.
இன்று எதேச்சையாக Lifestyle Channel இன் பொத்தானை அழுத்தினேன் அங்கு உடற் பயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள். போதனையாளர் நடுத்தர வயது பெண் போதனையாளருக்கு இருக்க வேண்டிய சகல திறமைகளும் கொண்டவர், நிகழ்சி திறமையாக யாவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் நிறைவில் போதனையாளர் ஒரு பெண்ணை நோக்கி இன்றய உனது சிந்தனைத் துளி யாது என வினவினார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் சிந்தனைக்கு ஒரு சிறு விருந்து கொடுப்பார்கள் போலும். அவள் “அன்பு இருக்கிறதே அதை நாம் இழந்துவிட முடியாது, அது நாம் அள்ளி கொடுக்க கொடுக்க எம்மையே வந்தடையும், எப்போது? மோட்ச உலகிலோ மறு பிறவியிலோ அல்ல, உடனடியாக தொடர்ச்சியாகவே அன்பானது திரும்பி வந்து எம்மையே அடையும் என்றார். இது ஒன்றும் புது கருத்து அல்ல, காலம் காலமாக நாம்கேட்டு வந்ததுதான். வள்ளுவர், சோகிரடீஸ் போன்ற அறிஞர்கள் கூறிதான் உள்ளார்கள். ஆனால் இங்கு பழய உண்மையை ஒரு புதிய ஒளியில் கண்டேன். இங்கோ உடற்பயிற்சியில் ஈடுபடும் ஓர் இளம் பெண் கூறியது, இந்த பின்னணி தான் என் சிந்தனையை கிளறியது எனலாம்.
அன்பு என்பது ஒரு பண்டமாற்று பொருளோ விற்பனை பொருளோ அல்ல, ஆனால் யாவற்றையும் பொருளியல் நோக்கில் அணுகுவோர்க்கு அன்பும் விற்பனை பொருளாகத் தான் காணப்படும். பல நூறு வருடங்களுக்கு முன் பக்தி ரசத்தை பாடலாக வடித்த மாணிக்கவாசர்ருக்கு அவ்வாறே தெரிந்தது போலும். திருவாசகத்தில் ஓர் இடத்தில்,
“ தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை,
சங்கரா யார்கொலோ சதுரர்” என்கிறார்
அதாவது நீ என்னை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக உன்னை எனக்கு தந்தாய், யார் இந்த வியாபாரத்தில் வெற்றி ஈட்டியவர் என்கிறார்.