உலகச் செய்திகள்


சின்னத்திரை நடிகையின் ஜிம் மாஸ்டர் கணவர் தற்கொலை

வடகொரியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள தென்கொரியா..! 

 ஈராக்கில் தற்கொலை தாக்குதல் : 31 பேர் பலி

சிரியாவில் இரசாயனத் தாக்குதல்? சிறுவர்கள் உட்பட 58 பேர் பலி!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் ஐந்து பேர் பலி!


சின்னத்திரை நடிகையின் ஜிம் மாஸ்டர் கணவர் தற்கொலை

04/04/2017 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சரவணன் மீனாட்சி’ தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து வரும் நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்டார்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வம்சம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நந்தினி. எனினும், இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி நாடகமே! இதையடுத்து விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு?’ தொடரின் நடுவர்களில் ஒருவராகவும் கலந்துகொண்டார்.
சென்னையில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வரும் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதல் திருமணம் செய்துகொண்டார். சென்னை, வளசரவாக்கத்தில் இவர்கள் வசித்து வந்தார்கள்.
இந்நிலையில், இன்று (04) காலை கார்த்திகேயன் நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்டார். இவரது உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.   நன்றி வீரகேசரி 


வடகொரியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள தென்கொரியா..! 

06/04/2017 வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடிகொடுக்கும் வகையில், தென்கொரியா ஏவுகணை பரிசோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது. 
வடகொரியா பிராந்திய நாடுகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை  அச்சுறுத்தும் வகையில்,  தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருவதோடு, பல்வேறு கட்ட பரிசோதனைகளை சர்ச்சைகளுக்கு மத்தியில் மேற்கொண்டும் வருகிறது. 
இந்நிலையில் ஐ.நா. பொருளாதார தடை, உலக நாடுகளின் கண்டனம் என எதையும் பொருட்படுத்தாமல் தனது படைபலத்தை அதிகரித்து வரும் வடகொரியா, சமீபத்தில் ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தமைக்கு உலகளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.
குறித்த பிராந்திய பதற்றத்தை தகர்க்கும் முகமாகவும், வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தென்கொரியா புதிய ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. அத்தோடு தென்கொரியாவின் தயாரிப்பான குறித்த ஏவுகணையானது 800 கி.மீ. தூரம் வரை சென்று வடகொரியாவின் எந்த நகரையும் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பரிசோதனை வெற்றி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 
மேலும் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நவீன ஏவுகணைகளை நடப்பாண்டில் அந்நாட்டு இராணுவத்தில் இணைத்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரிஈராக்கில் தற்கொலை தாக்குதல் : 31 பேர் பலி

05/04/2017 ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியான டிக்ரிட்டில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 42 படுகாயமடைந்துள்ளனர்.
பொலிஸ் துறையை சேர்ந்த ரோந்து படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தற்கொலைப் படையை சேர்ந்த ஐந்து பேர் காவல் அதிகாரியின் வீட்டினுள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என சலாஹ_தீன் மாகாண சபையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
தற்கொலைப்படையை சேர்ந்த மூன்று பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், இரண்டு பேர் தங்கள் மீது கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர் என அகமது அல்-கரீம் என்பவர் தெரிவித்துள்ளார். 
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் 10 பேர் பொலிஸார் என்றும் இந்த தாக்குதலில் 42 பேர் காயமுற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தும் மொசுல் துப்பாக்கி சூட்டில் நடந்த இதே போன்ற தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சுன்னி எனும் தீவிரவாத அமைப்பு அடிக்கடி ஈராக் பாதுகாப்பு படையினரை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரி
சிரியாவில் இரசாயனத் தாக்குதல்? சிறுவர்கள் உட்பட 58 பேர் பலி!

04/04/2017 சிரியாவில் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரசாயனத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரசாயன வாயுவை சுவாசித்த பலரும் மூச்சடைத்தும், சுய நினைவிழந்தும் விழுந்து மரணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலரது வாயிலும் நுரை தள்ளியிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்ட பல குழந்தைகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் விமானம் மூலமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், இத்தாக்குதலால் மேலும் 60 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது. எனினும், இத்தாக்குதலை சிரிய இராணுவம் மேற்கொண்டதா, ரஷ்ய இராணுவம் மேற்கொண்டதா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை எனவும் அறிவித்துள்ளது.
இதேவேளை, டமஸ்கஸ் வட்டாரங்கள் இச்செய்தியை கடுமையாக மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் ஐந்து பேர் பலி!

05/04/2017 பாகிஸ்தானின் லாகூர் நகரில், உள்ளூர் நேரப்படி இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சனத்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் குழுவொன்றை இலக்காகக் கொண்டே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் இயங்கிவரும் தாரிக் - ஈ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. மேலும், பாதுகாப்புப் படையினரைப் பழிவாங்கும் நோக்கிலேயே இத்தாக்குதலைத் தாம் மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி


No comments: