"அண்ணா" தந்த அன்னை நடராஜா மாமா நினைவில் - கானா பிரபா

.

மடத்துவாசல் பிள்ளையாரடி காலை ஆறரைப் பூசைக்கு கமக்காரர், அரச உத்தியோகத்தர், ஓய்வூதியர், மாணவர் என்று வயது, பால் வேறுபாடின்றி கோயிலின் ஒழுக்க விதிமுறைக்கேற்ப ஊரே கூடியிருக்கும்.
அப்போது அந்தச் சனக் கூட்டத்தில் ஒருவராக எளிமையான உருவம் பயபக்தியோடு நின்று கொண்டிருப்பார். அவர் தான் இணுவில் மண்ணில் ஆலமரமாக எழுந்து நிற்கும் அண்ணா தொழிலகம் என்ற மூத்த பிள்ளையை ஆக்கி வளர்த்த திரு.பொன்னையா நடராசா.
அவரைத் தொடர்ந்து அண்ணா தொழிலகத்தில் உற்பத்திகளைக் காவிக் கொண்டு போகும் அந்த நிறுவனத்தின் வாகனங்கள் ஒவ்வொன்றாய் வந்து பிள்ளையாரைக் கனம் பண்ணிய பின்னர் தான் தம் காரியத்தைத் தொடங்கும்.

பிள்ளையாரடியின் அந்த விடிகாலைப் பூஜையில் மட்டுமல்ல அந்த எளிமைத்தனம் ஒட்டியிருக்கும், அவர் வாழ்ந்து முடித்த ஜூலை 5, 2015 என்ற நாள் வரை எவராலும் அணுகக் கூடிய, அதிர்ந்து பேசாத அந்தத் தொழில் முனைவர் வாயால் கட்டாமல் வாழ்ந்து கட்டிய அவரின் வர்த்தக சாம்ராஜ்யம் பரந்து விரிந்திருக்கிறது. அண்ணா தொழிலகம் என்ற தொழில் கூடம் பொன் விழாவைக் கடந்து நில்லாமல் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்துக் கிளைகளாய்ப் பரவிய அந்தத் தொழில் முனைப்பில் உள்ளூர் உற்பத்திகள் பல்கிப் பெருகின. அதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது நடராசா மாமா என்று எல்லோராலும் அன்போடு அழைக்க வைத்த அவரின் ஆளுமை தான் முதன்மைக் காரணம்.


"எனது பதினேழாவது வயதில் கொழும்புக்கு வேலை தேடிப் போய் பல வேலைகளையும் செய்து திருப்தியற்ற நிலையில் எங்களூர் அண்ணாமலைப் பரியாரியாரைச் சந்தித்த வேளை அவர் மூலிகைப் பற்பொடி செய்து தொழில் முனைப்பைத் தொடங்கலாமே என்று சொன்ன அந்தப் பொறி தான் "அண்ணாமலை ஆயுர்வேதப் பற்பொடி" என்று தொடங்கி "அண்ணா பற்பொடி" ஆனது.
பின்னர் மில்க்வைற் சோப் அதிபர் கனகராசாவின் நட்பும், உதவியும் கிடைத்த போது அவரின் வழிகாட்டுதலில் கோப்பித்தூளைச் சந்தைப்படுத்தும் "அண்ணா கோப்பி" உருவானது.
பின்னர் அரிசி, மா, சரக்குத்தூள், ஜீவாகாரம், சாம்பிராணி, சரக்குத்தூள், விபூதி, இனிப்பு வகைகள் என்று "அண்ணா" வர்த்தக நாமத்தில் வியாபித்தன" என்று தன் ரிஷிமூலத்தை யாழ்ப்பாணம் உதயன் நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றும் அண்ணா கோப்பியின் தலைமைப் பணிமனை இயங்கும் இணுவில் அலுவலத்தில் பென்னம் பெரிய அண்ணாமலைப் பரியாரின் ஓவியச் சட்டம் மையமாக இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தைத் தனது உள்ளூர் உற்பத்தித் தொழில் மையமாகக் கொண்டு வெற்றிகரமான வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய வகையில் அண்ணா தொழிலகமும் மில்க்வைற் நிறுவனமும் பல்லாண்டு கால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டவை. அதில் இன்னொரு சிறப்பு என்னவெனில் மில்க்வைற் அதிபர் கனகராசாவும் அண்ணா தொழிலக அதிபர் நடராசாவும் கொண்ட நட்பு எவ்வளவு தூரம் வர்த்தகத்தை முன்னிறுத்தாத நேசம் என்பதைக் கண் கூடாகப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். 
தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் "மில்க்வைற் பணிமனை"யைக் கடக்கும் போதெல்லாம் மூன்று கோடு கிழித்த திருநீற்று நெற்றியும், வெள்ளை நேஷனல் சட்டை, வேஷ்டி சால்வை தரித்த மில்க்வைற் கனகராசா அவர்களின் முகம் தான் நினைவில் வந்து நெஞ்சின் ஓரம் வலியை எழுப்பும்.

ஒளிச்சுப் பிடிச்சு விளையாடிய காலத்தில் இருந்து சின்னத்திரையில் சினிமா பார்த்த அந்தப் பதின்ம வயதுகளின் மிதப்பு வரை எனது பால்யகாலம் அடைக்கலம் புகுந்த இடங்களில் ஒன்று நடராசா மாமா வீடு.

இலங்கையில் சத்துணவு என்றால் "திரி போச" மாவு என்ற நிலை மாறி "ஜீவாகாரம்" அனைவர் வாயிலும் புழங்கும் அளவுக்கு எண்பதுகளிலே அந்த உற்பத்தியை அறிமுகப்படுத்திச் சந்தைப்படுத்திப் புதுமையிலும் சாதிக்க முடியும் என்று நிறுவினார். இதையெல்லாம் சின்ன வயதாக இருந்த அந்த நாட்களில் கண்கூடாகக் காணும் பாக்கியம் கிட்டியது எனக்கு.

நடராசா மாமாவின் தம்பி விவேகானந்தன் மாமாவும் தொழில் முறைப் பங்காளியாக இணைந்து கை கொடுத்தார். அண்ணா ஊது பத்திகள், துர்க்கா என்ரபிறைசஸ் (கொற்றவை கால் நடைத் தீனி வாணிபம்) , அண்ணா Farm என்று பரந்து விரிந்தது இவ் இருவரின் தேடலும் அயராத உழைப்பும் சார்ந்த தொழில் முனைப்புகள்.

இணுவில் என்றால் "அண்ணா கோப்பி"க்கு எந்தப் பக்கம் என்னும் அளவுக்கு எங்களூரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறியது.

இணுவில் கிராமத்தின் அயலட்டைகள் எல்லாம் "அண்ணா தொழிலகம்" என்ற உற்பத்தி நிறுவனத்தில் தமது முழு நேரச் சீவனோபாயத்தை வளர்த்துக் கொள்ள் வழிகோலியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் இந்தத் தொழில் மையத்தில் இயங்கும் அளவுக்கு அவர் தம் வாழ்க்கைக்கும் விடி வெள்ளியாக மாறியது இந்த நிறுவனம்.
தன் உடன் பிறந்தோர் மட்டுமன்றி ஊரவர்களையும் அரவணைத்து வேலை கொடுத்துப் பலருக்கு எதிர்காலத்தைக் காட்டும் திசைகாட்டியாக விளங்கியது.

என் உறவினர், நண்பர் வீடுகளில் ஊதுபத்திப் பொருட்களை எடுத்து வந்து வீட்டில் இறுதிப் பொருளாக ஆக்கி மீண்டும் அண்ணா தொழிலகத்துக்கு எடுத்துச் சென்ற குடிசைக் கைத்தொழில் மரபைக் கண்டிருக்கிறேன். இன்னொரு பக்கம் இணுவில் நெல் ஆலைகளில் இருந்து எடுத்த எரித்த உமி பொன்னம்பலம் மாமா வீட்டில் அண்ணா ஆயுர்வேதப் பற்பொடியாக உரு மாறிக் கொண்டிருக்கும்.

அண்ணா இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்திய காலத்தில் தென்னிலங்கையில் இருந்து இந்தத் தொழில்நுட்பத்தைப் பயிற்சி கொடுக்கவென ஒருவரைக் குடும்பத்தோடு அழைத்து வந்து தங்க வைக்கும் அளவுக்கு இவர்களின் பல்துறை முயற்சிகள் மீதான முனைப்பு இருந்தது.

இந்திய அமைதிப் படை காலத்தில் போர் உச்சம் பெற்று விளங்கிய காலத்தில், அப்போதுதான் கட்டிச் சில மாதங்களேயான அண்ணா தொழிலகத்தின் மூன்று மாடித் தளத்தின் கீழ்த்தளம் முழுவதையும் அகதிமுகாம் ஆக்கி அந்த இணுவில் மக்களைக் காக்கும் அரணாக்க உதவினார். நாட் கணக்காகச் சீறி வந்த ஷெல் கணைகள் எல்லாவற்றிலுமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டவர்களில் நானும் ஒருவன் என் குடும்பமும் பல குடும்பங்களில் ஒன்று.
அகதி முகாமாக அன்றி இருப்பதை வைத்துக் கஞ்சி காய்ச்சி வயிறை நிரப்பவும் வழி கோலினார்.
அந்த நேரம் விதி விளையாடியது, எந்த விதத் துணைக் காரணம் கூட இன்றி இந்திய அமைதிப் படையால் கைது செய்யப்பட்டு பலாலி இராணுவ முகாமில் பல மாசச் சிறைவாசம் பெற்று உருக்குலைந்து வெளியே வந்தார்.
நாட் தப்பாமல் முகச்சவரம் செய்த மழித்து வரும் அவரை அப்போது கண்ட கணம் தாடி மூடிய முகத்தைத் தாண்டிய புன்னகை ஒளி தான் கண்ணுக்குள் நிற்கிறது. 
வந்த வேகத்தில் விசேட சாயி பஜனை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அந்த அகதி முகாமில் இருந்த எல்லோருடனும் கூட்டுப் பிரார்த்தனை செய்து தானும் பஜனைப் பாடல்களைப் பாடி உருகியது நெஞ்சை விட்டகலா நினைவாக.
இணுவில் ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருக்கும் தங்களின் அண்ணா பல்லடுக்கு வாணிபத்தின் மேற் தளத்தைப் பல ஆண்டுகளாக "சாயி பஜனை நிலையம்" ஆக்க வழி கோலினர்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வட பகுதி மீதான பொருளாதாரத் தடை காலத்தில் சீனி, சர்க்கரை தட்டுப்பாடு நிலவியபோது "அண்ணா இனிப்பு" தான் அப்போது இணுவிலைத் தாண்டி எல்லா மூலையில் இருந்து வந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிப் போகும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்போது அவர் நினைத்திருந்தார் அந்த உற்பத்திகளை முடக்கிக் கொள்ளை இலாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இருப்புத் தீரும் வரை அது தேடி வந்தோருக்குப் போய்ச் சேர்ந்தது.
என்னதான் பல்தேசியக் கம்பனிகள் எண்பதுகளிலேயே கோப்பி ரூபத்திலும் யாழ் மண்ணை முத்தமிட்டாலும், அண்ணா கோப்பியைச் சுவைத்த வாய் வேறெதையும் தீண்டவில்லை என்ற நிலை இன்றும் பரவலாக அங்கே இருக்கும் சூழலுக்கு மாற்றியது தான் இவரின் வாழ்நாள் கடந்த சாதனை.

இணுவில் சுற்றுவட்டாரத்தைத் தாண்டி அயல் கிராமத்தில் இருந்து சுவாமி வலம் வரும் போதும் அண்ணா கோப்பி முன்றலைத் தாண்ட முன்னர் சுடச் சுடக் கோப்பி கிடைக்கும்.
இணுவிலில் நிகழும் சமுதாய நிகழ்வுகளிலும் நடராசா மாமாவின் பங்கு தனித்துவமானது, அது அறிவுப் பணி வரை நீண்டது.
ஈழத்தின் தொழில் முனைவோரில் எத்தனையோ போர் அநர்த்தங்கள், இடப்பெயர்வுகளைக் கண்டாலும் சோராது தன் வர்த்தக முயற்சியை யாழ்ப்பாணத்துக்கு வெளியேயும், இலங்கைக்கு அப்பாலும் நீட்டிய அந்த ஓர்மம் எந்தப் பல்கலைக்கழகத்திலும் படித்துக் கை தேறாத நிர்வாக ஆளுமையின் உன்னதம்.
மடத்துவாசல் பிள்ளையார் கோயிலின் ஆறரைப் பூசையில் இனி நடராசா மாமாவைக் காண முடியாது. ஆனால் அவர் ஈன்றெடுத்த அண்ணா தொழிலகத்தின் சரக்கு நிரப்பிய வாகனங்கள் பிள்ளையாரை வலம் வந்து போய்க் கொண்டிருக்கும் இனி.

புகைப்படம் நன்றி : இணுவில் பொது நூலகம் மற்றும் அண்ணா தொழிலகம் பேஸ்புக் பக்கம்



No comments: