தமிழ் மொழியின் மகத்தான இலக்கியக் கருவூலம் சிலப்பதிகாரம். தமிழரின் முதல் காப்பியம் முத்தமிழ் காப்பியம்> தமிழரின் கலாசாரத்தை உலகிற்கு கொண்டுவந்துள்ள தமிழரின் வரலாற்றுக் காப்பியமாகும். இவற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு உலகச் சிலப்பதிகார அறக்கட்டளை தமிழ் இலக்கியக் கலைமன்றம்> சிட்னி> மற்றும் பிற தமிழ் அமைப்புகள் இணைந்து சிலப்பதிகாரம் 3வது சர்வதேச மாநாட்டை நவம்பர் 30 & டிசம்பர் 01>
2024 ஆகிய தினங்களில் தமிழர் மண்டபத்தில் நடத்தவுள்ளன.
3வது சிலப்பதிகார மகாநாட்டை முன்னிட்டு> சிலப்பதிகாரத்தின் பெருமையையும் சிறப்புக்களையும் மாணவர்களும் அறியும் பொருட்டுப் பேச்சுப்போட்டிகள் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு நடாத்தப்படவுள்ளன. தயாரிக்கப்பட்ட பேச்சுக்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் கீழே வழங்கப்படுகிறது. பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலாம் பரிசு பெறுபவருக்குத் தங்கப் பதக்கம் மகாநாட்டில் வழங்கப்படவுள்ளது.
பிரிவுகளும் வயதெல்லைகளும் |
|
கீழ்ப்பிரிவு |
01.08.2018
க்கும் 31.07.2015 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
மத்தியபிரிவு |
01.08.2015
க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
மேற்பிரிவு |
01.08.2011
க்கும் 31.07.2006 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
இப் போட்டிகள் சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் 20 October, 2024 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களையும் விண்ணப்பப் படிவங்கள், பேச்சுக்கள் ஆகியவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்.
போட்டிகள் பற்றித் தொடர்பு கொள்ள வேண்டியவர்க்ள்:
1. திரு கு. கருணாசலதேவா 0418 442 674
2. திருமதி க. ஜெகநாதன் 0434
098 842
விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி
செய்து 19 October 2024 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பங்குபற்றுவர்களின் வயது கணிக்கப்படும் திகதி 31/07/2024.
ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக $10 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது.
பேச்சுப்போட்டி கீழ்ப்பிரிவு
நடுவர்களுக்கும் சபையோர்களுக்கும் எனது பணிவான வணக்கம்,
சிலப்பதிகாரம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேசும் நாடுகளாகிய சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடுகளில் நடந்த உண்மைக் கதையாகும். இது ஒரு குடிமக்களின் காப்பியமாகும். முத்தமிழாகிய இயல், இசை, நாடகத்தைக் கொண்ட ஒரு கதையாகும். 2000 ஆண்டுகளுக்கு முன் நமது தமிழ்க் கலாச்சாரம், தமிழப் பண்பாடு, சமய ஒற்றுமை ஆகியவற்றை வெளி உலகத்கிற்கு காட்டிய முதல் காப்பியமாகும். தமிழன்னையின் அணிகலன்களாக விளங்குபவை ஐம்பெரும் காப்பியங்கள். அவற்றுள் முதன்மையானது சிலப்பதிகாரம். இது கோவலன் கண்ணகியின் கதையைக் கூறுகிறது.
சிலப்பதிகாரம்
முடியுடை மூவேந்தரையும் அவர்களின் நாடு, நகரத்தையும் காட்டுகிறது. அத்துடன் முத்தமிழையும் அடக்கி மூன்று நீதிகளையும் கூறுகிறது.
கோவலனும் கண்ணகியும் செல்வச் செழிப்பு மிக்க வணிகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் இனிதே இல்லறம் நடத்தினர். ஆனால் கோவலன் மாதவி என்ற ஆடல் நங்கையிடம் மயங்கி, கண்ணகியை விட்டுப் பிரிந்தான். தனது செல்வம் எல்லாம் இழந்து, மீண்டும் கண்ணகியிடம் வந்தான்.
கண்ணகியின் காற்சிலம்பை விற்றுப் பொருள் தேட இருவரும் மதுரை சென்றனர். மதுரையில் திருடன் என்று தவறாகக் கோவலன் குற்றம் சுமத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டான்.
இதை
அறிந்த கண்ணகி பொங்கி எழுந்தாள். பாண்டிய அரசவைக்குச் சென்றாள். தன் கணவன் கள்வன்
அல்லன்
என்பதை
நிரூபித்தாள். உண்மை அறிந்த பாண்டிய மன்னன் தன்னுயிர் இழந்தான். அரசியல் பிழைத்தவனை அறம் தண்டிக்கும் என்ற
நீதி இங்கே சொல்லப்பட்டுள்ளது.
நன்றி வணக்கம்.
பேச்சுப்போட்டி - மத்தியபிரிவு
நடுவர்களுக்கும் சபையோர்களுக்கும் எனது பணிவான வணக்கம்,
சிலப்பதிகாரம்
ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். இது சேர, சோழ, பாண்டிய நாடுகளை இணைத்து நிற்கிறது. முடியுடை மூவேந்தரையும் அவர்களது தலைநகரங்களையும் விளக்கி நிற்கிறது. அத்துடன் முத்தமிழ்க் காவியமாகவும் மிளிர்கிறது. இதை எழுதியவர் இளங்கோ அடிகள்.
கோவலன் கண்ணகி வாழ்க்கையே சிலப்பதிகாரக் கதையாகும். கோவலனும் கண்ணகியும் இனிதே இல்லறம் நடத்தினர். அவ்வேளை மாதவி என்ற நடனமங்கையுடன் கோவலன் கொண்ட தொடர்பால் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். தனது செல்வம் யாவற்றையும் இழந்தான். மீண்டும் கண்ணகியிடம் வந்தான். கண்ணகி, கோவலன் நிலையறிந்து 'சிலம்புள கொண்மின்' என்று தனது காற்சிலம்பில் ஒன்றைத் தந்தாள்.
சோழநாட்டில் பிழைத்த வாழ்வைத் திருத்தப் பாண்டிய நாடு வந்தனர். மதுரையில் கண்ணகியின் காற்சிலம்பை விற்கக் கோவலன் சென்றான். அவ்வேளை, கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்டான். செய்தி அறிந்த கண்ணகி ஆவேசத்தோடு பாண்டிய அரசவை சென்றாள். தன் கணவன் கள்வன் அல்லன் என்று நிரூபித்தாள்.
அரசியல் அறம் தவறிய பாண்டிய மன்னன் அதிர்ச்சியில் தானே உயிர் துறந்தான். கண்ணகியின் ஆற்றாமை கண்டு அக்கினி மதுரையைச் சுட்டெரித்தது. கோபம் அடங்காத கண்ணகி சேரநாடு சென்றாள். மலையுச்சியில் மக்கள் பார்க்க தேவலோகம் சென்றாள். ஆம்! கண்ணகி தெய்வமானாள். கண்ணகி வழிபாட்டைத் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் இன்றும் காணலாம். நன்றி வணக்கம்.
பேச்சுப் போட்டி - மேற்பிரிவு
நடுவர்களுக்கும் சபையோர்களுக்கும் எனது பணிவான வணக்கம்,
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
'செஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு'
என்று பெருமிதத்தோடு பாடியவர் புரட்சிக்கவி பாரதி.
ஆம்!
கற்போரைக் கவர்ந்து, காலங்களை வென்று
கவின் இளமை பொழந்திட விளங்கும்
தமிழ் மொழியின் மகத்தான இலக்கியக் கருவூலம் சிலப்பதிகாரம்.
இது
ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையானது. தமிழரின்
வாழ்வைச் செதுக்கி அமைக்க எழுந்த அற்புதக் காப்பியம் எனலாம். இந்தியா, இலங்கை என்ற எல்லைக்களைத் தாண்டி, உலகம்
முழுவதும் பரவி வாழும் தமிழர்களின் இதய அடுக்குகளில் இக்காப்பியம் இன்றும் வாழ்கிறது.
2000
ஆண்டுகளிற்கு முன்பு வாழ்ந்த நமது பழந்தமிழரின் வாழ்வியல், கலாசாரம், கலைகள், மன்னர்
ஆட்சி, நகர அமைப்பு, கடல் கடந்த வாணிபம், நாட்டுச் செழிப்பு என்பவற்றைச் சிலப்பதிகாரம்
உலகிற்குப் பறைசாற்றி நிற்கிறது. மலை முகடுகளில்
இருந்து புறப்படும் நதியானது, எல்லைகளற்று நீள்வதைப் போலச் சிலப்பதிகாரம் என்னும் இலக்கியப்
பனுவல் தமிழ்ச்சமூகம் முழுவதும் வியாபித்துள்ளது என்றால் மிகையாகாது.
தமிழரின்
வரலாற்றைக் காட்டும கண்ணாடியாக நிலைத்துள்ள சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் எனும்
முத்தமிழையும் தன்னகத்தே கொண்டெழுந்த முதற் காப்பியமாகும். இது மூவேந்தர், மூன்று நாடு, மூன்று தலைநகரங்கள்,
முத்தமிழ், மூன்று நீதிகள், இசை நடனம் வாத்தியக் கருவிகள் என்பவற்றையெல்லாம் மூன்று
காண்டங்களில் முப்பது காதைகளில் அடக்கிச் சொல்லியுள்ள குடிமக்கள் காப்பியம் ஆகும்.
புலம்பெயர்ந்து
வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் ஒப்பற்ற நம்பிக்கையாக, எதிர்கால தலைமுறையைச் சேர்ந்த
இளம் தமிழராகிய நாம் தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை அறிந்து கொள்ளவும், காத்து மேலெடுத்துச்
செல்லவும், சிலப்பதிகாரம் வழிகாட்டும். அத்துடன்
மனிதகுல நாகரீகத்திற்கு வளங்கூட்டி நெறிகாட்டும் தலைமைக் காப்பியமாகச் சிலப்பதிகாரம்
என்றும் விளங்கும் என்று கூறி அமைகின்றேன்.
நன்றி
வணக்கம்.
No comments:
Post a Comment