முப்பால் நூலினை முழுமையாய் படிப்போம் !

 












    


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா



எப்பொழுதும் எல்லோர்க்கும் இப்புவியில் உதவுதற்கு
முப்பாலை உவந்தளித்தார் முழுமையுடன் வள்ளுவனார் 
முப்பொருளைப் பக்குவமாய் முப்பாலும் செப்பியதே
அச்செயலை அகமெண்ணி ஆனந்தம் அடைந்திடுவோம்

வரலாற்றில் பலநூல்கள் வந்துவந்து போகிறதே 
வரலாறாய் ஒருநூலே வாழ்ந்தபடி இருக்கிறதே 
வரலாறாய் வாழ்வதற்கு வரமதற்கு வாய்த்ததனால்
வள்ளுவவரின் முப்பாலாய் மலர்ந்துமே இருக்கிறதே 

இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவோ இருக்கிறது
அதைப்படித்த பலபேர்கள் தலைக்கனத்தில் இருக்கின்றார் 
தலைக்கனத்தைத் தகர்ப்பதற்கு தகுந்தவொரு மருந்தாக
முப்பாலைக் கொடுத்தாரே முறையாக வள்ளுவனார் 



அறம் பொருளின்பம் அனைவர்க்கும் அவசியம்
அறத்தொடு நிற்றல் அதினிலும் அவசியம் 
உரைத்தது முப்பால் எனும்பெரும் பொக்கிஷம்
நிலத்தினில் அறமே நிம்மதி நல்கிடும்

முப்பால் என்னும் திருப்பாற் கடற்குள்
மூழ்குவார் யாவரும் அமுதமே பருகுவார்
தப்பாய் இருப்பார் அனைவரும் திருந்த
முப்பால் காப்பாய் முந்தியே நிற்கும் 

கடவுளைத் துதிக்கா எதுவும் தொடங்கா
கடவுளின் பெயரினைக் காட்டியே தொடங்கும் 
கடவுளைத் துதித்தும்  கடவுளைக் காட்டா
கருத்தை நுட்பமாய் மொழிந்தது  முப்பால்

அறவாழி என்றும் ஆதிபகவன் என்றும்
வாலறிவன் என்றும் போற்றியது முப்பால்
பெயர்சுட்டா வகையில் பெரும்பொருளைக் காட்ட
வகைசெய்த முப்பால் வாழும் நூலாகிறதே 

இல்லறம் சிறக்க நல்லற மீந்தது
எவையுமே சொல்லா முறையிலே அமைந்தது
உலகமே வியந்திடும் உயரறம் உரைத்ததால்
உலகிலே முப்பால் உயர்ந்துமே நிற்கிறது 

அன்பினைப் பற்றி உரைத்திடும் வகையில்
முப்பால் நூலே முத்திரை பதித்தது
அடைக்கின்ற தாழே இல்லையே என்று
அன்பின் உயர்வை முப்பால் மொழிந்தது

அன்பினை அனைத்திலும் அமர்த்திட வேண்டும்
அன்பினை அகத்தில் நிறைத்திட வேண்டும்
அன்புதான் வாழ்வின் ஆணி வேராகும்
அதுவே முப்பால் உணர்வே ஆகும்

இன்சொல் என்பது இன்பமே ஆகும்
எவர்க்கும் ஏற்றதும் இன்சொலே ஆகும்
இன்சொல் மொழிந்தால் இடரொடிந் தோடும்
என்றே மொழிந்தது முப்பால் ஆகுமே

ஒழுக்கம் என்பது உயிரினும் உயர்ந்தது
ஒழுக்கம் தவறின் உயிரும் பிரியும்
உணரும் யாவரும் உயர்வார் வாழ்வில்
உரைத்திடும் முப்பால் உயர்ந்த நன்னூலே

செல்விருந்து வருவிருந்து நல்விருந்து யாவும்
இல்லறத்தின் நல்லறமாய் வாய்த்த வரமாகும்
உள்விரும்பி உபசரித்து உலகிலே வாழ்ந்தால்
உயர்விருந்து கிடைக்குமென உரைத்ததுவே முப்பால்

அழுக்காறை அகற்று அவாவினை அடக்கு
புறங்கூறும் புத்தியை புரட்டியே போடு
எழுந்திடும் சினத்தை கொழுந்திலே கிள்ளு
வளம்பெறும் வாழ்வு வாய்த்திடும் என்றது

அவிசொரிந் தாயிரம் வேள்வி செய்தாலும்
உயிரைக் கொல்லாமை உயர்வென் றுரைத்தது
கொல்லானை புலால் மறுத்தானை உயிரெலாம்
தொழுமெனச் சொன்னது முப்பால் ஒன்றே

மாசில்லா மனத்துடன் வாழ்வது வாழ்வே
ஆசையை அடக்குதல் அனைவர்க்கும் கடனே
பொருளது வாழ்வில் முக்கியம் ஆகும்
அருளே என்றும் அழிவிலாப் பொருளே

அறமொடு ஆட்சி அமைந்திடல் வேண்டும்
அமைச்சும் அறநிறை பேணிட வேண்டும்
கறையுடை தலைமை நிறையுடை ஆகா
என்றே வுரைத்தது முப்பால் அன்றே

இல்லறம் என்பதே நல்லறம் ஆகும்
இன்பமும் ஊடலும் இணைந்தே இருக்கும்
முப்பால் காதலை உணர்த்திடும் பாங்கு
கற்பார் மனத்தைக் கவர்ந்தே இழுக்கும்

செந்தமிழ் இன்பம் செறிந்துமே நிறைய
வந்திடும் உவமைகள் வகையில வகையில
முப்பால் புலவர் வாழ்வினை நுகர்ந்த
அத்தனை அனுபவம் அகநிறை அனுபவம்

எத்தனை சிந்தனை எத்தனை தத்துவம்
வித்துவம் நிறைந்த வியத்தகு முப்பால்
உத்தம வள்ளுவர் உவந்தெமக் களித்தார்
நித்தமும் படிப்போம் நெஞ்சினில் பதிப்போம்

முப்பால் எங்கள் முதுசொம் ஆகும்
அப்பால் செல்லா அதுவே அரனே
தாய்ப்பால் போல முப்பால் எமக்கு
ஊக்கம் அளிக்கும் உயிர்ப்பும் அளிக்கும்

செந்தமிழ் வள்ளுவர் செப்பிய முப்பால்
நந்தமிழ் மக்களின் பொக்கிஷம் ஆகும்
அந்தமில் முப்பொருள் அடங்கிய முப்பால்
எந்தையாம் வள்ளுவர் ஈந்தநற் கொடையே

மலர்ந்தது தமிழில் பெயர்ந்தது பன்மொழியில்
பார்த்தவர் வியந்தார் படித்தவர் விழித்தார்
முப்பால் நூலினை முழுமையாய் படிப்போம்
இப்புவி வாழ்வு இன்பமாய் அமையும் !

No comments: