பிரச்சாரப் பொதி சுமக்கும் மரக்குதிரை - செல்லப்பா


.
கிராமியக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமான அழகர்சாமியின் குதிரைக்கு இசையமைக்க ஹங்கேரி இசைக் குழுவைச் சார்ந்த ஐவர் இளைய ராஜாவால் அழைத்துவரப்பட்டிருந்தனர் என்னும் தகவல் இப் படத்தின் மீது சிறு ஈர்ப்பை உருவாக்க, உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்படுவதற்காக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதை அதிகப்படுத்த ‘இந்தப் படத்தின் இசையைக் கேட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காவிட்டால் நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன்’ என்ற இளையராஜாவின் அதிரடி அறிவிப்போ குதிரை இதுவரை நாம் அனுபவித்தறியாத, பயணப்பட்டிராத ஏதோ ஒரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச்செல்லக்கூடும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியதால் மிகுந்த ஆர்வத்தோடு கவனத்தை எல்லாம்ஒருமுகப்படுத்தி அந்தப் பரவச அனுபவத்திற்காகக் காத்திருக்க நேர்ந்தது.
மூன்றாண்டுகளாக அழகர் கோவில் திருவிழா நடைபெறாத காரணத்தால் மழை தண்ணீரின்றிப் பஞ்சத்தால் மல்லையாபுரம் ஊர் வாட, பிழைக்க வழியற்ற மக்கள் குழந்தைகளைத் திருப்பூர் பனியன் கம்பனிக்கு வேலைக்கனுப்பும் வறட்சியான சூழலைப் பிரதிபலிப்பதாகப் படம் தொடங்குகிறது. திருவிழா நடத்தினால்தான் ஊருக்கு விமோசனம் என்று கோடாங்கி குறி சொன்னதால் விழா எடுக்கும் உறுதியோடு வரி வசூலித்து வரும் தருணத்தில் அழகரைச் சுமந்து செல்லும் வாகனமான மரக்குதிரை காணாமல்போகிறது. தங்களது திருவிழாக் கனவின் முக்கியக் கண்ணி அறுபட்டதை உணர்ந்த கிராம மக்கள் குதிரையைக் கண்டு பிடிக்கப் போராடுகின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு மலையாள மந்திரவாதியை அழைத்து வெற்றிலையில் மை போட்டுப் பார்க்கின்றனர். மரக்குதிரைக்குப் பதில் நிஜக் குதிரை ஒன்று கிடைக்கிறது. மற்ற படங்களில் இருந்து இது மாறுபட்டதோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் திருப்பம் இது.

அழகரின் திருவிழாவிற்கு அழகரே தந்த பரிசது என்ற மாந்திரீகவாதியின் பொய்வாக்கை உண்மையாக நம்பிய மக்கள் அதை அழைத்துவந்து திருவிழா கொண்டாட்டத்தில் மீண்டும் ஈடுபடுகிறார்கள். குதிரை வந்துசேர்ந்த நேரம் ஊரில் நல்ல நிகழ்வுகள் பல நடந்தேறுகின்றன. இந்தச் சமயத்தில் காணாமல்போன குதிரையைத் தேடி வந்துவிடுகிறான் அதன் சொந்தக்காரன். மீண்டும் திருவிழா தடைபட்டுவிடுமோவெனும் பயத்தில் குதிரையை அவனிடம் ஒப்படைக்க மறுக்கும் ஊர்க்காரர்களுக்கும் குதிரை இல்லாவிடின் தனக்கு நடைபெற இருக்கும் திருமணம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் எப்பாடுபட்டாவது குதிரையைக் கொண்டுபோய்விட வேண்டுமென்பதில் குறியாய் இருக்கும் உரிமையாளனுக்கும் இடையில் நாட்டாமை செய்யும் உள்ளூர் போலீஸார் திருவிழா முடியும்வரை அவனை அந்தக் கிராமத்தில் தங்கியிருக்கும்படியும் அதன் பின்னர் அவன் குதிரையை அழைத்துக்கொண்டு கிளம்பலாம் என்றும் கூற அதற்குச் சம்மதித்தவன் அங்கேயே தங்குகிறான். இறுதியில் குதிரை அவனுக்குக் கிடைத்ததா அவனது திருமணம் நடந்ததா போன்ற கேள்விகளுக்கு விடையாய் விரியும் திரைக்கதையினூடே உயர்சாதி பையனுக்கும் தாழ்ந்த சாதி பெண்ணுக்குமான பிரச்சாரக் காதல் ஒன்றும் ஊடுசரடாகப் புரள்கிறது.
சற்று வித்தியாசமான கதை மாறுபட்ட பாதையில் பயணிக்கும் என்னும் பார்வையாளனின் எதிர் பார்ப்பு படம் தொடங்கிய பத்திருபது நிமிடத்திற்குள் நீர்த்துப் போய்விடுகிறது. சாதி, கடவுள் மறுப்புக் குறித்த பிரச்சார நெடியடிக்கும் காட்சிகளும் கோனார் தமிழ் உரை போன்று விளக்கங்களை அள்ளித் தெளித்து தொடர்ந்து முன்னேறும் வளவளா வசனங்களும் படத்தோடு பார்வையாளனை ஒன்றவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. நகைச்சுவை என்னும் பெயரில் மேற்கொள்ளப்படும் அரைவேக்காட்டுத் தனங்கள் வேறு பாடாய்ப்படுத்துகின்றன.
1982ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில் நடைபெறும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தைத் திரையில் காட்சியாகக் கொண்டு வருவதற்காக அப்போதைய காசு பணம் முதற்கொண்டு அவ்வாண்டில் அறிமுகமான சத்துணவுத் திட்டம் வரையிலும் காட்சிப்படுத்தியதோடு ஓரிரு காட்சியின் பின்னணியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவையை ஒலிக்கவிட்டிருக்கின்றனர். புரோட்டாக் கடையில் மதிநுட்ப மிக்க சிறுவன் பிரபு சாப்பிடும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் திசை மாறிய பறவைகள் படத்தில் இடம்பெற்ற ‘கிழக்குப் பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறைக்கப்பார்க்குது’ பாடல் அச்சசல் தமிழ்ச்சேவை பாடல்.
சவ்வு மிட்டாயைக் கையில் வாட்ச் போல் கட்டுவது, வை ராஜாவை சூதாட்டம், டைனமோவில் மஞ்சள் துணியும் இரு சக்கரங்களின் நடுவிலும் கலர் பூவும் சுற்றிய சைக்கிள், பேப்பர் விசிறி, வில்வண்டி, தந்தை தைத்துத் தரும் தொளதொளா சட்டை போன்ற எண்பதுகளை நினைவூட்டும் பொருள்களாலும் சம்பவங்களாலும் காட்சிகளைப் பூசி மெழுகியுள்ளனர். இத்தகைய மெனக்கெடல்கள் படத்திற்கு விழுதுகளாயிருக்கின்றன. ஆனால் உயிரோட்டமான காட்சியமைப்புகளும் ஜீவன்மிக்க வசனங்களும் தாம் படத்தின் இயல்பான பயணத்தில் பார்வையாளர்களை அரவணைத்து உடன் அழைத்துச் செல்லும். தட்டையான காட்சியமைப்புகளும் தொலைக்காட்சித் தொடருக்கென எழுதியது போன்ற வசனங்களும் பார்வையாளனைப் படத்தின் அருகில்கூட வரவிடாமல் துரத்துகின்றன.
காணாமல்போன தனது குதிரையைக் கண்ட ஆனந்தத்தில் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு ஓடிவரும் அழகர்சாமியின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் காவல்நிலைய வாசலிலும் சைக்கிளை நிறுத்த முயலாமல் அப்படியே போட்டுவிட்டு ஓடும் பதற்றத்திற்கான காரணம் பிடிபடவில்லை, அதைவிடக் கொடுமை கிராமத்தானுக்குக் கைதிக்கும் போலீஸுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன, நேரடியாகச் சென்று கைதியிடமா முறையிடுவான்? எண்பதுகளில் இவ்வளவு அப்பாவியான மனிதர்கள் இருந்தார்களா என்ன? தான் தொலைத்த குதிரையைக் கண்டுபிடித்து அதைக் குழந்தையைப் போல் கொஞ்சி முடித்து அதை அவிழ்த்துப்போக முற்படும் சமயத்தில் ஊரார் ஒன்றுதிரண்டு அழகர்சாமியை மொத்து மொத்தென்று மொத்தும்போது நமது இதயம் படபடக்கவில்லையே, சிறு வேதனைகூட வரவில்லையே? எந்த ஒரு காட்சியிலும் கதாபாத்திரங்களின் உணர்வு பார்வையாளனுக்குள் கடத்தப்படவே இல்லை. இசையும் காட்சிகளும் வெவ்வேறு அடுக்கிலிருக்க இரண்டுக்கும் நடுவில் உள்ளீடாக நிரம்பியுள்ள வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்புவது?
திருடன் ஒருவனை அடித்துத் துவைத்த ஊர் மக்கள் அவனைக் கட்டிப்போட்டுவைத்திருக்க, அவனருகிலே கொஞ்சம்கூட இரக்கமற்றுக் காவலர்கள் இருவரும் பெருந்தீனி தின்க, அதைக் கண்ட அழகர்சாமி திருடன்மேல் பரிதாபப்பட்டு ‘அண்ணன் பசிக்குதாண்ணன்’ எனக்கேட்டு அவனுக்கென அந்த அக்காவிடம் சோறு வாங்கிக் கொண்டு வருவதில் வெளிப்படும் மனிதநேய உணர்வை ஓரளவு உள்வாங்கிக்கொள்ள முடிகிறது, ஆனால் அந்தத் திருடனை அன்புப் பிரவாகத்தோடு ‘திருடண்ணன்’ என அவன் விளிக்கும்போது வசன கர்த்தாவின் கைவிரல்களை மானசீகமாக முத்தமிட்டு அடங்குகின்றன இதழ்கள், என்னவொரு பரிவு! இறுதியாகக் குதிரையை பிடித்துக் கொண்டு அழகர்சாமியை ராமகிருஷ்ணன் கிளம்பச் சொல்லும் சமயத்தில் அதை மறுத்துத் திருவிழா முடியும்வரை தான் போகப் போவதில்லை, இந்தத் திருவிழாவை நம்பி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்து ஊர் மக்களின் சந்தோஷத்திற்காகத் தன் வாழ்க்கை பற்றிய கவலை இன்றி முடிவெடுக்கும் அழகர்சாமியிடமிருந்து பொங்கிப் பாயும் நல்லுணர்வு திரையை நனைத்துவிடுமோ என்னும் அளவுக்கு அச்சத்தை உருவாக்குகிறது. எண்பதுகளில் மனிதர்கள் எவ்வளவு உயர்வான குணநலன்கள் கைவரப்பெற்றிருந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை உணரும் தருணத்தில் கண்கள் தாமாகக் கண்ணீர் உகுக்கின்றன.
அழகர்சாமியின் குதிரைக்குத் தான் எத்துணை அறிவு? தன் எஜமானனை அடிக்கும்போது துன்பமிகுதியால் கணைக்கிறது, ஊரைவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிடலாம் என அழகர்சாமி அழைக்கும்போது நல்லுணர்வின் காரணமாக மறுத்துவிடுகிறது, கடைசியில் எஜமானனைக் காப்பாற்றுவதற்காகத் தீமை புரிந்தவர்களை வதம்செய்து நன்மையை நிலைநாட்டி எல்லாம் உணர்ந்த ஞானிபோல் அமைதியாக மண்டபத்தில் வந்து அமர்ந்துவிடுகிறது. அழகர்சாமிக்கும் குதிரைக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவுக்கான காட்சிகள் சரியாக வளர்த்தெடுக்கப்படாமல் மேம்போக்கானவையாகச் சுருங்கிவிட்டன. எனவே தேவர், ராம நாராயணன் போன்றோரது திரைப் படங்களை மட்டுமே நினைவூட்டிச் செல்கிறது இந்த மாற்றுப்படக் குதிரை.
தேனிக்கருகில் இருக்கும் இந்த மல்லையாபுரத்துப் பெண்கள் கடின உழைப்பாளிகளாகவே இருக்க வேண்டும். பெரும்பாலான காட்சிகளில் பெண்கள் வீதிகளில் துணி துவைத்துக்கொண்டோ பாத்திரம் கழுவிக்கொண்டோ இருக்கிறார்கள். திருவிழா சமயத்து இரவில் மாவு இடிப்பதும் இட்லிக்கு மாவாட்டுவதும்கூடத் தெருவில்வைத்துத்தான். அந்த மைனருக்குப் பெண்களை மடக்குவதைத் தவிர வேறு வேலையே இல்லை போல. ஆனாலும் படத்தில் எந்தப் பெண்ணையும் அவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தவில்லை. பெண்கள் அனைவரும் அவரின் கண்ணசைவுக்கு மயங்கி விருப்பத்தோடு தங்களை மைனரோடு இணைத்துக்கொள்ளும்போது அழகர்சாமியின் குதிரை மைனரை மட்டும் தாக்குவது அதிலும் தவறுக்கு முக்கியக் காரணமாக இருந்த ஆதார சுருதியின் வேரறுத்தது ஓரவஞ்சனையில்லையா?
பெண் பார்க்க வந்த அன்று அழகர்சாமி, குதிரையிடம் இவ்வளவு அழகானவள் தனக்கு மனைவியாக வர வேண்டாம், தன்னைப் போல் தானே அந்தப் பெண்ணுக்கும் வரக்கூடிய கணவன் குறித்தான கற்பனை இருக்கும், தன்னால் அது தகர்ந்து போய்விடக் கூடாது என்று கூறுவதைக் கேட்ட மாத்திரத்தில் அவனை முழுமனத்தோடு ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டாளே அந்தப் பெண் ராணி! சாத்தியம் தானா அது என்னும் சந்தேகம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. அதன் பின்பு ஒருமுறை அவளைத் தொட்டுப்பார்க்க அனுமதி கேட்டு தொட்டதால் உற்சாகம் கொள்கிறான் அவன். இந்த வெகுளித் தனத்தில் தன் மனத்தைப் பறி கொடுத்திருப்பாளோ என்னவோ! குதிரை காணாமல்போய் விட்டதைக் கூற வந்திருக்கும் அழகர்சாமிக்கு ஆறுதல் தருவதோடு அவன் பூ வைத்த தினத்திலிருந்து அவனையே புருஷனாக எண்ணி வாழ்ந்துவருவதாகவும் குதிரையுடன் வராவிட்டால் செத்துவிடுவதாகவும் சொல்லும் காட்சியின் - குதிரை திரும்பக் கிடைத்தால் அழகர்சாமியை இந்தப் பெண் மணமுடிக்க வேண்டியதிருக்குமேவெனும் பயம் பார்வையாளனைப் பதைபதைக்க வைக்கிறது - முடிவில் கேமரா கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து உச்சிக் கோணத்தில் வந்து நிற்கிறதே. இந்த இடத்தில் உயர்ந்து நிற்பது பெண்மையின் பெருமையா திரைப்படத்தின் தரமா என்பதைக் கணிக்க இயலாமல் தடுமாறிப் போய் விடுவான் பார்வையாளன். கிராமத் தலைவரின் மகனும் கோடாங்கியின் மகளும் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட தகவலைக் கேட்ட மாத்திரத்தில் இனி இந்த ஊரில் மழையே பெய்யாது என அவர் அளிக்கும் சாபத்திற்காகவே காத்திருந்ததுபோல் கொட்டித் தீர்த்துவிடுகிறதே அந்த முற்போக்கு மழை. உணர்வுக்கும் எதிர்வினைக்குமான கால அவகாசமே தரப்படாததால் செயற்கையானதாக மாறிவிடுகிறது அந்த மழை.
நல்லவன் வாழ்வான் தீயவன் அழிவான் என்று காலகாலமாய்ச் சொல்லப்படும் அதே கருத்தை உணர்த்துவதில் என்ன புதுமையைக் காண முடிகிறது என்பதே புரியவில்லை. அசலான கிராமம் என்னும் பெயரில் எதார்த்தத்தோடு எந்தவகையிலும் ஒட்டாத கதா பாத்திரங்கள் குறுக்கும் நெடுக்கும் வந்துபோகும் செயற்கையான கிராமம் தமிழ் சினிமாவின் அடிப்படைக் குணத்தில் எந்த மாற்றமுமின்றி வந்து செல்கிறது. தொடர்ந்து தமிழ்த் திரைப்படம் பார்க்கும் யாராலும் எளிதாகச் சொல்லிவிட முடியும் அந்தக் குதிரையின் சொந்தக்காரனது பெயர் கண்டிப்பாக அழகர்சாமியாகத்தான் இருக்கும் என்பதை. அவனுக்கு வேறு ஒரு பெயரை வைக்கக்கூடத் துணியாமல் தமிழ் சினிமாவின் எந்தச் சூத்திரத்தையும் கொஞ்சம்கூட மாற்றாமல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மாற்றுப்பட வரிசையில் வைத்துப் பார்க்க முயலும்போதுதான் இதன் அசல் தன்மை குறித்து ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 1977இல் வெளியான 16 வயதினிலே, 1978இல் வெளியான முள்ளும் மலரும், 1979இல் வெளியான உதிரிப்பூக்கள் போன்ற படங்களில் கண்டுணர்ந்த அசல் கிராமத்தையும் மனிதர்களையும் அவர்தம் உணர்வுகளையும் 2011இல் வெளியாகியுள்ள 82இல் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய இந்த அழகர்சாமியின் குதிரையில் தரிசிக்க முடியாததன் ஏக்கம் படிப்படியாக வளர்ந்து இறுதியில் திரையரங்கைவிட்டு வெளியில் வருகையில் இந்தப் படத்தின் மீதான எதிர்மறை உணர்வைக் கொண்டுவந்து சேர்க்கிறது.
ஒப்பனையற்ற, ரத்தமும் சதையுமான அசல் மனிதர்களைக் காட்டி விட்டாலே அது தமிழ் வாழ்வு, தமிழர் கலாச்சாரம் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் நல்ல படம் போன்ற பாசாங்கைக் கொண்டிருக்கும் படங்களையும் மாற்றுத் திரைப்பட வரிசையில் வைக்கத் துணிவதென்பது தமிழ்த் திரைப்படம் குறித்த நமது குறை மதிப்பீட்டைக் காட்டுவதாக அமைந்துவிடும். அத்தகைய ஒரு முடிவு ஒருபோதும் திரைப்படங்களுக்கோ இயக்குநர்களுக்கோ வலுச் சேர்ப்பதாக அமையாது. அங்காடித் தெரு, நந்தலாலா போன்ற பாசாங்குப் படங்கள் வரிசையில் ஒன்றாகத் தன்னையும் இணைத்துக்கொண்டுவிட்டது இந்த அழகர்சாமியின் குதிரை..

nantri:kalachuvadu

No comments: