பவளவிழா காணும் படைப்பிலக்கியவாதி பேராசிரியர் ஆசி. கந்தராஜா ! பல்வேறு இலக்கியவிருதுகளைப்பெற்ற தாவரவியல் அறிஞர் ! ! முருகபூபதி

மது தமிழ் சமூகத்தில்  தமது தொழில்சார் அனுபவங்களை


படைப்பிலக்கியத்தில் வரவாக்கியிருப்பவர்கள் மிகவும் குறைவு.

எனினும், தமிழர்கள்  புலம்பெயர்ந்த  நாடுகளில், குறிப்பாக அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன், மற்றும் தாவரவியல் பேராசிரியர் ஆசி. கந்தராஜா ஆகியோர், தாம் சார்ந்திருந்த தொழில் துறையில் தாம் கற்றதையும், பெற்றதையும் புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வாண்டு தனது பவளவிழாவை கொண்டாடும் பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவுக்கு எனது  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறே இந்தப் பதிவை எழுதுகின்றேன்.

எனக்கு அவரை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் நன்கு தெரியும். 


அவரது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் அறிந்திருந்திருந்தமையால், 1997ஆம் ஆண்டு எனது எழுத்துலக பிரவேச வெள்ளிவிழாக்காலத்தில் மெல்பனில் நடந்த விழாவுக்கு அவரை தலைமை தாங்குவதற்கு அழைத்திருந்தேன்.

அந்த விழா மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் அவரது தலைமையில் நடந்தபோது,  மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை, கவிஞர் அம்பி, ஓவியர் கே.ரி. செல்வத்துரை, அண்ணாவியார் இளைய பத்மநாதன் ஆகியோர்  பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அன்று முதல் கந்தராஜா அவர்கள் மெல்பன் கலை, இலக்கிய வட்டாரத்திலும் நன்கு அறிமுகமானவர்.  சிட்னி இலக்கியப் பவர் அமைப்பிலும் இணைந்திருந்தார்.  அண்ணாவியார் இளைபத்மநாதனின்  ஒரு பயணத்தின் கதை கூத்திலும் பங்கேற்றிருந்தார். அந்தக் கூத்து மெல்பனில் அரங்காற்றுகை செய்யப்பட்டபோதும் வருகை தந்திருந்தார்.

சிட்னியில் தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்ட வேளையில் அங்கிருந்த தமிழ் அறிஞர்கள், கல்விமான்களுடன் இணைந்து  செயல்பட்டவர்.

கந்தராஜா,  இலங்கை வடபுலத்தில் கைதடி கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு, புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த  தமிழ் ஆசான் ( அமரர் ) ஆறுமுகம் சின்னத்தம்பி – முத்துப்பிள்ளை தம்பதியரின் செல்வப்புதல்வனாகப் பிறந்தார்.


தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் முன்னாள் மாணவரான ஆசி. கந்தராஜா, கிழக்கு ஜேர்மனி பல்கலைக்கழகம் ஒன்றின் புலமைப்பரிசில் பெற்று அங்கு உயர்கல்வியை தொடர்ந்தவர்.

விவசாயம், தாவரவியல்  பூங்கனியியல், உயிரியல் தொழில்நுட்பவியல்  துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளை நிறைவு செய்து பின்னாளில் பேராசிரியராக சிட்னி பல்கலைக்கழகங்களில் பணயாற்றியவர். அத்துடன் இலங்கை, உட்பட சில நாடுகளிலும் வருகை தருபேராசிரியராக பணியாற்றி வருபவர்.

1970 களில் கிழக்கு ஜேர்மனியில் தான்  கற்றகாலத்தில் பெற்றுக்கொண்ட அரசியல் அனுபவங்களை  பல வருடங்களுக்குப்பிறகு, அகதியின் பேர்ளின் வாசல் என்ற நாவலாக வரவாக்கினார்.  கந்தராஜாவின் சில சிறுகதைகள் ஆங்கிலத்திலும் ( Horizon ) சிங்களத்திலும்   ( ஹெய்க்கோ )  வெளிவந்துள்ளன.

சிறுகதை, நாவல், புனைவுசாரா இலக்கியம், கட்டுரை, பயண


இலக்கியம் , அறிவியல் கதைகள் முதலான துறைகளில் பல நூல்களை பேராசிரியர் ஆசி. கந்தராஜா வரவாக்கியுள்ளார். அவை வருமாறு:

பாவனை பேசலன்றி ( சிறுகதைத் தொகுப்பு )

தமிழ் முழங்கும் வேளையிலே (  நேர்காணல்களின்  தொகுப்பு )  

உயரப்பறக்கும் காகங்கள் ( சிறுகதைத் தொகுப்பு )  

  Horizon ( சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு )

கீதையடி நீயெனக்கு...  ( குறுநாவல் தொகுப்பு )

கறுத்தக் கொழும்பான். ( புனைவு சாரா இலக்கியம் )  

செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.                               ( புனைவு சாரா இலக்கியம் )  

கள்ளக்கணக்கு ( சிறுகதைத் தொகுப்பு )

ஹெய்க்கோ ( சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு )

பணச்சடங்கு ( சிறுகதைத் தொகுப்பு )

மண் அளக்கும் சொல் (  புனைவு சாரா இலக்கியம் )  

அகதியின் பேர்ளின் வாசல் ( வரலாற்றுப் புதினம் )

சைவமுட்டை ( அறிவியல் புனைகதைகள் )

இந்திய சாகித்திய அகடமி வெளியிட்டிருக்கும்  கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் என்ற தொகுப்பிலும் கந்தராஜாவின் ஒரு சிறுகதை இடம்பெற்றுள்ளது.


இலங்கை அரசின் தேசிய  சாகித்திய விருதுகளை இரண்டு தடவைகள் பெற்றிருக்கும் பேராசிரியர் ஆசி. கந்தராஜா,  தமிழ்நாடு திருப்பூர்  தமிழ்ச்சங்க  இலக்கியவிருது , தமிழியல் விருது , தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் விருது ,  பேராசிரியர் நந்தி சிவஞானசுந்தரம் ஞாபகார்த்தமாக   வென்மேரி அறக்கட்டளை வழங்கிய பன்முக தமிழ் ஆளுமைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது  ஆகியனவற்றையும் பெற்றிருக்கிறார்.

கந்தராஜாவின் படைப்புகள் தொடர்பாக பேராசிரியர்கள் எம். ஏ. நுஃமான், அ. இராமசாமி , எழுத்தாளர்கள் ( அமரர் ) எஸ். பொன்னுத்துரை,  ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், அ. முத்துலிங்கம், அனோஜன் பாலகிருஷ்ணன், சந்திரவதனா,  வ. ந. கிரிதரன் ஆகியோர் விரிவாக தங்கள் வாசிப்பு அனுபவங்களை எழுதியிருக்கின்றனர்.

கந்தராஜா வானொலி ஊடகவியலாளராகவும் இயங்கி வருபவர்.


சிட்னி தாயகம் வானொலியில்  நிலா முற்றம் என்ற நிகழ்ச்சியையும் வாரந்தோறும் தொகுத்து வழங்குகிறார்.

பவளவிழா நாயகர் பேராசிரியர் ஆசி. கந்தராஜா அவர்கள் தொடர்ந்தும் தனது படைப்பிலக்கியத்துறையில் சாதனைகளை மேற்கொள்ளவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

                                   























































----0---


letchumananm@gmail.com

 

No comments: