இலங்கை இந்தியா செய்திகள்

.
*யாழ். த.தே.கூட்டமைப்பின் தோ்தல் கூட்டத்தில் இராணுவத்தினர்  
 அடாவடி! எம்.பிக்கள் மீதும் தாக்க முயற்சி
*தமிழக சட்டசபைத் தீர்மானங்களும் இலங்கை - இந்திய உறவும்
*இலங்கையும் பான் கீமூனும்
*அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா தலையிடாது

இலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது எனவும் அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் எனவும் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலேசாகர் சிவ் சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரடங்கிய இந்திய தூதுக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது வடக்கு இராணுவமயப்படுத்தப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்களிடம் சிவ்சங்கர் மேனன் கூறுகையில், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வழங்குவதும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவமே உடனடி இலக்காகும் எனக்கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பாக விபரங்களை வெளியிடுவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இதேவேளை, மீள்குடியேற்ற விடயத்தில் பணிகள் நடைபெறுகின்றபோதிலும் இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டியிருப்பதாக சிவ் சங்கர் மேனன் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான இரு மணித்தியால பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டதை இந்திய தூதுக்குழு தெரிவித்தது. இருதரப்புக்கும் சௌகரியமான வேளையில் இந்த விஜயம் இடம்பெறும் எனவும் இதற்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை குறித்து இரு நாடுகளின் மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய தீர்மானங்களை அவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் மேனன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தீர்மானம், நிபுணர் குழுஅறிக்கை குறித்து பேசப்படவில்லை: சிவ் சங்கர்மேனன்

இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசின் உயர் மட்ட தூதுக்குழுவும் இடையிலான பேச்சுவார்த்தைகளின்போது கலந்துரையாடப்படவில்லை என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க விடயத்தில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எனும் சொந்த பொறிமுறையொன்றை இலங்கை கொண்டிருப்பதாகவும். ஆதனால் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை குறித்து கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின்கீழ் 50 வீடுகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 1000 வீடுகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாக்கப்படும் எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

நேற்று இலங்கைக்கு வந்த இந்திய தூதுக்குழுவினர் இன்று சனிக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தேனீ

இலங்கையும் பான் கீமூனும்


13 /06 / 2011
bank_ke_moonஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூன் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கையாளுவதில் இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறைகள் மிகவும் ஊசலாட்டமானவையாகவும் விசித்திரமானவையாகவும் அமைவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் இலங்கையின் பொறுப்புடைமை குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக செயலாளர் நாயகம் நிபுணர் குழுவை நியமித்த கடந்த வருட நடுப்பகுதியில் இருந்து அந்தக் குழுவினர் இரு மாதங்களுக்கு முன்பு தங்களது அறிக்கையைக் கையளித்த தருணம் வரையும் அதற்குப் பிறகும் இலங்கை அரசியல் பெரும் கொந்தளிப்பானதாகவே இருந்து வருகிறது.

கடந்த ஜூலை மாத முற்பகுதியில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தனது ஆதரவாளர்கள் சகிதம் கொழும்பில் உள்ள ஐ.நா.அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் வாசலில் கூடாரமடித்து முன்னெடுத்த நாடகபாணியிலான "சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்' தொடக்கம் அரசாங்கம் தற்போது தருஸ்மன் அறிக்கையென்று நாமகரணஞ் சூட்டியிருக்கும் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிரான மக்கள் சக்தியின் வலிமையை உலகிற்குக் காட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் கொழும்பில் கடந்த மேதினத்தன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடத்திய பிரமாண்டமான பேரணிவரை அரசாங்கத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் பான் கீமூன் குறித்து செய்த ஆவேசப்பிரசாரங்களை முழுஉலகுமே அறியும்.

நிபுணர் குழுவை நியமித்ததன் மூலமாக ஐ.நா.வின் சட்டங்களுக்கு இசைவான முறையில் செயற்படாத ஒருவராகவும் இலங்கையின் இறைமைக்கு எதிரான மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் சூழ்ச்சிக்குத் துணைபோகும் ஒருவராகவுமே பான் கீமூனை அரசாங்கம் நாட்டு மக்களுக்குக் காட்டியது. ஆனால், அதே பான் கீமூன் ஐ.நா. செயலாளர் நாயகமாக இன்னொரு ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருப்பதற்கு இலங்கை அதன் பரிபூரணமான ஆதரவை வழங்க முன்வந்திருக்கும் "அதிசயத்தைக்' காணக்கூடியதாக இருக்கிறது. அவரின் தற்போதைய பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பருடன் பூர்த்தியாகிறது. இந்த அதியுயர் சர்வதேச இராஜதந்திரப் பதவியை வகிக்கும் இரண்டாவது ஆசியரான பான் கீமூன் தொடர்ந்தும் ஐந்து வருடங்களுக்கு அதே பதவியை வகிப்பதற்கான தனது விருப்பத்தை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சில மணித்தியாலங்கள் முன்னதாக நியூயோர்க்கில் கடந்த திங்கட்கிழமை 53 நாடுகளை உள்ளடக்கிய ஆசியக் குழுவின் பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் உரையாற்றிய போது அவரின் வேண்டுகோளை ஆசியக் குழு ஏகமனதாக அங்கீகரித்திருக்கிறது.

தென்கொரியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான அவருக்கு சர்வதேச சமூகத்தின் முன்னணி நாடுகளின் ஆதரவு இருப்பதால் இரண்டாவது பதவிக் காலத்துக்கான அங்கீகாரத்தை முதலில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்புச் சபையிடமிருந்தும் அடுத்து 192 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுச் சபையிடமிருந்தும் பெறுவதில் அவருக்கு பிரச்சினை ஏதும் இல்லை என்றே நம்பப்படுகிறது. இரண்டாவது பதவிக் காலத்துக்கான முறைப்படியான தெரிவை இம்மாத இறுதியில் ஐ.நா.வின் மேற்படி இரு சபைகளும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை பான் கீமூனுக்கு அளிக்க முன்வந்திருக்கும் ஆதரவில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொரு அம்சம் இருக்கிறது. இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய செயற்பாடுகளில் இறங்கிய ஒருவர் என்று அவரை வர்ணித்து வந்த இலங்கை அரசாங்கம் தற்போது அவரை எவ்வாறு நோக்குகிறது? நியூயோர்க்கில் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவி வகிக்கும் கலாநிதி பாலித கோஹனவிடம் மூன்றாம் உலக செய்தி நிறுவனமான இன்ரர் பிரஸ் சேவிஸின் ஐ.நா. பணியக தலைமை அதிகாரி தலிவ் டீன் செயலாளர் நாயகத்துக்கு இலங்கை அளிக்க முன்வந்திருக்கும் ஆதரவு தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தார். ஆசிய நாடுகள் ஒருமித்து ஆதரவளிக்க முன்வந்திருக்கும் நிலையில் இலங்கை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதையுமே இது விடயத்தில் செய்யக்கூடியதாக இருக்காது என்பதே மண்ணில் நிலவும் உண்மை என்ற போதிலும், பான் கீமூனை வர்ணிப்பதற்கு கலாநிதி கோஹன பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளை வாசகர்கள் உன்னிப்பாக நோக்க வேண்டும். அதற்கு அப்பால் நாம் எதையுமே கூறவேண்டியதில்லை. சகலதையும் வாசகர்களினால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

இதோ கலாநிதி கோஹனவின் பதில்; "பான் கீமூனுக்கு ஆசியா ஏகமனதாக அளித்திருக்கும் ஆதரவு அவரின் படாடோபமில்லாத தலைமைத்துவப்பாணி, பிரச்சினைகளின் தீர்வுக்கு அவர் கடைப்பிடிக்கும் தனித்துவமான ஆசிய அணுகுமுறை, அமைதியானதும் ஆரவாரமற்றதுமான இராஜதந்திரம், மனித குலத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு குறிப்பாக, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடுவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான உறுதியான அங்கீகாரமாகும். சர்வதேச அரங்கில் ஆசியா அதற்கு இருக்கக்கூடிய தலைமைத்துவப் பாத்திரத்தை மீள முனைப்புறுத்துகின்ற ஒரு தருணத்தில் ஐ.நா.வைத் தொடர்ந்தும் தலைமைதாங்கி வழிநடத்துவதற்கு முழுநிறைவான ஒரு ஆசிய நாட்டவர் பான் கீமூனாகவே இருக்கமுடியும்'.
நன்றி தினக்குரல்

தமிழக சட்டசபைத் தீர்மானங்களும் இலங்கை - இந்திய உறவும்


(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகையில் ஜூன் 13 ஆம் திகதி வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இது)

Jeyalalitha-1இந்திய - இலங்கை உறவு தொடர்பில் தமிழ்நாடு சட்டசபைக்கு வந்த இரண்டு தீர்மானங்கள் செய்தியில் அடிப்படுகின்றன. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முதலமைச்சரான ஜெயலலிதா, இரண்டு தீர்மானங்களை கொண்டு வந்தார். யுத்தக் குற்றம், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மீள்குடியேற்றம் தொடர்பான தீர்மானம், சர்வதேச சமுதாயத்தின் தற்போதைய மனோநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. சர்வதேச அபிப்பிராயத்தின் மீது இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோரின் அழுத்தத்தையும் காணமுடிகிறது. கச்சதீவு தொடர்பான தீர்மானம் கச்சதீவை மீளப்பெற வேண்டுமென இந்திய அரசாங்கத்தை கோரியது.

இரண்டு தீர்மானங்களும் இலங்கை, இந்திய உறவுடன் சம்பந்தப்பட்டவை.rajapaksha-4 இந்த தீர்மானங்கள் தொடர்புடைய பிரச்சினைகளில் இரண்டு அரசாங்கங்களின் மீதும் அழுத்தங்களை கொடுக்கக் கூடியவை. அரசியல், அரசியல்வாதிகள், சர்வதேச சமுதாயம், புலம்பெயர்ந்தோர் என்பதற்கு அப்பால் இனப்பிரச்சினை, மீனவர்களின் உயிர், அவர்களின் வாழ்வாதாரம் என்பன தமிழ்நாட்டில் உடனடி தீர்வை வேண்டி நிற்பவையாகவும் நீண்ட கால கவனம் தேவையானவையாவும் உள்ளன.

இலங்கையிலும் இரு நாடுகளுக்கும் பொதுவான கடற்பிரதேசத்திலும் சமாதானம் தேவையென தமிழ்நாடு கருதுகின்றது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த அக்கறையே இரண்டு தீர்மானங்களினதும் அடிநாதமாக உள்ளது. இதற்கான பெருமையை ஜெயலலிதா கோரமுடியுமாயின், அவர் அதற்கு பின் நிற்கப்போவதில்லை.

இரண்டு வெளிநாட்டு அமைச்சர்களும் (ஜி.எல்.பீரிஸ் மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணா) புது டில்லியில் சந்தித்த போது வெளியிட்ட கூட்டறிக்கை மீதான வெளிப்படையான அரசியல் மற்றும் ஊடக விமர்சனங்கள் குறிப்பிட்ட ஒரு மனோநிலையை பிரதிபலிக்கின்றன. இலங்கையில் இந்த நிலை காணப்படுமாயின் இதே மனோநிலையை தமிழ் நாட்டிலும் காணலாம். தமிழ்நாடு சட்டமன்றின் தீர்மானங்கள் இலங்கையின் எந்தவொரு மனோநிலைக்கும் எதிர்நடவடிக்கையாக அமையவில்லை.

இனப்பிரச்சினை மீதான தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தின் அடிநாதமாக இலங்கையிலுள்ள இலங்கை தமிழர்களின் பாதுகாப்பும் முப்பது வருடாகால இன மோதலின்போது வாக்களிக்கப்பட்ட அரசியல் தீர்வும் உள்ளது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படுவது போலவே தமிழ்நாடு சட்டசபை தீர்மானமும் யுத்தக் குற்றங்களையும் அரசியல் தீர்வையும் பிணைக்கின்றது. கொழும்பும் சென்னையும், சென்னையும் புதுடில்லியும் இந்தப் பிரச்சினைகளை வித்தியாசமாக காணக்கூடும். ஆனால் கவலைகள் யதார்த்தமானவை, பொதுவானவை.

1983 இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சேர்ந்த பின்னரே இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் அக்கறை முளைகொண்டது. அதற்கு முன் இந்தியா அக்கறைப்படவில்லை இனப்பிரச்சினையில் இந்தியாவின் ஈடுபாடு இந்தியாவின் ஆதிக்கப்போக்கு, இந்தியாவின் சுயநலம் என்பவை சார்ந்தவை எனக் கருதுவது பிழையானது. அது தமிழ்நாட்டில் காணப்படும் கவலைகள், தமிழ்நாடு பற்றிய கவலைகள் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது. கொழும்பு இதை புரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கையில் சில பகுதியினர், குறிப்பாக அதிகார மட்டத்தில் உள்ளவர்கள், மீனவர் பிரச்சினை தொடர்பில் இறைமை, ஆட்புல தொடர்ச்சி என்பவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர். சிலர் இந்த வகையில் இலங்கை கடற்படையின் தலையீட்டை நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.

அவர்கள் இந்த நடவடிக்கைகள் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய கடற்புலிகளின் பயமுறுத்தலை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டவை எனவும் கூறுகின்றனர். இந்த நியாயத்தை சரியெனக் கொண்டால் ஏனைய நியாயங்களையும் ஏற்க வேண்டும். இதில் தமிழ் நாட்டில் காணப்படும் கவலைகளும் அடக்கப்பட வேண்டும்.

கச்சத்தீவு பிரச்சினை தற்போது புதுடில்லியின் உயர்நீதி மன்றத்தின் முன் உள்ளது. தீர்ப்பு எப்படி இருப்பினும் இலங்கையினால் இதற்கு எதிராக ஒன்றும் கூறமுடியாது. இருபக்க உறவுகள், சர்வதேச உறவுகள் பற்றிய விவாதங்கள் வேறு இடங்களில் சாத்தியமாகலாம். இலங்கையின் உயர் நீதிமன்றம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருபக்க ஒப்பந்ம் பற்றி குறிப்பிடாமலே வடக்கு, கிழக்கு பிரிவை கையாண்டுள்ளது. இலங்கையின் உயர் நீதிமன்றம் ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈ. பிரச்சினையை தீர்;த்திருக்கலாம். ஆனால் அது அடிப்படையாக உள்ள பிரச்சினைகளை தீர்க்கவில்லை. இது புலம்பெயர்ந்தோர் பற்றியதல்ல. இது இலங்கையிலுள்ள, யுத்தத்துக்கு முகங்கொடுத்த, அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியது.

அபிப்பிராயங்கள் ஒரே மாதிரி இருக்கமாட்டா. இதற்கு இந்தியாவும் இலங்கையும் விதிவிலக்கல்ல. இன்னொரு உதாரணமாக இலங்கையில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் 'வெள்ளைக் கொடி' விவகாரத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப் கேணல் லோறன்ஸ் கூறிய கருத்து அவருடைய சொந்தக் கருத்து எனக் கூறி அமெரிக்க, அக்கருத்திலிருந்து விலகியுள்ளது.

வேறு ஒரு நாட்டில், இப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று மறுத்திருக்கலாம். அரசாங்கம் ஒன்றின் வௌ;வேறு துறைகளுக்கிடையிலும் வித்தியாசமான பார்வைகள் இருக்கமுடியும். இலங்கையில் யுத்தம் மும்முரமாக நடந்த சமயத்தில் அப்போது இராணுவ தளபதியாகியிருந்த சரத் பொன்சேகா, தமிழ் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரான சிங்கள பௌத்தர்களுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென கூறியிருந்தார்.

இலங்கையின் அரசியல் தலைமைப்பீடமும், இராஜதந்திர சேவையினரும் இதை மறுத்துரைக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போதைய நிலையில், கண்ணாடி வீட்டில் வசிக்கும் இலங்கையும் இலங்கையரும் இந்தியாவை குறைகான முடியாது. அவர்கள் தமக்குள் காணப்படும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை கட்டுப்படுத்தவில்லை. என்ன பிரச்சினைகள் காணப்படினும் இந்த இரண்டு நாடுகளினதும் உள்நாட்டு அரசியல் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை அல்ல. உள்நாட்டு அரசியல் அவர்களின் வெளிவிகாரங்கள் மீது செல்வாக்கு செலுத்தக் கூடாது.

- தமிழ்மிரர்
நன்றி தேனீ


யாழ். த.தே.கூட்டமைப்பின் தோ்தல் கூட்டத்தில் இராணுவத்தினர் அடாவடி! எம்.பிக்கள் மீதும் தாக்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான கூட்டத்தில் நுழைந்த இராணுவக் காடையர்கள் அங்கு அட்டகாசம் புரிந்துள்ளனர்.

கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அளவெட்டியில் இன்று மாலை உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான கூட்டம் மாலை 6.30 மணிக்கு நடத்தப்பட்டது.

இதன்போது கூட்டத்தினுள் ஆயுதங்கள் மற்றும் தடி, பொல்லுடன் நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்முடித்தனமான தாக்குதலை நடத்தி காட்டுமிரண்டித்தனத்தை காட்டினர்.

இதனால் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் 6 எம்.பிக்கள் குழப்பமடைந்ததை தொடர்ந்து சுமார் 40 ற்கும் மேற்பட்ட படையினர் அங்கு கூடி மேடையில் ஏறி எம்.பிக்கள் மீதும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.

இதில் மாவை சேனாதிராசா, சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினர் முனைந்துள்ளனர்.

இதன்போது அவர்களது மெய்ப்பாதுகாவலர்கள் தடுக்க முற்பட்டபோது அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சுதர்ஸன் என்ற இளைஞர் மயங்கி விழும் வரையும் இராணுவக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

தற்போது எம்.பிக்கள் அனைவரும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எம்.பிக்கள் பலரின் வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. இதில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் வாகனம் முற்றாக அடித்து நொருக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அங்கேயே விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை,

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரின் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டு ஊடகவியலாளர்களின் கமராக்கள் அடித்து நொருக்கப்பட்டுமுள்ளது.

மேலும் 3 பேரை காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் செய்திகள் தொடரும்.

இச்சம்பவம் பற்றி உதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி: [ இரண்டாம் இணைப்பு ]

கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் புகுந்து இராணுவம் தாக்குதல்: சரவணபவன் எம்.பி நூலிழையில் தப்பினார்

அளவெட்டியில் இன்று இரவு இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் திடீரெனப் புகுந்த இராணுவத்தினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். கொட்டன்களுடன் வந்த படையினர் கூடியிருந்த பொதுமக்களைத் தாக்கித் துரத்தியதுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்க எத்தனித்துள்ளனர். சிப்பாய் ஒருவரின் தாக்குதலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் நூலிழையில் தப்பினார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்றிரவு ஏழு மணியளவில் அளவெட்டியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

கூட்டம் ஆரம்பிக்கின்ற வேளையில் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் திடீரெனப் பிரசன்னமாகிய இராணுவத்தினர் பொது மக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அச்சுறுத்தியிருக்கின்றனர். பொதுமக்கள் அவர்களை பெரிது படுத்தவில்லை. அங்கிருந்து சென்ற இராணுவத்தினர் சிறிது நேரத்தில் கொட்டன்கள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்து பொதுமக்களை கண்டபடி அடித்து விரட்டினர்.

அவ்வேளையில் மேடையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பேசிக்கொண்டிருந்தார். மேடைக்கு ஏறிய இராணுவ சிப்பாய் ஒருவன் பேசிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஒலிவாங்கியைப் பறித்தபடி அவரைத் தாக்க முற்படவே அவரது மெய்பாதுகாவலர் குறுக்கே பாய்ந்து அவரைக் காப்பாற்றினார். அதிஷ்ட வசமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் காயமேதுமின்றி தப்பிக்கொண்ட போதிலும் அவரது மெய்க்காவலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் மத்தில் பதற்றமும் பீதியுமானதொரு சூழல் காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை -
இது ஒரு திட்டமிட்டதொரு தாக்குதல் எனவும், திடீரென என்றால் எவ்வாறு கொட்டன்கள் மற்றும் இரும்புக் கம்பிகளைப் பெற முடிந்தது எனவும் அங்கிருந்து தப்பிவந்த ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தின் முடிவில் தெல்லிப்பளை காவற்றுறை பணிமனைக்குச் சென்ற நாடாளுமன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளது.







நன்றி தமிழ்வின்














No comments: