.
"வான் அலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற பி ஹெச் அப்துல் ஹமீத் அவர்களின் நூல் அறிமுக விழா சிட்னியில் 17 09 2023, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ஓபன் சிவிக் சென்டர் மண்டபத்தில் இடம் பெற்றது. உலக அறிவிப்பாளராக பரிணமித்துக் கொண்டிருக்கும் திரு பி ஹெச் அப்துல் ஹமீத் அவர்களுடைய நூலை அறிமுகப்படுத்துவதற்காக டாக்டர் கேதீஸ்வரன், டாக்டர் நளாயினி, திரு . கதிர், திரு விந்தன் ஆகியோர் இன்னும் பலருடன் இணைந்து ஒரு குழுவாக இந்த நிகழ்வை சிட்னியிலே ஏற்பாடு செய்திருந்தார்கள்.
விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் மறைந்த வானொலியாளர் திரு சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் மருமகனும், SBS வானொலியின் அறிவிப்பாளருமான திரு சஞ்சயன் குலசேகரம் அவர்கள். நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் டாக்டர் கேதீஸ் அவர்கள் அதனைத் தொடர்ந்து நீண்ட காலம் வானொலியில் பணியாற்றிய திரு அப்துல் ஹமீத் அவர்களை நீண்ட காலம் அறிந்தவரும் மெல்பனிலே வசித்து வருபவருமான எழுத்தாளர் முருக பூபதி அவர்கள் இந்த நூலைப் பற்றிய அறிமுகத்தை மிகச் சிறப்பாக செய்தார்.
அப்துல் ஹமீத்அவர்கள் பற்றி, அவர்களுடைய நடவடிக்கைகள், சிறு வயதிலேயே அவர் செய்த விடையங்கள், வளர்ந்த பின் பணியாற்றும் போது செய்து கொண்ட விடயங்கள், நூலிலே பதிந்துள்ள விடயங்கள் என்று மிக அழகாக அந்த அறிமுக உரையை ஆற்றி இருந்தார் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள்.
வாழ்த்துரையை வழங்க வந்தார் இன்பத் தமிழ் ஒலி நிறுவனரும் அறிவிப்பாளருமான திரு பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள். அவருக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையாகவும் ரசிக்கும் படியாகவும் அந்த வாழ்த்துரையை வழங்கி இருந்தார். அப்துல் ஹமீத்அவர்களின் பொறுமை, தன்னடக்கம் என்பவற்றை குறிப்பிட்டு வாழ்த்தினார்.