உலகச் செய்திகள்

.

  • அதிவேக ரயிலை உருவாக்கியுள்ள சீனா
  • பாலியல் நோயை பரப்பிய கொலம்பஸ்?
  • துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி




அதிவேக ரயிலை உருவாக்கியுள்ள சீனா

27/12/2011

சீனா மணித்தியாலத்திற்கு 500 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயிலை உருவாக்கியுள்ளது. உலகில் அதிவேக ரயில் போக்குவரத்தினை மேற்கொள்ளும் நாடுகளுள் சீனாவும் ஒன்று.

சீனாவில் முன்னணி அதிவேக ரயி்ல் தயாரிப்பு நிறுவனமான சி.எஸ்.ஆர்.கோர்ப்பரேசன் லிமிடெட் என்ற நிறுவனம் மணிக்கு 500 கி.மீ.வேகம் செல்லக்கூடிய ரயிலை தயாரித்துள்ளது.

இதன் மேற்பரப்புமுழுவதும் பிளாஸ்டிக்கினாலும், பைபர் கண்ணாடியாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவின் ஷங்காய்- பெய்ஜிங் மாகாணங்களுக்கிடையே மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ரயிலே உலகின் அதிக வேக ரயிலாகத் திகழ்கின்றது.

நன்றி வீரகேசரி

பாலியல் நோயை பரப்பிய கொலம்பஸ்? _

29/12/2011
அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் என போற்றப்படும் கிறிஸ்தோபர் கொலம்பஸின் வருகையை அடுத்தே பால்வினை நோயான மேக நோய் ஐரோப்பாவுக்கு பரவியதாக புதிய ஆய்வறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்க மற்றும் கொலம்பிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளே இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.

எலும்புக் கூடுகளை ஆய்வுக்குட்படுத்தி பெறப்பட்ட புதிய சான்றை அடிப்படையாகக் கொண்டே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமது ஆய்வில் 1492 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஐரோப்பாவில் மேக நோய் பரவியதற்கான சான்றுகள் எதுவும் தகக்குக் கிடைக்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பாவுக்கு கொலம்பஸ் திரும்பி 3 ஆண்டுகள் கழித்தே 1495 ஆம் ஆண்டு மேக நோய் முதன் முதலாக அங்கு பரவியமைக்கான சான்றுகள் தமக்கு கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேக நோய் 1493 ஆம் ஆண்டு கொலம்பஸ் அமெரிக்காவிலிருந்து திரும்புவதற்கு முன்னரே ஐரோப்பாவில் பரவியதாக ஏற்கனவே விவாதங்கள் நிலவுகின்ற நிலையிலேயே இந்தப் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

நன்றி வீரகேசரி
 
துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி



30 /12/2011

துருக்கியில் ஈராக் எல்லையில் உள்ள ஒரு குர்திஷ் கிராமத்தினருகே புதன்கிழமை இரவு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் சுமார் 35 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.


துருக்கி இராணுவம், குர்திஷ் தீவிரவாதிகளென சந்தேகிக்கப்படுவோரே தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால், தாக்குதலில் பலியானவர்கள் ஈராக்கிலிருந்து துருக்கிக்கு சிகரெட் கடத்தலில் ஈடுபடும் கிராமத்தவர்கள் என நம்பப்படுகிறது.

இத்தாக்குதல் துருக்கியின் தென்கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை,விமானத் தாக்குதல் தவறுதலாக பொதுமக்கள் மீது இடம்பெற்றதை துருக்கிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

குர்திஷ் தீவிரவாதிகள் துருக்கியின் பாதுகாப்புத் தளங்களைத் தாக்க திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நிலையிலேயே புதன் இரவு தாக்குதல் தொடுக்கப்பட்டதாக துருக்கி பொது ஊழியர் சங்க அறிக்கை தெரிவிக்கிறது.

குர்திஷ் சார்பு அமைதி மற்றும் ஜனநாயகக் கட்சி, கொல்லப்பட்டவர்கள் 16 முதல் 20 வயதுடைய சிவிலியன்கள் என்றும் இது ஒரு படுகொலை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி





No comments: