நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 1) - மருதன்


    ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் இருவரிடம் இருந்தும் மனிதத்தன்மை களவாடப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவரும்போது, இந்த இருவரையும் விடுவிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அதை நாம் அடைந்துவிட்டோம் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை. நாம் இன்னும் முழுமையான சுதந்தரத்தை அடையவில்லை. பயணத்தின் இறுதி இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. மாறாக, முதல் அடியை மட்டும் எடுத்து வைத்திருக்கிறோம். நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை உதறித்தள்ளுவது மட்டும் சுதந்தரம் ஆகாது. மற்றவர்களுடைய சுதந்தரத்தையும் நாம் மதிக்கவேண்டும். மற்றவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாக நம் வாழ்க்கை அமையவேண்டும்.  - - நெல்சன் மண்டேலா
Nelson_Mandela-2Nelson-Mandela’s-Top-Five-Contributions-to-Humanityசிறையில் இருந்தபோது மண்டேலா எழுதிய சுயசரிதை 1994 இறுதியில் The Long Walk to Freedom என்னும் பெயரில் வெளியானது. தென் ஆப்பிரிக்காவில் அதுவரை வெளிவந்த புத்தகங்களில் அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்த புத்தகம் இதுவே. தென் ஆப்பிரிக்கா தனது நீண்ட பாதையில் ஓரடியைத்தான் எடுத்து வைத்துள்ளது என்று மண்டேலா அதில் குறிப்பிட்டிருந்தார்.  அனைவருக்கும் விடுதலை தேவை. ஒடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்குபவர்களுக்கும். ‘விடுதலைக்கான நீண்ட பாதையில் நான் நடந்து சென்றிருக்கிறேன். ஒரு கணம்தான் என்னால் ஓய்வெடுத்துக்கொள்ளமுடியும். சுதந்தரத்தோடு சேர்ந்து பொறுப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. எனவே, எனது நீண்ட பயணம் இன்னும் முடிவடையவில்லை.’ அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மண்டேலா அந்தப் பாதையில் ஓய்வில்லாமல் தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.

ஆட்சியல் அவர் அமருவதற்கு முன்பே ஆப்பிரிக்கானர்கள் மண்டேலாவிடம் பேசினார்கள். அடுத்து உங்கள் கரங்களில்தான் தென் ஆப்பிரிக்கா வரப்போகிறது. என்ன செய்யப்போகிறீர்கள் எங்களை? நாங்கள் இங்கே தொழில் நடத்தலாமா? எங்கள் இருப்பிடங்களில் தொடர்ந்து வசிக்கலாமா? எங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? அவர்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்பது மண்டேலாவுக்குத் தெரியும். இத்தனை காலமாக கறுப்பர்களான உங்கள் மீதேறி சவாரி செய்துகொண்டிருந்தோம். எங்களை முறியடித்துவிட்டு கறுப்பர்கள் நீங்கள் வந்திருக்கிறீர்கள். எங்களைப் பழி வாங்குவீர்களா? வெள்ளையினம் எங்களை வெறுத்தது போல் நாங்கள் வெள்ளையினத்தை வெறுக்கமாட்டோம் என்று உறுதிகூறினார் மண்டேலா. அரசாங்கத்தின் கொள்கையும் அப்படித்தான் அமைந்தது.

அபார்தைட் என்னும் இனஒதுக்கல் ஒழிந்துவிட்டது என்றாலும் அதன் சில வேர்கள் மிக ஆழத்தில் புதைந்துகிடந்ததால், அழிக்கமுடியவில்லை. பல சவால்கள் மண்டேலாவுக்காகக் காத்திருந்தன. முன்னூறு ஆண்டு கால காலனியதிக்கம் ஏற்படுத்தியிருந்த சமத்துவமின்மையைக் களையவேண்டும். மக்களின் அன்றாட வாழ்நிலையில் முன்னேற்றம் காணவேண்டும்.

1998ல் டி கிளார்க் அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொண்டார். பல கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்கம்தான் என்றாலும் ஏ.என்.சி.யே ஆதிக்கம் செலுத்தும் பலத்தைப் பெற்றிருந்தது. ஆரம்பத்தில், இது விமரிசனத்துக்கும் உள்ளானது. ஆனால், மண்டேலா ஜனநாயகத்தை அழுத்தமாக வலியுறுத்தினார். வலிமையான எதிர்க்கட்சி உருவானது. ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டிருந்ததால், அரசாங்கம், அதன் தலைவர் உள்பட அனைத்தையும், அனைவரையும் பத்திரிகைகள் விமரிசனம் செய்தன. நீதிமன்றங்கள் சுதந்தரமாக இயங்க ஆரம்பித்தன.

அரசியலமைப்பு நீதிமன்றம் தனியே நிறுவப்பட்டு, 11 சுதந்தர நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். புதிதாக உருவாகவிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை பரிசீலித்து ஏற்றுக்கொள்ளவோ திருத்தங்கள் செய்யவோ நிராகரிக்வோ இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. 1996ல் அரசியலமைப்புச் சட்டம் உருவானபோது, பரவலான வரவேற்பைப் பெற்றது. ஜனநாயகத்துக்கு மதிப்பு கொடுத்து, பல அடுக்கு பரிசீலனைகள் கடந்தபிறகே, அச்சட்டம் அமலுக்கு வந்தது. இந்த அரசியலமைப்புச் சட்டம், முந்தைய இனஒதுக்கல் சட்டத்துக்கு நேர் எதிர் திசையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவருக்குமான சம உரிமையே அதன் அடிநாதமாக இருந்தது. சமத்துவம், ஜனநாயகம், பொறுப்புணர்வு, சுதந்தரம், ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மை என்று பல கருத்தாக்கங்கள் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.  The Bill of Rights எனப்படும் அம்சம், ஒருவரது தன்மானத்தையும், சமத்துவத்தையும், சுதந்தரத்தையும் உறுதிசெய்கிறது.
Nelson-Mandela.-3
சில அடிப்படை உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியது. அனைவருக்கும் கல்வி. அனைவருக்கும் உடல்நலம். போதிய குடியிருப்பு வசதி. பணியாற்றுவதற்கும் வேலை நிறுத்தம் செய்வதற்குமான உரிமை. தகவல் பெறும் உரிமை. குழந்தைகள் பாதுகாப்பு. இன்னும் பல. ஒருவருடைய நிறம், பால், இனம், சமூகப் பின்னணி, பிறப்பு,  பால் சேர்க்கை, நம்பிக்கை, மொழி, கலாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டப்பட மாட்டாது.

பாலின வேறுபாட்டைக் களைய மண்டேலா அரசாங்கம் தீவிர நடவடிக்கைகள் எடுத்தது. 1984ம் ஆண்டே கட்சி, பாலின வேறுபாட்டுக்கு எதிரான கொள்கையை நிறுவி கட்சிக்குள் அதைக் கடைபிடித்து வந்தது. சிறையில் இருந்தபோதே மண்டேலா பெண்களின் அரசியல் வருகையை, அவர்களது பங்களிப்பை நன்கு அறிந்திருந்தார். ஆப்பிரிக்காவின் பண்டைய வரலாற்றிலும், பல வீரப் பெண்கள் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடியிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார். தனது உரையாடல்களின் போதும், உரையாற்றும்போதும், மிகக் கவனமாக பெண்களுக்கு எதிரான பதங்களை, அவர்களை மட்டும்தட்டும் உவமைகளை களைந்து பாலின வேறுபாட்டைத் தவிர்க்க ஆரம்பித்தார். அரசியலமைப்புச் சட்டம் தொடங்கி அத்தனை அரசு ஆவணங்களிலும் மிகக் கவனமாக ஆண் மைய மொழி கட்டமைப்பை தவிர்த்து, இரு பாலினத்துக்கும் பொதுவான பதங்கள் பயன்படுத்தப்பட்டன. 1996 அரசியலைமைப்புச் சட்டம் உலகின் மிகச் சிறந்த பால் வேறுபாடற்ற ஆவணமாகக் கருதப்படுகிறது.

மண்டேலாவின் ஆட்சி (1994-1999) பல விஷயங்களைச் சாதித்தது. குறைந்த விலையில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. மின்சாரமும் சுத்தமான குடிநீரும் லட்சக்கணக்கான கறுப்பின மக்களுக்குக் கிடைக்கப்பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு இலவச பால் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். குழந்தைகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்பட்டது. யாரும் எங்கும் சென்று சுதந்தரமாக வசிக்கலாம். தொழில் நடத்தலாம். வேலைநிறுத்தம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

அதே சமயம், பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக வெள்ளையர்களே இருந்தனர். தொழில்துறை பெருமளவில் வெள்ளையர்களிடமே இருந்தது. அதாவது, ஆப்பிரிக்கானர்களிடம். வங்கிகளை, பெரும் தொழிற்சாலைகளை தேசியமயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள மண்டேலா தயங்கினார். வங்கிகளை அவர் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதேபோல், வெள்ளையின தொழிலதிபர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளவும் அவர் விரும்பவில்லை.

கட்சியின் கொள்கையின்படி, விடுதலை சாசனத்தில் குறிப்பிட்டிருந்தபடி, Reconstruction and Development Program (RDP) தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் சமத்துவம் நிலவவேண்டும், வளங்கள் மறுபங்கீடு செய்யப்படவேண்டும் போன்றவை இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள். திட்டத்தை அறிவித்துவிட்டாலும், மேலதிகம் முன்னேற்றம் காணமுடியவில்லை.

தபோ ம்பெகி (Thabo Mbeki) போன்றவர்கள்  கொடுத்த அழுத்தத்தால், மண்டேலா ஆர்.டி.பி.யை கலைத்துவிட்டு,  Growth, Employment and Redistribution (GEAR) என்னும் செயல்திட்டத்தை அமல்படுத்தினார். முதலீட்டாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் உகந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதன் மூலம், பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டுவரலாம் என்று மண்டேலா நம்பினார். அதற்கான அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்தன. ஆனால், விரைவில் நிலைமை தடம் மாறியது. 1996 தொடங்கி 2001 வரை 1.3 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அரசு கணக்கிட்டிருந்தது. நிஜத்தில், ஒரு மில்லியன் பேர் தங்கள் வேலையை இழந்தனர்.

உதவி செய்வதாக வாக்களித்திருந்த பல நாடுகள் பின்வாங்க ஆரம்பித்தன. அமெரிக்காவோடு தென் ஆப்பிரிக்காவுக்கு நல்ல உறவு இருந்தது என்றாலும் அது நடைமுறையில் லாபம் ஈட்டித்தரவில்லை. இன்னும் சொல்லப்போனால், தென் ஆப்பிரிக்காவுக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவி, நான்கு மடங்கு சுருங்கிப்போனது. அதே சமயம், தென் ஆப்பிரிக்காவில் தனியார் தொழில்துறையில் முதலீடு செய்ய அமெரிக்கா தயாராக இருந்தது. இதன் பொருள், தங்களுக்கு லாபம் அளிக்கக்கூடிய முதலீடுகளை மட்டுமே தென் ஆப்பிரிக்காவில் அமெரிக்கா மேற்கொள்ளும் என்பதுதான்.

1994 தேர்தல் வாக்குறுதிகளை மண்டேலா மீறினார். அரசாங்கத்திடம் இருந்த துறைகள் சிலவற்றை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். தனியார் தொழில்துறைகளை தேசியமாக்க நிறைய தயங்கிய மண்டேலாவால் இந்த முடிவை தயங்காமல் எடுக்கமுடிந்தது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுத்தமான குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகளை முதல் முறையாகப் பெற்ற ஆப்பிரிக்கர்கள், அவற்றை இழக்கவேண்டிவந்தது. தனியாரிடம் இந்தத் துறைகள் ஒப்படைக்கப்பட்டதால், அவர்கள் கேட்ட தொகையை பல ஆப்பிரிக்கர்களால் அளிக்கமுடியவில்லை.

தனியார்மயமும் உலகமயமும் உள்ளே பரவப் பரவ வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, சுரங்கங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த பலர் வேலையிழந்தனர். மண்டேலா சில மாற்று திட்டங்களைக் கொண்டு வந்து தாற்காலிக நிவாரணம் அளிக்க முயன்றால் என்றாலும் அவை பலனளிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அந்நிய நிறுவனங்களின் சந்தையாக விரிவடைந்ததற்கு ஆப்பிரிக்கர்கள் விலை கொடுக்கவேண்டிவந்தது. இதை மண்டேலா தவிர்க்கவில்லை. தடுக்கவில்லை. கையில் முதலீட்டோடு வரும் முதலாளிகளை வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்ப அவர் தயாராக இல்லை. உள்ளே வரும் அத்தனை பேரும் வெள்ளையர்கள்தாம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

வெளித்தோற்றத்துக்கு, பல பொருளாதார மாற்றங்கள் நிகழ்வது போன்ற தோற்றம் இருந்தாலும், சில குறுகிய கால லாபங்கள் கிட்டினாலும், அடித்தளம் அதிகம் மாறவில்லை என்பதுதான் உண்மை. வெள்ளையர்களின் பொருளாதார பலம் அதிகரித்தது. கறுப்பர்களின் வாழ்நிலையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்றாலும், இந்த முன்னேற்றங்கள் சில புதிய கறுப்பின பணக்காரர்களை மட்டுமே தோற்றுவித்தது. ஏழை ஆப்பிரிக்கர்களின் வாழ்நிலை மாறவில்லை. மண்டேலா இதனை இப்படி எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். ஒரு கட்சிக்குத் தலைமை தாங்குவதும், ஒரு தேசத்தை வழிநடத்துவதும் ஒன்றல்ல. ஒரு நாட்டுக்குத் தலைமை தாங்கும்போது, விட்டுக்கொடுத்துதான் போயாகவேண்டும்.

nelsonmandela4மண்டேலா மீது சில கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன. வெள்ளைக்கார முதலாளிகளுடன் அவர் நெருக்கமாகப் பழகுகிறார், ஜொகன்னஸ்பர்க்கில் ஆடம்பர பங்களாக்களில அவர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறார் போன்றவை அவற்றுள் சில. மண்டேலாவின் நடவடிக்கைகள் இந்த அச்சத்தை உறுதிசெய்வதாக இருந்தன. சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்குப் பதிலாக, விடுதலை சாசனத்தின் அம்சங்களை மெய்ப்பிப்பதற்குப் பதிலாக, நியோ லிபரல் பொருளாதார திட்டங்களை, மேலிருந்து கீழாகச் செயல்படுத்த ஆரம்பித்தார். அனைத்து சீர்திருத்தங்களும் கீழிருந்து மேலாகச் செய்யப்படும் என்பது அவர் முன்பு அளித்திருந்த உறுதிமொழி.

தேர்தல் வாக்குறுதி தொடங்கி அரசியலமைப்புச் சட்டம் வரை பல ஆவணங்களில் சமத்துவம் என்னும் பதம் மிகுந்த ஆரவாரத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சமத்துவமின்மையே அதிகம் காணப்பட்டது. இன்றும்கூட, தென் ஆப்பிரிக்கா சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக இது நீடிக்கிறது. அதேபோல், நில சீர்திருத்தத்தையும் மண்டேலாவால் அமல்படுத்த இயலவில்லை. பல லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் நிறஒதுக்கல் ஆட்சிக்காலத்தில் தங்கள் நிலங்களை இழந்திருந்தனர். அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியை மண்டேலாவால் தொடங்க மட்டுமே முடிந்தது.

எய்ட்ஸ் பேண்டமிக் தென் ஆப்பிரிக்கா முழுவதும் பரவி அந்த தேசத்தை உலுக்கியெடுத்தபோது, அரசாங்கம் பரிதாபமான, கையறு நிலையில் இருந்தது. பாலியல் தொழில் மூலமும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலை மூலமும் ஏழைமை மூலமும் அறியாமை மூலமும் எய்ட்ஸ் வேகமாகப் பரவியது. எய்ட்ஸ் நோய் தாக்கிய கருவுற்ற பெண்களின் விகிதாச்சாரம் (1990) 0.7 என்னும் நிலையில் இருந்து 10.5 (1995) ஆக உயர்ந்து, (1999) 22 சதவீதத்தைத் தொட்டது. என்றால், கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் மாண்டுபோயிருந்தனர் என்று பொருள். தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் இருந்த அரசு நிர்வாகம் இந்த விஷயத்தில் அசிரத்தையுடன் இருந்தது. அரசு நிர்வாகத்தில் நிலவிய ஊழல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. பின்னாள்களில், பதவியில் இருந்து இறங்கிய பிறகு, மண்டேலா எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு தனது முந்தைய தவறுகளைச் சரிசெய்தார்.

மண்டேலா எடுத்த துணிச்சலான நடவடிக்கை, Truth and Reconciliation Commission (TRC) என்னும் அமைப்பை ஏற்படுத்தி, 1960 முதல் 1993 வரை நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள சொன்னது. இனஒதுக்கல் ஆட்சியின்போது தென் ஆப்பிரிக்கா அடைந்த பாதிப்பை, பெற்ற இழப்பை கணக்கிடுவதற்காகவும், தவறுகளை அடையாளம் காணவும், அவற்றை மீண்டும் செய்யாமல் இருக்க உதவவும் இந்த ஆய்வுகள் பயன்படும் என்று மண்டேலா நம்பினார். தவறிழைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்றும் மண்டேலா அறிவித்தார். சர்வதேச அளவில் இதற்கு நல்ல வரவேற்பு கிட்டியது.

அதேபோல், தென் ஆப்பிரிக்காவின் கலாசார பெருமையை மீட்டெடுக்கும் முயற்சிகளை மண்டேலா மேற்கொண்டார். முன்பெல்லாம் அருங்காட்சியகங்களில் வெள்ளையர்களின் பெருமையை, சாதனைகளைப் பறைசாற்றும் கலைப்பொருள்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. வரலாற்றைத் திருத்தி எழுதுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருந்தது. மண்டேலா இந்த வழக்கத்தை மாற்றினார். 1997ல் ரோபன் தீவுக்குச் சென்ற மண்டேலா, அங்கே ஒரு பாரம்பரிய அருங்காட்சியகத்தை நிறுவினார். இனஒதுக்கலின் நினைவுகளை, அதற்கெதிரான போராட்டத்தை நினைவூட்டும் சின்னமாக அந்தத் தீவு மாறியது.

உலக அரங்கிலும் பிரபலமான ஒரு தலைவராகவே மண்டேலா வலம் வந்தார். அணுஆயுதப் பரவலாக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். வட அயர்லாந்து, காங்கோ, அங்கோலா ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக தென் ஆப்பிரிக்கப் படைகளை அனுப்பி அத்தேசங்களின் அச்சத்தை நீக்கினார். மனித உரிமைகளையும் அறத்தையும் மண்டேலா அரசு உலக அளவில் உயர்த்திப் பிடித்தது.

துண்டிக்கப்பட்டு கிடந்த தென் ஆப்பிரிக்காவை ஆப்பிரிக்கக் கண்டத்தோடு சேர்த்து பொருத்தினார். பலர் இதனை வரவேற்றனர் என்றாலும் சில ஆப்பிரிக்க நாடுகள் இதை தென் ஆப்பிரிக்காவின் மேலாதிக்க நோக்கமாக எடுத்துக்கொண்டன. சர்வதேச உறவுகளில் மண்டேலா எடுத்த சில முடிவுகள் குழப்பமானவை. தைவான், நிறஒதுக்கல் கால தென் ஆப்பிரிக்காவில் பெரிய அளவில் முதலீடு செய்திருந்தது. ஏ.என்.சி.க்கும் கணிசமான அளவுக்கு நிதியுதவி செய்து அவர்கள் நம்பிக்கையை ஈட்டியிருந்தது. பிரிதொரு சமயம், மண்டேலா பெய்ஜிங் சென்றிருந்தபோது, சீனாவின் பிரமாண்டமான பளபளப்பைக் கண்டு சொக்கிப்போனார். சீனாவோடு உறவு வளர்த்துக்கொள்ள தன் விருப்பத்தை அவர் தெரிவித்தபோது, சீனா கறாராகச் சொல்லிவிட்டது. உங்களுக்குத் தைவான் வேண்டுமா சீனா வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஒரே சமயத்தில் இரண்டோடும் நீங்கள் கூட்டு வைத்துக்கொள்ளமுடியாது. தயங்காமல், தைவானைக் கத்தரித்துவிட்டு பெய்ஜிங்கோடு கைகுலுக்கிக்கொண்டார் மண்டேலா.

ஜனநாயகத்தை மீட்க உதவுவதாகச் சொல்லி பக்கத்து லெசோத்தாவுக்கு தென் ஆப்பிரிக்கா அனுப்பிய படைகள், அங்கே தேவையற்ற சேதத்தை ஏற்படுத்தியது. உலக அமைதிக்கு உரக்கக் குரல் கொடுத்த அரசாங்கத்தால் ஆயுத வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளமுடியவில்லை. 1995ல் நைஜீரிய சர்வாதிகாரி அபாச்சா, புகழ்பெற்ற எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான கென் சரோ விவாவைக் (Ken Saro-Wiwa) கொன்றபோது, மண்டேலா அமைதியாக இருந்தார். அதற்காக விமரிசிக்கப்பட்டார்.

1994ல் மண்டேலா வின்னியை துணை அமைச்சராக நியமனம் செய்தார். அரசாங்கத்தை வின்னி விமரிசனம் செய்தபோது, அவர் நீக்கப்பட்டார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டனர். வின்னியை விவாகரத்து செய்தது பெரிய அளவில் ஊடகங்களில் வந்து மண்டேலாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.  ஜூலை 18, 1998 அன்று தனது எண்பதாவது பிறந்தநாளில், Graca Machel என்பவரை மண்டேலா திருமணம் செய்துகொண்டார்.

அதே 1998ம் ஆண்டு, விவாகரத்துப் பெற்ற மண்டேலாவின் முதல் மனைவி எவிலின், ஓய்வுபெற்ற ஒரு தொழிலதிபரை மணம் செய்துகொண்டார். தெற்கு ஜொகன்னஸ்பர்கில் இவர்கள் வசித்துவந்தனர். ஏப்ரல் 30, 2004ல் சுவாசக் கோளாறு ஏற்பட்டு எவிலின் இறந்துபோனார். மண்டேலா அப்போது டிரினிடாட் அண்ட் டொபேகோவில் இருந்தார். 2010 உலக கால்பந்து போட்டி நடைபெறும் நாடு தென் ஆப்பிரிக்காவாக இருக்கவேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்காக அவர் அங்கே பிரசாரம் செய்துகொண்டிருந்தார். செய்தி அறிந்ததும் பயணத்தை ரத்து செய்துவிட்டு இறுதி சடங்குகளில் கலந்துகொண்டார்.

விவாகரத்து பெற்ற பிறகு, எவிலின் ஊடகங்களில் வாய் திறந்து எதுவும் பேசியதில்லை. அவர் பேசியது ஒரே முறை. 1994ம் ஆண்டு, தென் ஆப்பரிக்காவின் முதல் ஜனநாயக தேர்தல் நடைபெற்றபோது தனது கருத்தை அவர் வெளியிட்டிருந்தார். இன்று, ஆப்பிரிக்கர்கள் சுதந்தரமாக வாக்களிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் மண்டேலாதான்!

(தொடரும்)
நன்றி தேனீ

No comments: