கவி விதை - 18 - --விழி மைந்தன்--

.
அகதி



கடல் அலைகள் தாலாட்ட, களிப்பு மிகு கனவுகளோடு  தூங்கி வழிந்து கொண்டிருந்த கவின்மிகு குக்கிராமம் கண்ணன் துறை. வலையில் பட்ட மீன்களைத் தவிர வேறு யாரும் அங்கு வேதனைப் பட்டதில்லை.   குலை தள்ளிய வாழைகளை விட வேறெவரும் அங்கு  குனிந்ததில்லை. அலை கடலன்றி வேறு யாரும் அங்கே  அமைதி இழந்தது இல்லை.  ஆர்ப்பரிப்பைக் கடலுக்கு விட்டு விட்டு, அமைதியுடன் வாழ்ந்து வந்தனர் அவ்வூர் மக்கள்.

இந்தக்  குக்கிராமத்தில் பிறந்தவன் சேந்தன்.


தூங்கி வழிந்த கிராமத்தை  அடித்து எழுப்ப ஒரு விடி காலையில் விரைந்து வந்தது யுத்தம்.

அன்றைக்கு 'எழும்பியவர்கள்' இன்னும் போய்  இருக்கவில்லை. இருக்க முடியவில்லை!

சேந்தனின் குடும்பம், பக்கத்துக்கிராமமாகிய ஆளையடியில் உறவினர் வீட்டில் வந்து தங்கிற்று. அங்கும் யுத்தம் அவர்களைத் துரத்தி வந்த போது, சற்றுத் தூரத்தில் இருந்த செல்வபுரத்திற்கு வந்து சேர்ந்தது.

சேந்தனின் பெற்றோர் கொஞ்சம்  படித்தவர்கள். அவனது தந்தை, ஒரு சிறு பாடசாலையில் ஆசிரியராய் இருந்தார்.


அகதி முகாமில் போய்  இருப்பதற்கு அவரது 'மத்திய  வர்க்கக்' கௌரவம் 
விடவில்லை.

வாடகைக்கு வீடு தேடினார்.

செல்வபுரத்தில் பலருக்கு அவரது வாடகைப் பணம் தேவையாயிருக்கவில்லை.  அந்த ஊரின் மைந்தர்கள் பலர் 'வெளியில்' இருந்த காரணத்தினால்,  உள்ளே வரப்  பார்க்கும் 'அகதி'களை  உபத்திரவமாகவே அவர்கள் நினைத்தனர். தனி வீடு தேடிக்  களைத்துப் போன சேந்தனின் தந்தை, ஒற்றை அறைகளையும், கார் நிறுத்தும்  கராஜ்களையும், மாவிடிக்கும் கொட்டில் களையும் கூட வாடகைக்குக்  கேட்கும் நிலைக்கு வந்தார். அப்படியும் அதிஷ்டம் அடிக்கவில்லை.

'அகதிகளை இருக்க விட்டால் அவ்வளவுதான்! பிறகு எழும்பாதுகள்' என்று, படி இறங்கிச் செல்லுகையில் அவர் காது படவே பலர் பகன்றார்கள். 'எங்களுக்கும் நாளை இந்த நிலை வரலாம்' என்று எண்ணாத பலர், இரண்டு மைலுக்கு அப்பால் இருந்த மக்களை இரண்டாம் தரப்பிரசைகளாக எடுத்தார்கள்.

இறுதியில் ஒரு இரண்டறை  வீடு வாடகைக்குக் கிடைத்தது. 

இவர்கள் வீட்டுக்கு எதிரில் இருந்தது, செல்வபுரத்திலேயே மிகப் பெரிய செல்வந்தர் வீடு.அவர்கள் வீட்டிலும், சேந்தன் வயதொத்த ஒரு பையன் - வாசன்.

சேந்தன் வீட்டாரை, வாசன் வீட்டார் 'முன் வீட்டு அகதிகள்' என்றே  அழைப்பார்கள். வாடகைக் குடியிருப்பாளர் என்ற சொல் அவர்களுக்கு வாய்  கொள்ளவில்லை. இடம் பெயர்ந்தவர்கள் என்று சொல்ல நாக்கு இடறியது.

வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே  அன்றோ? வாசன் வீட்டைப்  பார்த்து, அவ்வூரார் பலரும் சேந்தன் வீட்டை 'அகதிகள் வீடு' என்று அழைக்கப் பழகினர்.

'அகதிகள் வீட்டில் ஏதோ விசேஷம் போல' என....

'அகதிகள் வீட்டில் என்ன சிலமனைக் காணேல்லை' என...

'அகதிகள் வீட்டு வாசலிலை ஏதோ அச்சிடண்டாம்' என ...

வருடங்கள் உருண்டன.


சேந்தன் நன்றாகப் படித்தான்.  கல்வியைத் தவிர வேறு செல்வமோ நம்பிக்கையோ அவர்களிடம் எஞ்சியிருக்கவில்லை. எனவே முயன்று படித்தான். இரண்டு தங்கை மார்களுக்கு முன் பிறந்தோன் என்ற பொறுப்பும் அவனை உந்தியது.

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பயிலத்  தெரிவானான். கொழும்பு போய்  விட்டான்.

வாசனுக்குப்  படிப்பு அவசியமாய் இருக்கவில்லை. வரவும் இல்லை. வணிகப் பிரிவில் மூன்று தரம் 'முயன்ற' பிறகு புத்தம்புது  மோட்டார் சயிக்கிளில் ஊருலா வரலானான். கணனி கற்பதாகச் சொல்லிக் கொண்டு கன்னிகளுக்குக் கண்ணி  வைக்க அலைந்தான்.

சேந்தன் பல்கலைக் கழகத்தில் முதல்  வகுப்பில் தேறினான். மேற்கு நாடொன்றின் பெரிய  கம்பெனி ஒன்றில்  வேலை கிடைத்தது.  ஒரு வருடம் கொழும்பில் வேலை செய்த பிறகு,  அவன் திறமை கண்டு கம்பெனியின்  தலைமையிடத்திற்கு  அனுப்பினார்கள். வெளி நாடு  சென்றான்.

அதே நேரம், வாசனின் தகப்பனாரும் வெட்டியாகத் திரிந்த மகனை 'வெளியிலே' அனுப்ப ஓடித்  திரிந்தார்.

இருபது  லட்சம் ஒரு  முகவனிடம் கொடுத்து ஏமாந்த பிறகு, இன்னொருவன் மூலம் வெளியிலே சென்று 'இடையிலே பிடி பட்டு', காசைக்  கொடுத்துக் கசை  அடி  வாங்கித் திரும்பிய பிறகு, சற்றும் முயற்சியைக் கை  விடாத விக்கிரமாதித்தன் போல மூன்றாம் முறை விமானம் ஏறினான் வாசன்.

சேந்தன் இருந்த நாட்டில் வந்து சேர்ந்தான்.   கடவுச் சீட்டைக் கிழித்து விட்டு, 'கையைத்' தூக்கினான்.

தன்  சித்தப்பாவுக்குப் பெரியப்பா மகனான  ஒரு வழக்கறிஞரைப் பிடித்தான். 'இன்டெர்வியூ' வில் அழுவதற்காக  ஏற்கனவே  'அழுது வென்றவர்களிடம்' ஸ்பெஷல் டியூஷன்  எடுத்தான். கசையடி பட்ட தழும்புகளை தன்  தாய் நாட்டில் நடந்த கொடுமையெனக் காட்டினான். 'அகதி அந்தஸ்து' அடைந்து விட்டான்!

சேந்தனின் சம்பளம் ஏற  ஏற  அவனது வரி விதிப்பு விகிதமும் ஏறிக்  கொண்டே வந்தது.  வாசனில் 'இரக்கம்' கொண்ட அரசாங்கம் அவனுக்கு மாதாந்த வாழ்வுதவி, இலவசத் தங்குமிடம்  அளித்தது!

வாழ்வுதவி பெற்றுக் கொண்டே மாமியின் புருஷனின் (முந்திய )  பெண்சாதியின் தம்பியின் கடையில் வேலைக்குச் சேர்ந்தான்  வாசன்.  கையிலே காசென்பதால் வருமான வரி பற்றிக் கவலையே படவில்லை அவன். 


சேந்தன்  தந்தை காட்டிய பெண்ணை மணந்தான். விசா கட்டணமென்றும் மெடிக்கல் என்றும் பணம் கொட்டிக் கொடுத்து மனைவியைத் தன்  நாட்டுக்கு அழைத்தான்.

வாசன் 'ஊர்ப் பெட்டைகளோடு' சில வருஷம் 'சாட்' இலும்  ஸ்கைப்பிலும்  கொஞ்சிய பிறகு 'இஞ்சை ஒண்டைக் கட்டுவதே நல்லது' என்று ஞானோதயம்  அடைந்தான். தனக்குக்  கிடைத்த மனைவியை 'இஞ்சை பிறந்த பிள்ளை' என்று சொல்லித் திரிவதில்  பெருமை அடைந்தாலும் பிள்ளையின் தாய் தந்தையர் தன்னைப் போலவே 'கையைத்  தூக்கியவர்கள்' என்பதைச் சொல்ல மறந்தான்.

கடையிலே நின்றவன் கடைக்காரனானான்.  வரி ஏய்ப்புகள் செய்தான். வியாபாரங்களை விருத்தி செய்தான். 

சேந்தனின் தங்கைகளுக்குத் திருமணப் பருவம் வந்தது. தாங்கள்  வந்திருந்து வாழ்ந்த செல்வ புரத்தில் (கண்ணன்துறையைக் கண்ணாலும் காண்பது கனவாகி விட்டதே!), சிறியதொரு காணியை விலைக்கு வாங்கித், தங்கைகளுக்காக வீடொன்று கட்டினான் சேந்தன்.  


அதே வேளையில், வாசன் தனக்காக இன்னொரு மாளிகை கட்டலானான் -  தந்தையின் வீட்டுக்குப் பக்கத்தே.

இரண்டு மனைகளுக்கும்  அடுத்தடுத்த நாட்களில் புதுமனைப் புகுவிழா வந்தது. சேந்தனும் வாசனும் செல்வபுரம் சென்றார்கள்.


தன்  புதுமனை புகுந்த அடுத்த நாள் மாலையில், சற்று ஓய்வாக இருந்த நேரத்தே யன்னலைத் திறந்து பார்க்கிறான்  சேந்தன்.

வாசனின் புது வீட்டுக் கொல்லையில்  வாசனும் இன்னும் சிலரும் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் -  கையில் 'கிண்ணங்களோடு!'

வாசனின் சித்தப்பா கேட்கிறார்.

'ஏன்  தம்பி வாசன், உந்த அகதிகள்  வீட்டுப் பெடியனும் நீ இருக்கிற நாட்டிலை தானே இருக்குது! சின்ன வீடாய்க் கிடக்கு அவையள்  கட்டினது. ஏன்  அவன் உழைக்கிறேல்லையோ?"

'ஓ, அவர் அவ்வளவு முயற்சி இல்லை. சின்னொரு  வேலையைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு இருக்கிறார். நான் கனக்க  'பிசினஸ்' சுகள்  செய்யிறன். அது தான் வீட்டுக்குள்ளை கன  காசைப்   போட்டனான். என்னெண்டாலும் அகதிகள் எங்களை விட எழுப்பமா வர விடவும் ஏலாது தானே!" வாசனின் மறுமொழி கேட்கிறது.

சேந்தன் சிரித்துக் கொண்டே  யன்னலை மூடுகிறான்.

1 comment:

Anonymous said...

very confronting - but food for thought. Tamil community must stop their blind support for refugees. Of course many people are genuine refugees, but many are also undeserving economic migrants. They take the chances of others. Also, even genuine refugees display anti-social behaviour often. These issues must be discussed openly.