பணம் படைத்தவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆருடன் பி. பானுமதி, பத்மினி, சரோஜாதேவி,ஜெயலலிதா


என்று பலர் ஜோடியாக நடித்துள்ளார்கள். ஆனால் சௌகார் ஜானகியும் ஒரு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் .அந்தப் படம் தான் பணம் படைத்தவன். ஆர் ஆர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படதத்துக்கு இப்போது வயது அறுபது.

 
சௌகார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகி குணச்சித்திர நடிகையாக புகழ் பெற்றவர் சௌகார் ஜானகி. தமிழில் சிவாஜி, ஜெமினி ஆகியோருடன் இணைந்து நடித்த இவருக்கு எம் ஜி ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு 1962ல் மாடப்புறா படத்தின் மூலம் கிட்டியது. ஆனால் அது நிறைவேறவில்லை. படப்பிடிப்புத் தளத்துக்கு எம் ஜி ஆர் வரும் போது சௌகார் ஜானகி கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்ததை எம் ஜி ஆர் ரசிக்க வில்லை. விளைவு படத்தில் இருந்து அவர் தூக்கப்பட்டார். இப்போது மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் எம் ஜி ஆருடன் இணையும் வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் இயக்குனர் ராமண்ணா. புதிய பறவை படத்தில் நவநாகரீகப்

பெண்ணாக சௌகார் நடித்ததை பார்த்து விட்டு தனது படத்திலும் ஏறக்குறைய அதே மாதிரியான பாத்திரத்தில் நடிக்க அவரை தெரிவு செய்தார். எம் ஜி ஆரும் இம்முறை அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

ஆனால் பதிலுக்கு எம் ஜி ஆரும் ஒரு நிபந்தனையை விதித்தார். அதுவரை காலமும் எம் ஜி ஆர் நடிப்பில் ராமண்ணா இயக்கிய எல்லா படங்களுக்கும் கண்ணதாசன் தான் பாடல்களை இயற்றி அப்பாடல்கள் ஹிட் அடித்தன. இப்போது அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தப் படத்துக்கு எல்லாப் பாடல்களையும் வாலிதான் எழுத வேண்டும் என்று சொல்லி விட்டார் எம் ஜி ஆர். வேறு வழியின்றி ராமண்ணாவும் உடன்பட்டார்.
 

கிராமத்தில் பணம் படைத்தவரான சண்முகம் பிள்ளையின் பிள்ளைகளான ராஜா, பாலு இருவரும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள கல்கத்தா செல்கிறார்கள். அங்கே தந்தையின் நண்பரான ரத்தினத்தின் அறிமுகம் ஏற்டபட்டு அவர் வீட்டிலேயே சில நாட்கள் தங்குகிறார்கள் . ரத்தினத்தின் மகள்கள் ராமா, உமா. ரமா மேல்நாட்டு நாகரீகத்தில் மோகம் கொண்டவள். ஆனாலும் ராஜாவை விரும்புகிறாள். ராஜாவோ அதே வீட்டில் வேலை செய்யும் சாந்தியை காதலிக்கிறான். உமாவும் பாலுவும் தீவிரமாக காதலிக்கிறார்கள். தனது இரு மகள்களும் ராஜா, பாலுவை மணக்க வேண்டும் இல்லையேல் பாலு, உமா கல்யாணம் நடக்காது என ரத்தினம் நிபந்தனை விதிக்கிறார். தனது தம்பி பாலுவின் காதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக ராஜா சாந்தி மீதான காதலை துறக்கிறான். ராமாவை கரம் பற்றுகிறான். ஆனால் முதல் இரவன்றே ராமாவுக்கு ராஜா மீது வெறுப்பு ஏற்படுகிறது. அவனை பழி வாங்குவதாக எண்ணி தன்னையே பலியாக்குகிறள் அவள்.

இடை வேளையுடன் முடிந்து விடக் கூடிய படத்தின் கதைக்கு ஒரு

திருப்பத்தை கொடுத்து மீதி படத்தை நகர்த்தியுள்ளார் கதாசிரியர். படத்தின் கதையையும், வசனத்தையும் சக்தி கிருஷ்ணசாமி எழுதியிருந்தார். எம் ஜி ஆருக்கு இது சற்று வித்தியாசமான கதை, அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் சக்தியின் வசனங்களும் கருத்தோடு நறுக்குடன் தெறித்தாற் போல் அமைந்தது. 

படத்தில் எம் ஜி ஆருக்கு உணர்ச்சிகரமாக நடிக்கவும்,காதலிக்கவும்,காதலியை எண்ணி கவலைப்படவும், தம்பியின் நிலை நினைத்து வருந்தவும், சண்டை காட்சிகளில் கலக்கவும் நல்ல வாய்ப்பு , அதனை தவற விடவில்லை அவர். காட்சிக்கு காட்சி சிரிப்பூட்டும் நாகேஷ் கூட சில இடங்களில் உருக்கமாக நடித்து கவருகிறார். சௌகார் நாகரீக நங்கையாக வந்து நிறைவாக செய்கிறார். கே ஆர் விஜயா இளமையாக காட்சியளிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் எம் ஜி ஆர் படத்தில் டி எஸ் பாலையா. இவர்களுடன் அசோகன், மனோகர், சேதுபதி, கீதாஞ்சலி , ஏ கே ,வீராசாமி, சீதாலஷ்மி ஆகியோரும் நடித்திருந்தனர்.


கண்ணதாசனுக்கு பதில் வாலியை பாடல் எழுதும்படி எம் ஜி ஆர் சொன்னது வீண் போகவில்லை. படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. டீ எம் எஸ், சுசிலா குரலில் ஒலித்த சிருங்கார ரசனையை வெளிப்படுத்தும் அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையை புடிச்சான் பாடல் படம் வெளிவந்த போது இளைஞர்களை வசியம் செய்து முணுமுக்க வைத்தது. கண் போன போக்கிலே கால் போகலாமா, பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் , எனக்கொரு மகன் பிறப்பான், தன்னுயிர் பிரிவதை பார்த்தவர் இல்லை, மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க ஆகிய பாடல்கள் விஸ்வநாதன் , ராமமூர்த்தி இசையில் ரசிகர்களை பரவசப்படுத்தின. 

படத்தின் சில காட்சிகள் கல்கத்தாவில் படமாக்கப்பட்டன. எம் ஏ ரஹ்மான் படத்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர் .எம் . நம்பியார் அமைத்த எம் ஜி ஆர், மனோகர் சண்டைக்காட்சி விறுவிறுப்பாக அமைந்தது.
 
எம் எஸ் விஸ்வநாதனிடம் உதவி இசையமைப்பாளராக இருந்தவர்

ஜோசப் கிருஷ்ணா. இவர் ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டராகவே திரையுலகில் பணிபுரிந்தார். இந்த படத்திலவர் அமைத்த கண் போன போக்கிலேயே, பருவத்தில் கொஞ்சம் பாடல்களுக்கான நடனம் ரசிக்கும் படி அமைந்தன. போதாக் குறைக்கு ஒரு கவர்ச்சி நடனத்தையும் அவர் அமைத்திருந்தார். 

எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு விருந்தாகவே படம் அமைந்த போதும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பொதுவாக எம் ஜி ஆர் இரு தாரம் மணப்பதை அவரின் ரசிகர்கள் விரும்புவதில்லை. அதுவும் படத்தின் வெற்றிக்கு தடையானது. ராமண்ணா தனது இயக்கத்தில் குறை வைக்காத போதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறுவிதமாக அமைந்து விட்டது. ஆனாலும் படத்தின் பாடல்கள் அறுபது ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களின் காதுகளில் ஒலித்த வண்ணம் உள்ளன.

1 comment:

Anonymous said...

You're a hero,
an information bureau!
வாலியின் வரிகளும் காரியம் கைகூட,
தைரியம் தருபவை, வீரியம் மிக்கவை, சபைகளுக்கேற்றவை,
அவைகளை அதிர்ப்பவை, 🙏
எனினும், *உணராமல் போவோர்க்கு
உதவாமல் போகும்.*