற்காகவும், அவர் நோயுற்றபோது சுகமாக வேண்டும் என்பதற்காகவும் அவரது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் ஆயிரத்தெட்டு தேங்காய்கள் உடைத்து பிரார்த்தனை செய்தனர்.

இவ்வாறு இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆலயங்களில் தேங்காய் உடைக்கிறார்கள்.
எனது பால்ய காலத்தில் 25 சதத்திற்கும் தேங்காய் வாங்கியிருக்கின்றேன். இன்று இலங்கையில் தேங்காய் 60, 70, 80, ரூபாவுக்கும் சில சமயங்களில்100 ரூபாவுக்கும் விற்பனை ஆகிறது.

இலங்கையிலும் தமிழகத்திலும் வறுமைக்கோட்டின் கீழே எத்தனையோ ஆயிரம் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவவேண்டிய இந்த பகுத்தறிவுக்கொழுந்து (?) தலைவர்கள்,  பதவி அதிகார பலத்திற்காகவும்,  எதிரணிக்கு சாபமிடுவதற்காகவும் தேங்காய்களை அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கின்றன.?!
இலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்து வரும் நிலையில், தேங்காய் ஏற்றுமதியை நிறுத்துமாறு, இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கேட்டுகொண்டதாக செய்திகள் வெளிவந்தன.
தேங்காய் எந்த விலைக்கு உயர்ந்தாலும் ஆயிரத்தெட்டுத்தேங்காய்கள் உடைக்கும் கலாசாரத்திற்கு எம்மவர்கள் முற்றுப்புள்ளி இடமாட்டார்கள்.
அது என்ன "ஆயிரத்தெட்டு...?" என்று ஒரு சோதிடம் தெரிந்த நண்பரைக்கேட்டேன். அவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார்:
https://www.quora.com/What-is-significance-of-108-in-Hinduism




நவீன   கணினியுகத்தின்  பாய்ச்சலில்  இளம்தலைமுறை பரவசமுற்றுள்ள  இக்காலகட்டத்தில்,  மூத்த தலைமுறை அரசியல்வாதிகள்  மக்களின்  பயன்பாட்டுக்குரிய  தேங்காயை தேர்தல் வெற்றியை நோக்கி நகருவதற்கும் சாபமிடுவதற்கும்   சூனியம்  செய்வதற்கும்  ஆயுதமாக்கும்  செயலைஇன்றைய    சுவாரஸ்யமான  கோமாளிக்கூத்தாக  ரசித்து கடந்துகொண்டிருக்கின்றோம்.

இது இவ்விதமிருக்க தேங்காயை மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு குடிசைக்கைத்தொழிலிலுக்கு மாற்றியிருக்கும் முன்னாள் சிறைவாசி தம்பதிகள் பற்றிய  செய்தி தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் அத்தியூரையடுத்துள்ள மலையடிவாரத்திலிருந்து கிடைக்கிறது!

இங்கு வசிக்கும் அன்புராஜ்  என்பவர் முன்னர் மலையடிவாரத்தில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்.  அதன்பின்பு சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளில் ஒருவரானார். இவர் சிறையிலிருந்த காலத்தில், பசுமை விகடன் இதழைப்படித்து,  தனது விவசாய அறிவை வளர்த்துக்கொண்டவர். அங்கு சிறையிலிருந்த ரேகா  என்பவரையே காதலித்து மணம் முடித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபின்னர் குடிசைக்கைத்தொழிலாக  தனது வீட்டிலேயே மரச்செக்கு அமைத்து தேங்காய் எண்ணெயுடன் கடலை எண்ணெய், நல்லெண்ணெய்யும் உற்பத்தி செய்து புதியவாழ்வை பயனுள்ளதாக தொடங்கியிருக்கிறார்.

இவ்வாறு ஒரு முன்னாள் சிறைக்கைதி தம்பதிகள்,  தமக்கும் தமது மக்களுக்கும் பொருளாதர மேம்பாட்டிற்காக தேங்காயை பயன்படுத்திவரும் காலத்தில்தான், அரசியல்வாதிகள் தங்கள் தேவைகளின் நிமித்தம் தேங்காய்களை ஆயிரக்கணக்கில் உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்!!! பாவம் தேங்காய்! அதன்விதியும் இப்படியா இருக்கிறது...?

 letchumananm@gmail.com
-->





No comments: