தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி – தவத்திரு மறைமலை அடிகள்

(சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950)

 தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி – தவத்திரு மறைமலை அடிகள்

 A person with a yellow scarf

AI-generated content may be incorrect.

                                                                         

                                                 சிவஞானச் சுடர் பல்மருத்துவ கலாநிதி

                                                                         பாரதி இளமுருகனார்


துங்கமுக  ஐங்கரனின் பாத பங்கயம்

      துணையெனவே மெய்யான துய்யனாய் நித்தம்

எங்குந்தமிழ் எதிலுந்தமிழ் என்று முழங்கி

      இயற்கைதனை எய்தும்வரை அயர்ச்சி இன்றி

தங்கத்தமிழ் மொழிதனிலே பிறமொழிக் கலப்போ

      தகாதென்று போராடி வெற்றி கண்டு

மங்காத புகழுடனே வாழ்ந்த பெரியார்

      மறைமலையெனும் பெயர்கொண்ட அடிகளார் அன்றோ?


இயற்பெயராய்ப் பெற்றோர்கள் வேதா சலமென

     இட்டதையே தமிழாக்கி மறைமலை எனவே

தயக்கமின்றி மாற்றியதொடு தனித்தமிழ் இயக்கம்

     தாயகத்தில் மலர்வதற்கு வித்தும் இட்டார்

மயக்கமுற்றோர் இந்திமொழிக்(கு) ஆதர வளிக்க

     மதயானை போலெதிர்த்துச் சிறைக்குஞ் சென்றார்!

வியக்கவைக்குஞ் செயலெனவே இயற்கை உணவை

     வேகமாகப் பரப்புவதில் தாகங் கொண்டார்!.

Maraimalai Adigal - Alchetron, The Free Social Encyclopedia 







தனித்தமிழே அவர்வாழ்வின் மூச்சாய்ப் பேச்சாய்த்

     தாரகமந் திரமாகித் தனித்தமிழி யக்கமாய்

மனித்தப்பி றவியெடுத்துப் பிறந்த தற்கு

     மகத்தான பணியிதெனத் தூய தமிழதன்

புனிதமென்றும் மங்காதிருக்க வழிச மைத்தார்!

     புதல்வர்க்குக் கலப்பில்லாப் பெயர்கள் சூட்டி

குனித்தபிறை சூடியேதனித் தெய்வ மென்று

     குவலயத்தோர் கும்பிடவும் வேண்டி நின்றார்!

 

கைப்பிடித்த  கயல்விழியாள்  சவுந்திர வல்லியைக்  

     கலந்தாறு பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தார்!

செப்பமுடன் சித்தாந்தத் தீபிகை என்னும்

     செந்தமிழிதழ் ஆசிரியராய்த் தொடர்ந்(து) அதிலே

ஒப்பரிய சித்தாந்தக் கருத்தை யெல்லாம்

     ஓரைந்து கட்டுரையில் எழுதி வைத்தார்

செப்பமுடன் சமரசசன் மார்க்க மென்னும்

     சீரியநற்  சங்கமொன்றைச் சிறப்புற அமைத்தார்!.


பொதுநிலைக் கழகமென்றதற்குத் தனித் தமிழில்

     புதியதொரு பெயரிட்டு வளர்த்து வந்தார்

எதுசிறந்த தெனவகுத்து நூல்க ளாக்க

     எற்றம்மிகு ஆக்கங்களைச் சேக ரித்து

விதுப்புடனே திருமுருகன் அச்ச கத்தை

     வேகமாகத் தாபித்து நூல்கள் பதித்த

சதுரராகத் திகழ்ந்ததுடன் மணிமொழி என்னும்

     சகலநூலகம் நிறுவிச்சா தனையும் புரிந்தார்!

 

திருநெறிய தேன்தமிழின் தேசுடன் வனப்பும்

     திரிபடைந்து குன்றாது என்றும் மாறாப்

பருவமொடு கன்னியென் றிலங்கப் பாவலர்

     பாங்கறிந்து பாடிமகிழ் வெய்த வெண்ணி

அருவருக்குஞ் செயலெனவே பிறமொழி கலக்கும்

     அற்பர்செயல் தடுத்திடவே தனித்தமிழ் இயக்கம்

பெருமனத்தோன் மறைமலையார் பிறக்கச் செய்தார்.

     பேறெனவே தமிழுலகம் போற்று தம்மா!

 

தன்மானங் குன்றிடாத ஆசிரி யராகித்

     தனித்தமிழ் இயக்கத்தை மாணவர் மனதில்

வன்னிப்பாய்ப் பதியவைத்து  வாகர னாகி

     வாஞ்சையொடு மலரவிட்டார்! வளமான பேச்சால்

தென்னரசர் வளர்த்தமைபோற் சீர்மை செய்து

     செந்தமிழுக்(கு) அரணம்போல் விளங்கிய தோடு

மன்னுசைவ நெறியெங்கும் மிகுந்தே ஓங்க

     மாதவத்து அடிகளாகி விளங்கிப் போந்தார்!

 

 


வேதாசலம் = வேதம்-மறை  அசலம்-மலை= மறைமலை

சீர்மை - செம்மை

தென்னரசர் - பாண்டிய மன்னர்கள்

அரணம் – காவல் வேலி

குனித்தபிறை சூடி சிவபெருமான்

விதுப்பு - ஆசை

சதுரர் – அறிஞர்

வன்னிப்பாய் - சிறப்பாக்

வாகர னாகி  - வீரனாகி

 

A stamp with a person in a robe

AI-generated content may be incorrect.

===========================================

No comments: