இதயம் எனும் பம்பி வைத்து இடை விடாது எம்ப வைத்து
அதையும் இதையும் அனுப்பி வைக்க அங்கோர் வலைப் பின்னல் வைத்து
குருதிப் புனல் ஊற்றி வைத்து குறிப்பறிந்து ஓட விட்டு,
கலனில் புனல் ஓடும் போது கணக்கீடாய் அமுக்கம் வைத்து,
அதிகரிக்கும் பொழுதுகளில் அதில் எம்மை அமுக்க வைக்கும்
அந்தரத் தந்திரமே - குருதி அமுக்கம் எனும் மந்திரமே.
மேலொரு இலக்கம் கீழொரு இலக்கம் மேதினியிலே இது மருத்துவர் வழக்கம்,
மாறுதல் தொடக்கம் - பல மாற்றங்கள் தொடரும்.
புரியாத நிலையில் போரொன்று தொடங்கும்.
அறியாத வகையில் அழிவு கதை எழுதும்.
ஆரவாரமில்லா அமுக்க வெடியில் அத்திவாரங்கள் ஆடும் -
நாடித் துவாரங்கள் மூடும் - நெஞ்சில் பாரங்கள் தோன்றும்
பலமாகும் போது - குருதிப் பாதைகள் மூடும் - வாழ்வு பாடையைத் தேடும்.
விசை என்னும் கசை பட்டு - இதயத் தசைகள் தடிக்கும்.
இடிப்புகள் தொடர இதயம் களைக்கும், உனக்கும் களைக்கும்.