மல்லிகை ஜீவா வருணித்த அச்செழு
பண்ணையார்
தம்பையா அண்ணன்.
உரும்பராய் மண்ணில் உழைப்பின் உபாசகர்
தி.ஜானகிராமன் எழுதிய கதையொன்றிலே
ஒரு வசனம் இப்படி
வந்ததாக ஞாபகம்.
தரையில் வரைந்த கோலம் எழுந்து
நின்றதுபோல்--- சௌந்தர்ய உபாசகரான அவர் - ஒரு பெண்ணை அவ்வாறு வர்ணிப்பார்.
எங்கள் அச்செழு பண்ணையார்
- என நண்பர்
மல்லிகை ஜீவா வர்ணிக்கும் தம்பையா அண்ணர் தமது நினைவின் அலைகள் சுயசரிதை நூலை இவ்வாறு
ஆரம்பிக்கின்றார்.
உரும்பராய்ச்சந்தி – சிலுவையை நிலத்தில்
கிடத்திவைத்தாற்போன்றதொரு சந்தி.
ஜானகிராமன்
கோலத்தை நிமிர்த்துகிறார். தம்பையா சந்தியை
கிடத்துகிறார். படைப்பாளிகளுக்கு இப்படி அபூர்வமாகவே கற்பனை தோன்றும்.
லா.ச.ரா.
எழுதுவார் - அவள் இடுப்பின் வளைவில் குடத்தின் வளைவு ஏறியது
- என்று.
அபூர்வமாக
வந்து விழும் சித்திரங்களை எம்மால் எப்படி மறக்கமுடியாதோ அப்படித்தான் தம்பையா அண்ணர் என்ற
அபூர்வ மனிதரையும் மறக்கமுடியாது.
மேலும் ஐந்துவருடங்கள் வாழ்ந்திருப்பாராகில்
நாம் அவருக்கு பவளவிழா கொண்டாடியிருப்போம்.
நான் போகிறேன்
நண்பர்களே – நீங்கள்
கொண்டாடுங்கள் - என்று அவர் தனக்குள்
நினைத்துக்கொண்டு ஆழந்ததுயில் கொண்டிருக்கவேண்டும். அது மீளாத்துயில்.
ஒருவரது
மரணத்தை கொண்டாட முடியுமா? முடியும். நிச்சயமாக முடியும்.
எப்படி?
மறைந்தவரை
நினைத்து எமது எண்ண
அலைகளை எழுப்பி அந்த அலைகளுக்குள் எம்மை நாமே சுயவிமர்சனமும் செய்துகொண்டு கொண்டாடலாம். அவ்வாறு
என்றென்றும் எம்மால் கொண்டாடப்படக்கூடியவர் மந்திரப்புன்னகைக்குச்
சொந்தக்காரரான தம்பையா அண்ணர்.