படுவான்கரையும் எழவேண்டிய விடயங்களும்


 .

"நெஞ்சாலி விளைவேலி ஆயிரமூர் புரக்கும்
திருவோங்கி நிறைவுடைய செல்வமெல்லாஞ் சுரக்கும்
அஞ்சாயல் மடவார்க்கட் கறநெறிஆர்மனமு முருக்கும்
துஞ்சாம லிரவுபகல் மள்ளர்குரல் களிக்கும்
சுவாமிவிபு லாநந்தர்யா ழிசைநின் றொலிக்கும்
மஞ்சாரும் பொழில் மட்டு மாநாட்டி னினிய
மண்வளம்போல் வாழ்வாரின் மனவளமு மினிதே"


என்று புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பின் பெருஞ்சிறப்பைப் பற்றி எழுதிய பாடல். 

விக்கிபீடியாவில் மட்டக்களப்பு 

மட்டக்களப்பின் இயற்கை வனப்பையும் இருப்பையும் பற்றி யாழ்நூற் புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்
"மட்டகளப்பிலே முப்பது மைல் நீள் வாவி ஒன்றுள்ளது. இது கடலோடு கலக்கும் வடகோடி அமிர்தகழி என்னும் புண்ணியப் பழம்பெருபதிக்கு அணிமையானது.
அழகிய தெற்குக் கோடிக்கு அணிமையாக மேற்குக்கரையிலே மண்டூர் என்னும் புண்ணிய பழம்பதியுமுளது. வாவியின் மேற்குக்கரை முழுவதும் மருதத்தண்பணைகளாகும். கிழக்குக் கரையிலுள்ள ஊர்கள் தெங்கு, மா, பலா முதலிய மரங்கள் செறிந்து கண்ணுக்கும் மனதுக்கும் உவகை தருவன. புலியன் என்னும் வேடர்குலத் தலைவன் அரசுபுரிந்த இடமாதலினால் முன்னாளில் 'புலியன்தீவு' என வழங்கப்பெற்றதும் இந்நாளில் 'புளியந்தீவு' என வழங்கப்படுவதும் மூன்று மைல் சுற்றளவுடையதுமான அழகிய நகரம் ஒன்று காவிரி நடுவணமைந்த திருவரங்கம் போல மட்டக்களப்பு வாவியின் நடுவணமைந்துள்ளது. இந்நகர் மட்டகளப்புப்பிரிவுக்குத் தலைநகராகும்" (மட்டக்களப்புத் தமிழகம் - பண்டிதர் வீ.சி. கந்தையா)

மட்டுநகரத்திலிருந்து "எழுவான்கரை" அதாவது வாவியின் கிழக்குக்கரை சூரியன் எழும்திசையிலுள்ள கரை, அதன் வழியே தென்முகமாக நெடிய வீதி கிராமங்களினூடு செல்கிறது.
"படுவான்கரை" என்பது பொழுதுபடும் மேற்குத்திசைக்கரை. இதன்வழியே பயணஞ்செய்தாலே கண்ணுக்கும் மனதுக்கும் இனிய புதிய உயிர்க் காட்சி. பழந்தமிழ்ப் பண்புடன் இன்றும் வாழும் உழவர் அங்கே உளர். உழவர்தம் உயிர்போன்றே செல்வமான மந்தைகள் மேயும் முல்லை நிலத்தைச் சார்ந்துள்ள வயல்களும் தனியழகுடன் தனித்துவமாய் தோற்றமளிக்கும். முதிரை, கருங்காலி முதலிய மரங்கள் நிறை சோலைக்காடுகளும் சிள்வண்டின் ஓசையும் காடுகளிலிருந்தும் மலைச்சாரல்களிலிருந்தும் எடுக்கப்படும் நறுந்தேனும் " பாலொடு தேனாறு பாயந்தோடு நன்னாடு" என்று மட்டக்களப்புக்கு புகழையும் தரும் நிலமாகும்.(மட்டக்களப்புத் தமிழகம் - பண்டிதர் வீ.சி. கந்தையா)

மட்டக்களப்பின் நிருவாகக் கட்டமைப்புபடத்தைஇங்குகாண்க 
இதில் படுவான்கரை கீழே பார்க்க
மட்டக்கப்பு வாவியே எழுவான் கரையையும் படுவான் கரைரையும் பிரித்துகோடிட்டுக் காட்டுகிறது. படுவான்கரையில் நிருவாகப்பிரிவிலே போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்குப்பற்று, மண்முனை மேற்குப்பற்று ஆகிய பிரதேசங்கள் அடங்குகின்றன. எழுவான் கரைக்கும் படுவான் கரைக்கும் இடையிலான போக்குவரத்து மண்முனை, குருக்கள் மடம் ஆகிய துறைகளினூடாக வாவியைக்கடந்து செல்லமுடிகிறது. ஆயினும் பட்டிருப்பு பாலம் மற்றும் வவுணதீவுப் பாலம் என்பன மட்டுமே தரைவழிப்பாதையில் உள்ளன.
தொன்று தொட்டு வாழும் இந்நிலமக்களின் போக்குவரத்துக்கு இன்னமும் சரியான பாதைகள் மற்றும் பாலங்கள் புனரமைக்கப்படாமல் அவர்களின் இயல்புவாழ்க்கைக்கும் தேவைகளை பூர்த்திசெய்வதற்கும் எப்பொழுதும் எழுவான்கரையை நாடவேண்டியவர்களாக உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் மட்டக்களப்புக் குறிப்பு;
"மட்டக்களப்பு வீரம் படைத்த தமிழ்நிலம். அதற்கு கவித்திறன் உண்டு. கலைவளம் உண்டு. பொருள் வளம் உண்டு. ஈழம் முழுவதற்கும் தேவையான நெல்லை அளிக்கக்கூடிய வளமுண்டு. மரபுவழி வந்த கலைகள் நிறைய உண்டு. யாரோடும் தலை நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் உண்டு."
இந்தக்குறிப்பிற்கே முழுப்பொருத்தப்பாடு உண்மையில் படுவான்கரைக்கே உள்ளதெனலாம். இன்றும் வழக்கிலுள்ள அத்தனை செல்லவச் செழிப்புமிக்க வளம்பெறு நிலமாக இருக்கும் இந்நித்திலம் வீரம் விளைநிலமாக கொள்ளப்பட்ட இந்நிலம் கடந்த கால போர்ச்சூழல் காரணமாக மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாகவும் இன்னமும் நிமிர்ந்து வளரமுடியாத தன்மையில் இருப்பது வேதனையான விடயம்.
ஆயினும் இங்கிருந்து பல்வேறு துறைகளில் துறைபோந்த திறன்வாய்ந்தவர்களும் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு எழுவான் கரை மற்றும் நகர்ப்புறங்கள் ஏன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற ஒரு அசாதாரண சூழ்நிலையினால் இப்பொழுது வறுமை என்பதையும் முன்னேற தவிக்கும் மக்களையும் காணக்கூடியதாக இருப்பதற்கு என்னைப்பொறுத்த வரையில் போர்ச்சூழலும் திட்டமிட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ப்படாமையுமே காரணமாகும்.

இம்மக்களில் படித்தவர்களைத் தேடிப்பிடிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறது. ஆக இப்பிரதேசத்துக்கு பெருமளவில் கல்வியறிவையும் எதிர்கால நம் சந்தததிகளுக்கு உரிய பொறுப்புக்களையும் வழங்கவேண்டிய நிலை காணப்படுகிறது.

இதனால் இப்பிரதேசத்துக்கு முதலில் போக்குவரத்து ஒழுங்குகளை செவ்வனே நிறைவேற்றுதல், ஏற்கனவே திட்டமிட்ட அம்பிளாந்துறை- குருக்கள்மட, மற்றும் மண்முனை பாலங்களை அமைத்தல் என்பன இப்பிரதேசத்தில் கல்விபயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் மக்களின் அவசர தேவைகளுக்கும் வியாபாரவிருத்திக்கும் உரிய கடமையாகும்.

மற்றும் இன்னமும் இப்பிரதேச மக்களின் கல்வியில் முழு அக்கறை செலுத்தாமல் அவர்களின் கல்வியில் காட்டும் அசமந்தப்போக்குகளையும் எதிர்மறைச்சிந்தனைகளையும் களைந்து இப்பிரதேச பிள்ளைகளின் வளர்ச்சிக்கு வெளிச்சம் காட்ட அனைவரும் முன்வரவேண்டும்.
இப்பிரதேசத்தில் கலைத்துறையிலும் வணிகத்துறையிலும் ஆங்காங்கே பட்டதாரிகளின் அதிகரிப்பு இருந்தாலும் விஞ்ஞான கணித துறையில் பாரிய வெற்றிடம் காணப்படுகிறது.

மற்றும் இப்பிரதேச மக்கள் அதிகமானோர் விவசாயிகளாகவும் கூலி விவசாயிகளாகவும் காணப்படுகின்றனர். இதற்கடுத்ததாக மீன்பிடித்தொழிலாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோரே காணப்படுகின்றனர். இதனால் அரச தொழிலில் ஈடுபடுவோர் மிக்குறைந்த சதவீதத்தினரே இதற்கு பிரதான காரணமே இப்பிரதேச கல்வியறிவில் கல்விகற்றலில் குறைவும் தாழ்வும் ஏற்பட்டதே. ஆதலால் இனிவரும் சமுதாயத்தில் இக்கல்வியறிவியலில் உயர்ச்சியைக் கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது
Nantri:sidaralkal.blogspot

No comments: