இலங்கைச் செய்திகள்


* வடக்கில் அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சி

* ஜே.வி.பி.தலைவரின் கவனத்துக்கு

* அநுராதபுரம் சிறையில் இந்துக் கோவில் இடிக்கப்பட்டமை குறித்து உடனடி விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் பாராளுமன்றத்தில் ஜயலத் ஜயவர்த்தன வலியுறுத்தல்


* இலங்கையில் மிகப் பெரிய முருகனுக்கு கும்பாபிஷேகம் (பட இணைப்பு)

* அரசியல் தீர்வை முன்வைக்க இதுவே பொருத்தமான தருணம் தமிழ்க் கூட்டமைப்புடனான சந்திப்பில் கூறினார் அகாசி

* பிரதியமைச்சரும் தண்ணீர்ப் போத்தலும்


வடக்கில் அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சி


ரொபட் அன்டனி 29/11/2011

வட மாகாணத்தின் 100 அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான செயலமர்வு ஒன்று டிசம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி திணைக்களத்தில் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனம் ஆரம்பித்துள்ள 10 நாட்கள் மொழிப் பயிற்சி வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுகின்ற தமிழ் மொழிமூல அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்க திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெற்கில் அரச ஊழியர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கவும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்கவும் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்படுகின்றது.

நன்றி வீரகேசரி


ஜே.வி.பி.தலைவரின் கவனத்துக்கு
Tuesday, 29 November 2011

 இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டிய பொறுப்புடைமை குறித்து கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளினால் கிளப்பப்பட்டு வருகின்ற சர்ச்சைகள் தொடர்பில் பெருமளவுக்கு மௌனத்தைச் சாதித்து வந்த ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தற்போது போர்க்குற்றங்கள் என்று கூறப்படுபவை தொடர்பில் விசாரணைகளை நடத்தவேண்டுமென்று கோரிக்கை விடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்தவாரம் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பொறுப்புடைமை குறித்த விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டிய தேவையை அரசாங்கம் உணருவதாகவும் நம்பகத்தன்மையான முறைப்பாடுகள் செய்யப்படும் பட்சத்தில் உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்தத் தயாராயிருப்பதாகவும் கூறிய பிறகே போர்க்குற்றங்கள் பற்றி வாய் திறப்பதற்கு ஜே.வி.பி.யின் தலைவருக்கு துணிச்சல் வந்தது போலிருக்கிறது.


பி.பி.சி.யின் சந்தேசியவுக்கு பேட்டியொன்றை அளித்த அமரசிங்க "போர் ஒன்றைச் செய்யும் போது போர்க் குற்றங்கள் இடம்பெறவே செய்யும், இதை பாதுகாப்புச் செயலாளரும் கூட ஒத்துக் கொண்டிருக்கிறார். போரின் விளைவாக மரணமடைந்த குடிமக்கள் பற்றிய கணக்கெடுப்பொன்றை அரசாங்கம் செய்திருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் அறிவித்திருக்கிறார். இந்தக் கணக்கெடுப்புக் கூட அரசாங்கத்துக்கு ஜே.வி.பி. கொடுத்த நெருக்குதல்களின் விளைவேயாகும். அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுக்களில் எமக்கு நம்பிக்கையில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைப் படைகளை ஆதரித்து நின்ற ஜே.வி.பி.யின் செயல் நியாயமானதே. போர்க்குற்றங்கள் என்று கூறப்படுபவை குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கோருவதில் சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுடன் நாம் இணைந்துகொள்ள மாட்டோம். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உகந்த பாணியிலான விசாரணையை நடத்துமாக இருந்தால் சர்வதேச விசாரணைக்கான அவசியம் ஏற்படாது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முழுவீச்சில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தூண்டுதல் கொடுத்ததில் தங்களின் பங்கு குறித்து ஜே.வி.பி.யின் தலைவர்கள் எப்போதுமே பெருமைப்படுவதை நாமெல்லோரும் கண்டிருக்கின்றோம். சந்தேசியவுக்கு அளித்த பேட்டியிலும் அமரசிங்க போரில் அரசாங்கப் படைகளுக்கு தாங்கள் அளித்த ஆதரவை நியாயப்படுத்தியே கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், இலங்கைப் படைகள் போர்க் குற்றங்களை இழைத்ததாக ஜே.வி.பி. ஒருபோதுமே கருத்துத் தெரிவித்ததில்லை. போர்க் குற்றச்சாட்டுக்கள் என்று சொல்லப்படுபவை தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யுமாறு தற்போது அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கும் அமரசிங்க அந்தப் "போர்க்குற்றங்கள்' தாங்கள் ஆதரித்த போரில்தான் இடம் பெற்றிருக்கக்கூடியவை என்பதை மறந்துவிடக்கூடாது. போரின் முடிவுக்குப் பிறகு இரண்டரை வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையில் இன்று இலங்கையின் எந்தப் பகுதியிலும் சட்டத்தின் ஆட்சியோ, ஜனநாயகமோ இல்லை என்று ஜே.வி.பி.யின் தலைவர்கள் கூறுவதைக் கேட்கும் போது இன்றைய நிலைமைக்கு வழிவகுத்த அரசியல் இராணுவச் செயன்முறைகளுக்கு தங்களால் வழங்கப்பட்டிருக்கக் கூடிய பங்களிப்புக் குறித்தும் பின்னோக்கிப் பார்க்க வேண்டுமென்று அவர்களைக் கேட்காமல் இருக்க எம்மால் முடியவில்லை.

அந்தத் தவறுகளுக்கெல்லாம் பிராயச்சித்தமாக ஜே.வி.பி.யின் தலைவர்கள் ஒரு உருப்படியான அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டுமென்று அவர்களை வேண்டிக்கொள்கிறோம். போருக்கு அடிப்படைக் காரணமாக அமைந்த தேசிய இனப்பிரச்சினைக்கு நிலைபேறானதாக அமையக் கூடிய தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண வேண்டியதன் அவசியம் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் ஆரோக்கியமான அரசியல் பிரசார இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். இதைச் செய்யாமல் தென்னிலங்கையிலோ அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியிலுமோ ஜனநாயக மீட்சி ஏற்படுமென்று ஒருபோதுமே எதிர்பார்க்க முடியாது
நன்றி தினக்குரல்


அநுராதபுரம் சிறையில் இந்துக் கோவில் இடிக்கப்பட்டமை குறித்து உடனடி விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் பாராளுமன்றத்தில் ஜயலத் ஜயவர்த்தன வலியுறுத்தல்

Tuesday, 29 November 2011

 அநுராதபுரம் சிறைச்சாலையில் இந்துக் கோவில் இடிக்கப்பட்டமை தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும் போதே ஜயலத் ஜயவர்த்தன இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பேசுகையில்;

வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ரூபாவின் நாணய பெறுமதி மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. நாணய மதிப்பிறக்கம் என்பது அமெரிக்கா, சீனா போன்ற ஏற்றுமதிகளை அதிகம் கொண்ட நாடுகளுக்கு சிறப்பானதாக அமையலாம். எனினும் இலங்கை போன்ற இறக்குமதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளுக்கு இது சரிவராது. இலங்கையின் ஏற்றுமதி சிறியளவிலேயே காணப்படுகிறது.

நாணய மதிப்பிறக்கத்தால் பால்மா உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கும். இதனால் அப்பாவி மக்களே பாதிக்கப்படுவர்.

நாட்டில் சட்ட அமுலாக்கத்தை எடுத்துக் கொண்டால் பொலிஸ் திணைக்களமே அதில் முக்கிய அங்கமாக இருக்கிறது. குற்றஞ் செய்தவர்களைக் கண்டறிந்து கைது செய்து நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் செய்ய வேண்டியது பொலிஸாரின் கடமையே தவிர இதை சட்டத்தரணிகள் செய்ய முடியாது.

இந்த நிலையில் இன்று சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவும் இல்லை. ஏனெனில் அதற்கான 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதை ரத்துச் செய்து தான் அரசாங்கம் தனக்கு ஏற்றவகையில் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர். அங்கு இருந்த இந்துக் கோவில் இடித்து உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது பற்றி சிறைச்சாலை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்குள்ளவர்கள் விளக்கமறியல் கைதிகளே தவிர இன்னும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படவில்லை. இந்த நிலையில் யாராக இருந்தாலும் அவர்கள் அவரவர்க்குரிய மதத்தினை வழிபடுவதற்கான உரிமை இருக்க வேண்டும் என்றார்.
நன்றி தினக்குரல்


இலங்கையில் மிகப் பெரிய முருகனுக்கு கும்பாபிஷேகம் (பட இணைப்பு)


30/11/2011

இறக்குவானை ஸ்ரீகதிர்வேலாயுத ஆலயத்தின் 12அடி உயரம் கொண்ட இலங்கையில் மிகப் பெரிய முருகன் சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு இந்த வைபவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


நன்றி வீரகேசரி

அரசியல் தீர்வை முன்வைக்க இதுவே பொருத்தமான தருணம் தமிழ்க் கூட்டமைப்புடனான சந்திப்பில் கூறினார் அகாசி

Wednesday, 30 November 2011

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசியைக் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வை வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் தாமதம் உட்பட முக்கிய பல விடயங்கள் குறித்து அவருக்கு விபரித்துள்ளது.

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 7 கூட்டமைப்பு எம்.பி.க்கள் அகாசியை நேற்று சந்தித்தனர்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற விவகாரம், வடக்கு, கிழக்கின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரச்சினை யுத்தம் முடிவடைந்த நிலையில் அரசியல் தீர்வை வழங்குவதில் காட்டப்படும் தாமதம் உட்பட பல விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அரசாங்க அதிகாரிகள், பிரதிநிதிகளுடனான தனது சந்திப்புகளில் இந்த விடயத்தை ஆராய்வதாக அகாசி தமிழ்க் கூட்டைமப்பினரிடம் உறுதியளித்ததாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். நிரந்தர அரசியல் தீர்வை உடனடியாக முன்வைப்பது தொடர்பாகவும் அரச அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அகாசி உறுதியளித்திருக்கிறார்.

மோதல் முடிவடைந்து 3 வருடங்களை அண்மித்துள்ள நிலையில் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு இதுவே உகந்த காலம் என்று அகாசி குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி தினக்குரல்

பிரதியமைச்சரும் தண்ணீர்ப் போத்தலும்

Thursday, 01 December 2011

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2012 வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் சபைக்குள் ஏற்பட்ட கைகலப்புகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி தண்ணீர்ப் போத்தலொன்றை வீசிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட எம்.பி.யும் பெற்றோலிய கைத்தொழில் பிரதியமைச்சருமான சரண குணவர்தனவை ஒருவார காலத்துக்கு பாராளுமன்றம் இடைநிறுத்தம் செய்திருக்கிறது. ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்ட உரையின்போது குழப்பம் விளைவித்தமைக்காக குணவர்தனவை இடை நிறுத்தம் செய்வதற்கான பிரேரணையை சபை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான நிமால் சிறிபாலடி சில்வா நேற்று முன்தினம் காலை முன்மொழிந்ததையடுத்து சபை அதை அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து இடை நிறுத்த அறிவிப்பை சபாநாயகர் சமால் ராஜபக்ஷ செய்தார். பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 72 (1) மற்றும் 74 (2) பிரிவுகளின் கீழேயே பிரதியமைச்சருக்கு எதிரான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


ஜனாதிபதி ராஜபக்ஷ உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது எதிரணி எம்.பி.க்களில் ஒரு குழுவினர் சில போஸ்டர்களை உயர்த்திப் பிடித்த வண்ணம் காணப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆளும்கட்சி எம்.பி.க்களில் ஒரு குழுவினர் அந்த போஸ்டர்களைப் பறிப்பதற்கு முயற்சித்ததையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு மூண்டது. கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் சமூகத்தினரில் அதிக பெரும்பான்மையானவர்கள் பார்வையாளர் கலரியில் இருந்த வேளையிலேயே எமது எம்.பி.க்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தனர். களேபரத்துக்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். களேபரத்தின் போது ஒரு கட்டத்தில் சபையின் ஆளும் தரப்பு பக்கமிருந்து எதிரணியை நோக்கி தண்ணீர்ப் போத்தலொன்று வீசப்பட்டது. அப்போத்தல் ஜனாதிபதிக்கு அருகாக விழுந்ததில் தண்ணீர் அவர் மீது தெறித்தது. போத்தல் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்திராத ஜனாதிபதி படைக்கலச் சேவிதரை அழைத்து பார்வையாளர் கலரியில் இருந்து தான் போத்தல் வீசப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியதைத் தொலைக்காட்சியில் வரவுசெலவுத் திட்ட உரை நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்த எம்மெல்லோராலும் கேட்கக்கூடியதாக இருந்தது.

நேற்று முன்தினம் காலை பாராளுமன்றம் கூடிய போது வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று சபைக்குள் குழப்பம் விளைவித்த எம்.பி.க்களின் நடத்தைகளைக் கடுமையாகக் கண்டனம் செய்த சபாநாயகர் ராஜபக்ஷ அத்தøகய நடத்தைகள் பாராளுமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவும் எம்.பி.க்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் கவலை வெளியிட்டார். போத்தல் வீசப்பட்ட சம்பவம் குறித்து தானும் பிரதி சபாநாயகரும் விசாரணை செய்ததாகவும் மீண்டும் இத்தகைய முறைகேடான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் பாரம்பரியங்களையும் பாதுகாப்பதற்கும் சபைக்குள் ஒழுங்கு கட்டுப்பாட்டை பேணுவதற்குமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விதப்புரைகளைச் செய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

எமது எம்.பி.க்கள் சபைக்குள் அடாவடித்தனங்களில் ஈடுபடுவது ஒன்றும் புதிய விடயமல்ல. அவர்களின் அடாவடித்தனங்களுக்கும் அமளிதுமளிக்கும் என்று ஒரு பிரத்தியேகமான வரலாறே இருக்கிறது. பாராளுமன்றத்திற்குள் இடம்பெற்றிருக்கக்கூடிய அநாகரிகமான செயற்பாடுகள் குறித்து சபாநாயகர் கவலையும் கண்டனமும் தெரிவிப்பது இதுதான் முதற்தடவையும் அல்ல. தற்போதைய சபாநாயகர் மாத்திரமல்ல, முன்னைய சபாநாயகர்களும் எம்.பி.க்களின் அடாவடித்தனங்கள் குறித்து அடிக்கடி கண்டனங்களைத் தெரிவித்து வந்ததை நாமெல்லோரும் அறிவோம். வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று கைகலப்புகளிலும் கழுத்து நெரிப்புகளிலும் ஈடுபட்ட சகல உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முன்னைய பல தடவைகளில் இதேசபாநாயகரின் முன்னிலையில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டு சபையின் செயற்பாடுகளைக் குழப்பியடித்த பல எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அக்கறைகாட்டப்பட்டதையும் நாடு காணவில்லை. உண்மை நிலை அவ்வாறிருக்க தண்ணீர்ப் போத்தலொன்றை எறிந்த பிரதியமைச்சருக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் ஒரு வாரகாலத்துக்கு சபையில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார். நாட்டின் தலைவர் சபையில் பிரசன்னமாகாமல் இருந்திருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சர் தண்ணீர்ப் போத்தலை அவ்வாறு எறிந்திருந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில் அக்கறை காட்டப்பட்டிருக்குமா? இக் கேள்வியைக் கேட்காமல் இருக்க எம்மால் முடியவில்லை. ஏனென்றால் , எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தின் முன்பாக மலர் வளையம் வைத்தவர்கள், பிக்கு எம்.பி.மாரைத் தாக்கியவர்கள் , செங்கோலை எடுத்துத்துக்கொண்டு ஓடியவர்கள் எல்லோரும் கிரமமாக சபைக்குவந்து போகிறார்களே. பிரதியமைச்சருக்கு எதிரான நடவடிக்கை ஏனைய உறுப்பினர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றோ அவர்கள் சகலரும் இனிமேல் கனவான்களாக நடந்துகொள்வார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது. அதற்காக பிரதியமைச்சரின் இடை நிறுத்தத்தை வரவேற்காமலும் இருக்க முடியாது!
நன்றி தினக்குரல்
No comments: