Published By: Digital Desk 7
20 Dec, 2024 | 09:04 AM
கலாநிதி ஜெகான் பெரேரா
பொறுப்புக்கூறும் கடப்பாடுடைய அரசாங்கத்துக்காக மக்கள் அளித்த ஆணை அருகித் தேய்ந்து போவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று பாராளுமன்ற சபாநாயகர் பதவியை துறந்த பின்புலத்தில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க செய்த அறிவிப்பு தேசிய மக்கள் சக்தியை அதிகாரத்துக்கு கொண்டுவந்த தேர்தல்களின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் தடத்தில் அமைந்திருக்கிறது.
மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பேணிக்காப்பதில் உள்ள உறுதிப்பாட்டை மீளவலியுறுத்தியிருக்கும் ஜனாதிபதி எந்த தரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் தவறிழைப்பவர்களுக்கு எதிராக தனது அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்தே தீரும் என்று தெரிவித்ததுடன் மக்களின் ஆணையைப் போற்றி மதித்து சகல மட்டங்களிலும் பொறுப்புக்கூறலை உறுதிப்டுத்தும் அரசாங்கத்தின் குறிக்கோளை அழுத்திக் கூறியிருக்கிறார்.
இது அரசாங்கம் அதன் ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதில் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் ஒரு அறிகுறியாகும். மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு இருக்கும் ஆதரவுத் தளத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கு இந்த நிகழ்ச்சித் திட்டம் உதவும். அதிகாரத்துக்கு மீண்டும் வருவதற்காக எந்த மட்டத்துக்கும் கீழிறங்கக்கூடிய அரசியல் எதிரிகளை சட்டரீதியாகவும் நியாயமான முறையிலும் வலுவிழக்கச் செய்வதற்கு அல்லது இயங்க இயலாமல் செய்வதற்கு ஒரு வாய்ப்பையும் இது வழங்கும். அரசியல் எதிரிகள் முன்னர் ஊழலில் ஈடுபட்டவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமானால் இது சாத்தியமாகும்.
ஊழல் பிரச்சினையை கையாளுவது வேறு வழிகளிலும் கூட அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையும். அது நாட்டில் வர்த்தகத்துறைக்கு அனுகூலமான பருவநிலையை மேம்படுத்துவதன் மூலமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெருமளவுக்கு கவர்ச்சியான நாடாக இலங்கையை மாற்றும். பதவியில் இருந்த அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட வரிவிடுமுறை உட்பட மருட்சியான நடவடிக்கைகளினால் கவரப்படாதவர்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருந்து வருகிறார்கள்.
ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி உலகளாவிய மட்டத்தில் 14 பேருக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது. அவர்களில் ஊழல்தனமான அரசாங்க கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டமைக்காக இரு இலங்கையர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது முக்கியமான ஒரு விடயமாகும்.
அரசாங்கத்தை அன்றி பிரத்தியேகமாக தனிநபர்களை இலக்குவைத்து விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் அமெரிக்கா இலங்கை தலைமைத்துக்கு எதிராக செயற்படவில்லை, மாறாக நீதி மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான கோட்பாடுகளை கடைப்பிடிப்பதில் பற்றுறுதி கொண்டிருக்கிறது என்பதை சமிக்ஞை காட்டுகின்றன.
ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்த தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் அதன் நிறுவனங்களை தூய்மைப்படுத்துவதற்கு கொண்டிருக்கும் ஆணையை அமெரிக்கா முறைமுகமாக வலுப்படுத்துகிறது.