ஐ.நாவில் இலங்கைக்கு மேலும் ஒரு வருட கால அவகாசத்திற்கு ஏற்பாடு
ஸ்ரீலங்கன் பெறுகை ஒப்பந்தம்: விசாரணைகள் நடத்த CIDக்கு கொழும்பு நீதவான் உத்தரவு
இலங்கை விஜயத்தை நிறைவு செய்த எஸ். ஜெய்சங்கர் நாடு திரும்பினார்
சம்பந்தனுக்கு கொழும்பில் அரசு வழங்கிய வீடு
IMF இலக்குகளை அடையவும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்
பொதுத்தேர்தலைத் தொடர்ந்து உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்
ஐ.நாவில் இலங்கைக்கு மேலும் ஒரு வருட கால அவகாசத்திற்கு ஏற்பாடு
சுமந்திரனுடனான சந்திப்பில் ஜூலி சங் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் (02) கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.
இதன்போது, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளடங்கலாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம், ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து சுமந்திரனிடம் தூதுவர் ஜூலி சங் கேட்டறிந்தார். அதேபோன்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சுமந்திரன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்தல் என்பன உள்ளடங்கலாக சில நேர்மறையான வாக்குறுதிகளை இப் புதிய அரசு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதற்கு அமெரிக்கத் தூதுவர், தம்மிடம் ஊழல், மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு அவசியமான தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், அதனை அரசுக்கு வழங்கி உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளமுடியுமா? என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தியால் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவித்தார். நன்றி தினகரன்
ஸ்ரீலங்கன் பெறுகை ஒப்பந்தம்: விசாரணைகள் நடத்த CIDக்கு கொழும்பு நீதவான் உத்தரவு
ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்தின் பெறுகைக் குழுவின் பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய கணினி தரவுகள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள
வேண்டுமென கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே பணிப்புரை விடுத்துள்ளார். கணினியின் தரவு சேமிப்பகத்தை (ஹார்ட் டிரைவ்) பொறுப்பேற்று அதை அரசாங்க ஆய்வாளரிடம் சமர்ப்பிக்குமாறும், இது தொடர்பாக விரிவான அறிக்கையைப் பெறுக்கொள்ளுமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரை பிரதான நீதவான் அறிவுறுத்தினார்.
மூன்று விமானங்களின் (பயிற்றுவிப்பாளர்கள்) கொள்வனவு குறித்து பெறுகை பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கி குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உதவுமாறும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஹெலி அசோசியேட்ஸ் இன்டர்நேஷனல் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் துஷார ஜனக்கவினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் விமான கொள்வனவு பரிவர்த்தனைகள் காரணமாக அவரது நிறுவனத்துக்கு 738,000 அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டமை தொடர்பாக குற்றவியல் நம்பிக்கை மீறல் இடம்பெற்றதாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அவ்வப்போது முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் பிரதம நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரை அறிவுறுத்தியுள்ளார். நன்றி தினகரன்
இலங்கை விஜயத்தை நிறைவு செய்த எஸ். ஜெய்சங்கர் நாடு திரும்பினார்
- 20 மில் டொலர் 7 கடனுதவி திட்டங்களை நன்கொடைத் திட்டங்களாக மாற்ற யோசனை
வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் 2024 ஒக்டோபர் 04 ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்திருந்த அவர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவையும் சந்தித்ததுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் உடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்தித்திருந்தார்.
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் உடனான தனது கலந்துரையாடல்களின்போது, அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் சாகர் (SAGAR) கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்பினை மேலும் முன்னேற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் முன்னுரிமையின் அடிப்படையிலான பணித்திட்டங்கள் ஊடாக இலங்கைக்கு இந்தியா வழங்கிவருகின்ற அபிவிருத்தி உதவிகள் தொடருமெனவும் அவர் உறுதியளித்திருந்தார்.
அந்த அடிப்படையில் காங்கேசன்துறை துறைமுகத்தினை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை ஊடாக நவீனமயப்படுத்துவதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கடனுதவித் திட்டங்களின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் நிறைவேற்றப்பட்ட 7 பணித்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை நன்கொடைத்திட்டங்களாக மாற்றமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை புகையிரத சேவைகளுக்காக டீசலில் இயங்கும் 22 புகையிரத எஞ்சின்களை அன்பளிப்பாக வழங்குவதற்கும் இந்தியா தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி உடனான சந்திப்பின்போது எரிசக்தி உற்பத்தி மற்றும் பரிமாற்றம், எரிபொருள் மற்றும் LNG விநியோகம், வழிபாட்டுத்தலங்களுக்கான சூரியக்கல மின்மயமாக்கல், இணைப்புகள், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, சுகாதாரம், மற்றும் பால்துறை அபிவிருத்தி குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் உரையாடியிருந்தார். இவ்வாறான துறைகள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பு வழங்கும் அதேவேளை வருமானத்துக்கான புதிய மார்க்கங்களையும் உருவாக்குமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார். செழிப்புமிக்க ஓர் இலங்கைக்கான தனது நோக்கினை நனவாக்குவதிலும் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதிலும் இந்தியாவின் பொருளாதார ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இலங்கை ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தியினை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆற்றல்கள் குறித்து தெரிவித்திருந்த அவர், இலங்கையில் உற்பத்திச் செலவினை குறைப்பதற்கும் மேலதிக வளங்களை உருவாக்குவதற்கும் இது ஆதரவாக அமையுமெனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் பங்களிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன் இத்துறையானது மேலும் வளர்வதற்கான சாத்தியங்களை கொண்டிருப்பதனையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.
அதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர், தலைமைத்துவத்துடன் மேற்கொண்ட உரையாடல்களின்போது, இந்திய முதலீடுகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், இலங்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கல், மற்றும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் வருகையினை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் ஆளுமைவிருத்தி தேவைகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றினை நிவர்த்திசெய்வதற்கும் இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் மூலமான நலன்கள் குறித்தும் அவர்களது சந்திப்பில் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் கூறியிருந்த வெளியுறவுத்துறை அமைச்சர், ஆரம்பம் முதலே இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்காக இந்தியா ஆதரவளித்துவந்ததாக நினைவூட்டியிருந்தார். இந்தியா முதலாவதாக நிதி உத்தரவாதத்தினை வழங்கியிருந்ததுடன் அதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட நிதி வசதி குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வழிகோலப்பட்டது. நாட்டிற்கான சர்வதேச முறிகளின் உரித்தாளர்களுடனான உடன்படிக்கைகள் தொடர்பாக உத்தியோக பூர்வ கடன் வழங்குனர்கள் சபையில் இந்தியாவின் ஆதரவை வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார். இலங்கையுடனான தனது இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படுவதனை துரிதப்படுத்துவதற்கும் இந்தியா விரும்புகின்றது. இவ்விடயத்தில் ஜனாதிபதியும் தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.
பாதுகாவல் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா மற்றும் இலங்கையின் நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளமையை இச்சந்திப்புகள் வெளிக்காட்டியிருந்தன. இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டதுடன் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கும் பங்களிப்பினை வழங்குகின்றது. நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றினை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான பேச்சுக்கள் அவசியமானதெனவும் இவ்விஜயத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இலங்கையின் ஆட்புலத்தினை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாதென ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் கவலையினை வெளியிட்டிருந்தார். இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுதலைசெய்யப்படவேண்டுமெனவும், அவர்கள் மீதான கடுமையான அபராதம் குறித்தும் மறுபரிசீலனை செய்யப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையானது, இந்த விவகாரத்தை தீர்த்துவைப்பதற்கான ஒரு நிலையான அடித்தளத்தினை உருவாக்கும். மீன்பிடித்துறை மற்றும் மீனவர் சங்கங்கள் குறித்த கூட்டுப் பணிக் குழு கூட்டம் உரிய காலத்தில் நடத்தப்படும். மேலும், 50 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டமையை வெளியுறவுத்துறை அமைச்சர் பாராட்டியிருந்தார்.
இனப்பிரச்சினை சார்ந்த விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுகின்ற அதேவேளை தமிழ் மக்கள் உள்ளிட்ட சகல சமூகங்களினதும் சமத்துவம், நீதி , கௌரவம், சமாதானம் ஆகியவற்றுக்கான அபிலாஷைகளுக்கான இந்தியாவின் ஆதரவினை வெளியுறவுத் துறை அமைச்சர் மீள வலியுறுத்தியிருந்தார். இந்த இலக்கை எட்டுவதற்கு இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாகவும் வினைத்திறன் மிக்கவகையிலும் அமுல்படுத்துதல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முற்கூட்டியே நடத்துதல் ஆகியவை வழிசமைக்கும்.
பரஸ்பரம் பொருத்தமான ஒரு திகதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சரால் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நன்றி தினகரன்
சம்பந்தனுக்கு கொழும்பில் அரசு வழங்கிய வீடு
மூன்று வருடங்களின் பின் மீளப்பெற நடவடிக்கை
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7, மஹாகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகப்பூர்வ இல்லம் சுமார் மூன்று வருடங்களாகியும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது.
இந்த வீட்டை மீண்டும் அரசாங்கம் பெறுவதற்கான முடிவை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்க வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதி, மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அமைச்சு அண்மையில் கையளித்த போதிலும், நாட்டில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றத்துடன் அந்த அங்கீகாரம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் 52 நாட்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
எனினும், 52 நாட்களின் பின்னர் இரா.சம்பந்தன் மீண்டும் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டதுடன், அன்று முதல் குறித்த இல்லத்தில் தொடர்ந்தும் அவர் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின்போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின்படி, 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, சம்பந்தன் இறக்கும் வரை அந்த வீட்டை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கத்தினால் ஏற்கப்படுவதாகவும், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு அந்த வீட்டின் திருத்தப்பணிக்காக மூன்று கோடியே ஐம்பது இலட்சம் ரூபா செலவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை குறித்த உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
IMF இலக்குகளை அடையவும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்
- அதிக VAT வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டம்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர கு மார திசாநாயக்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் நோக்கங்களுடன் கொள்கையளவில் அரசாங்கத்தின் பரந்த உடன்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, மக்கள் மீதான சுமையை அகற்றுமவது தொடர்பான மாற்று வழிகளின் ஊடாக அந்த நோக்கங்களை அணுகுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கான தற்போதைய ஜனாதிபதியின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மாற்று அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் உடன்பட்டனர்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வை ஆரம்பிப்பது தொடர்பில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தல் காரணமாக சில தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ள போதும் தடையின்றி இந்தப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். நன்றி தினகரன்
பொதுத்தேர்தலைத் தொடர்ந்து உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்
- உயர் நீதிமன்ற உத்தரவுக்கமைய நடவடிக்கை
– எல்பிட்டிய தேர்தல் ஒக்டோபர் 26 இல்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் பொதுத்தேர்தல் நிறைவடைந்ததும் அந்த தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக் குழு இந்த அறிவிப்பை விடுப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.
அதே வேளை 2023 உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிட்டுள்ளது.
2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய அடிப்படை உரிமை மனு தொடர்பில் 2024 ஓகஸ்ட் 22 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை தேர்தல் ஆணைக்குழு கவனத்திற் கொண்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தினத்தில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுக்கு இணங்க சட்டபூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ள வகையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை கவனத்திற் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றதும் உடனடியாகவே ஆணைக்குழு மிக விரைவாக உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு திகதியை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பாராளுமன்ற தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட வகையில் ஒக்டோபர் 26 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment