இலங்கைச் செய்திகள்



  • பிரித்தானிய பிரஜை கொலை ; தங்காலை பிரதேச தலைவருக்கு விளக்கமறியல்

  • கணிதத்துறையில் தேசிய ரீதியில் யாழ். மாணவர் முதலாமிடம்

  • இணக்கப்பாட்டுடன் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கித் தீர்வு காண வேண்டும் - அமைச்சர் வாசுதேவா

  • சடலத்துடன் யாழ். சென்ற பதினொரு பேரைக் காணவில்லை: அதிர்ச்சித் தகவல்

  • சடலத்துடன் யாழ். சென்ற 11 பேரைக் காணவில்லை : உரிய பதிவு இல்லையெனத் தெரிவிப்பு






பிரித்தானிய பிரஜை கொலை ; தங்காலை பிரதேச தலைவருக்கு விளக்கமறியல்


28/12/2011

பிரித்தானிய பிரஜை ஒருவரின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் சந்திரபுஷ்ப, விதானபத்திரண உள்ளிட்ட இரு சந்தேக நபர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு சந்தேகநபர்களும் நேற்று முன்தினம் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சந்தேக நபர்களை அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி


கணிதத்துறையில் தேசிய ரீதியில் யாழ். மாணவர் முதலாமிடம்
 30/12/2011

2011 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சையில் கணிதத்துறையிலும், விஞ்ஞானத் துறையிலும் யாழ். மாணவர்கள் இருவர் முதலாம் இரண்டாமிடங்களை தேசிய ரீதியில் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேசிய ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, உயிரியல் விஞ்ஞானம், கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த பிரமித் ஷசிந்த ருவனோத்திரன முதலாமிடத்தையும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆனந்தராஜா சஞ்ஜயன் இரண்டாம் இடத்தையும் முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த முஹமட் சலீம் பாத்திமா ஷாலிதா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

கணிதப் பிரிவில், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியைச்சேர்ந்த கமலக்கண்ணன் கமலவாசன் முதலாமிடத்தையும், கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த நுஷென் மனித்யா செனவிரட்ன இரண்டாமிடத்தையும், கண்டி தர்மராஜா வித்தியாலத்தைச் சேர்ந்த அமில ருவன் சிறி சில்வா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

வர்த்தகப்பிரிவில், டெபராவௌ மகா வித்தியாலயம் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்த கமகே இஷாரா டில்கானி முதலாமிடத்தையும், காலி ரிக்மன் வித்தியாலயத்தைச் சேர்ந்து ரவிந்து சுபுன் லியனகே இரண்டாமிடத்தையும் கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஒசந்த லக்ஷன மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

கலைப்பிரிவில், கேகாலை சென். ஜோர்ஜ் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சஷிந்தனி கௌசல்யா சேனநாயக்க முதலாமிடத்தையும் காலி சௌத் லண்ட்ஸ் வித்தியாலயத்தைச் சேர்ந்த சமிந்திர உமேஷா இரண்டாம் இடத்தையும், நீர்கொழும்பு நியூ ஸ்டெட் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சந்திமாலி பெரேரா, மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

நன்றி வீரகேசரி



இணக்கப்பாட்டுடன் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கித் தீர்வு காண வேண்டும் - அமைச்சர் வாசுதேவா

31/12/2011

ரசியல் தீர்வில் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளைக் கையாண்டு அரசாங்கம் புதுவருடத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கிவிடும் என்று அமைச்சர் வாசுதேவநாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பரந்தளவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. விரைவில் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக தீர்வு வந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் வாசுதேவநாணயக்கார தொடர்ந்தும் கூறுகையில், அரசியல் தீர்வு என்பது நாட்டிற்கு அத்தியாவசிய விடயமாகவே காணப்படுகின்றது. இதனால் தான் அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றது.
அடுத்தாண்டில் நிச்சயம் தீர்வு வந்து விடும். இதற்குத் தடையாக உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இணக்கப்பாட்டுடன் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
உதாரணமாக சிறு குற்றங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்க வேண்டும். காணி அதிகாரத்தில் மத்திய அரசிற்கும் மாகாண சபைக்கும் இடையில் பொது சுயாதீன ஆணைக்குழு ஊடாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இதனை ஒரு யோசனையாகவே கூற விரும்புகின்றேன்.
விரைவில் அரசியல் தீர்வை வழங்க முடியாமைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மீதான பிரச்சினையே காரணமாகும்.
இதனைத் தொடர்ந்தும் இழுபறி நிலையில் வைத்துக் கொள்ள முடியாது. புது வருடத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும். இதனூடாக விரைவில் தமிழ் மக்களின் அரசியல் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவேண்டும்.
அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் எனக் கூறினார்.
நன்றி வீரகேசரி


சடலத்துடன் யாழ். சென்ற பதினொரு பேரைக் காணவில்லை: அதிர்ச்சித் தகவல்

29/12/2011 10:54:05 AM
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலத்தையும் அதனுடன் கூட வந்த பதினொருபேரையும் காணவில்லையென சுன்னாகம் மற்றும் புளியங்குளம் பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது.

இச்சம்வம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இந்தியாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த 18 ஆம் திகதி மட்டக்களப்பை வாழ்விடமாகவும் ஏழாலையைப் பிறப்பிடமாகவும் கொண்ட க.தனஞ்சயன் (வயது-38) என்பவர் மரணம் அடைந்துள்ளார்.

இவருடைய சடலம் 19ஆம் திகதி நண்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டு அங்கிருந்து தனியார் வாகனத்தின் மூலம் யாழ்ப்பாணம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஏழாலை மேற்கில் உள்ள ஒன்றுவிட்ட சகோதரியின் வீட்டில் மரணக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உறவினர்களுக்கும் மரண அறிவித்தல் தெரிவிக்கப்பட்டு பந்தல் போடப்பட்டு உரிய நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

இந் நிலையில் 20ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் தாம் பிரேதத்துடன் ஓமந்தைக்கு வந்துவிட்டோம் என்று இறந்தவரின் சகோதரி ஏழாலையில் உள்ள உறவினர்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

பின்னர் பகல் 11 மணியளவில் பனிக்கம் களத்தில் சடலம் கொண்டு வந்த வாகனத்தின் நான்கு சில்லுகளின் காற்றும் போன நிலையில் நிற்பதாகவும் வாகனத்தின் சில்லுகள் நான்கையும் ஒட்டிக்கொண்டு புறப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட நபர் தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் சடலமும் உறவுகளும் வருவார்கள் என்று காத்திருந்த வேளையில் மீண்டும் பிற்பகல் 5 மணியளவில் குறிப்பிட்ட சகோதரி வாகனத்தின் ரயர்கள் மாற்றி விட்டோம் வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. அதனைப் பார்த்துக்கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

இரவு முழுவதும் தொடர்புகள் எவையும் கிடைக்காத நிலையில் 21 ஆம் திகதி காலையில் தம்மை யாரோ சடலத்துடன் கடத்திச்சென்று காட்டில் வைத்திருப்பதாகத் தெரிவித்ததுடன் கையடக்கத் தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏழாலையில் உள்ள உறவினர்கள் எடுத்த முயற்சிகள் எவையும் கைகூடாத நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று தமது முறைப்பாட்டைத் தெரிவிக்க முற்பட்டுள்ளார்கள்.

சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்ட முறைப்பாட்டை எடுக்க மறுத்ததுடன் அவர்களை புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்று முறையிடும் படியும் தெரிவித்துள்ளார்கள். இந் நிலையில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் குறிப்பிட்ட விடயம் உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூலம் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்ட விடயம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் உதவி அத்தியட்சரின் கவனத்திற்கு கிராம அலுவலர்கள் கொண்டு வந்த நிலையில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் விடுத்த பணிப்புரையைத் தொடர்ந்து குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உரியவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பி;ட்ட வாகனத்தில் இறந்தவரின் மனைவியும் பத்து வயதுக்கு உட்பட்ட மூன்று பிள்ளைகள் திருகோணாமலை செயலகத்தில் அமைந்துள்ள நிக்கொட் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரான நிரஞ்சன் மற்றும் மனைவி மூன்று பிள்ளைகள் (பத்து வயதுக்கு உட்பட்டவர்கள்) சகோதரி உட்பட மற்றும் உறவினர் ஆகியோரே காணாமல் போயுள்ளவர்களாவர்.

சுமார் பத்து நாட்கள் கடந்த நிலையிலும் கூட குறிப்பிட்ட நபர்களுக்கோ அன்றி கொண்டுவரப்பட்ட சடலத்துக்கோ வாகனத்துக்கோ சாரதிக்கோ என்ன நடந்தது என்று தெரியாத நிலைமை உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் துன்பமாகவும் அமைந்துள்ளது. குறிப்பிட்ட வைத்தியரின் கணவர் இறந்தவரை கடந்த சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் வெட்டி படுகாயப்படுத்தியதன் தாக்கத்தினால் ஏற்பு வலி வந்த நிலையில் இந்தியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் இறந்தவரின் சகோதரியும் கணவரும் வைத்தியர்களாக இருந்த போதிலும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் இறந்தவர் தனது சகோதரியானவருக்கு உதவியாக இருப்பது கணவருக்குப் பிடிக்காத நிலையில் ஏற்கனவே தாக்கப்பட்டதாகவும் இதன் பின்புலத்தில் இந்த சடலமும் உறவினர்களும் கடத்தப்பட்டதா என்ற சந்தேகமும் தற்போது உறவினர்களிடையே ஏற்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி



சடலத்துடன் யாழ். சென்ற 11 பேரைக் காணவில்லை : உரிய பதிவு இல்லையெனத் தெரிவிப்பு


29/12/2011 5:42:35 PM

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலத்தையும் அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் மற்றும் புளியங்குளம் பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தியொன்று இன்றுகாலை எமது இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதன் பின்னணியில் எமது அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்புகளையடுத்து இவ்விடயம் தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டோம்.

மேற்படி சம்பவம் தொடர்பில் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக தாம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜா வீரகேசரி இணைய தளத்துக்குத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்தபோது,

'சம்பவ தினத்தில் குறிப்பிட்ட பெயர் கொண்ட எந்தவொரு சடலமும் இலங்கைக்கு வந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவுகள் எதுவும் இல்லை.

ஓமந்தை பொலிஸ் சோதனைச் சாவடியிலும் எந்தவொரு பதிவுகள் இல்லை. மேலும் காணாமல் போன பதினொரு பேரில் ஒருவரான திருகோணமலை செயலக நிக்கொட் நிறுவனத்தில் பணிபுரியும் நிரஞ்சன் எமது அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி, இந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை எனத் தெரிவித்தார். இது குறித்து எமது திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்திடம் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

டாக்டர் விமலச்சந்திரா குமுதா தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவரது மின்னஞ்சல் முகவரி கிடைக்கபெற்றுள்ளதாகவும் நாம் அறிந்து கொண்டோம். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நாளை நடத்த உள்ளோம்" என்று கூறினார்.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அதிகாரியொருவர் தகவல் தருகையில்>

"குறிப்பிட்ட தினத்தில் சம்பந்தப்பட்ட சடலம் தொடர்பில் எவ்வித பதிவும் இல்லை" என வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி




No comments: