இது மட்டுமின்றி இதுவரை சிறிய பட்ஜெட் படங்களாக தந்து வந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் முதன் முதலாக உலக நாயகன் என்ற சிங்கத்துடன் கை கோர்த்து பலமான கர்ஜிக்க முடிவு செய்து உருவாகியது தான் இந்த உத்தம வில்லன்.
களம்
கமல்ஹாசன் இந்தியாவே பிரம்மித்து பார்க்கும் சூப்பர் ஸ்டார், இவரின் மனைவி ஊர்வசி, இவருக்கு ஒரு ஆண் பிள்ளை, கமலின் மாமனார் விஸ்வநாத் என ஒரு குடும்பமாக வாழ, கமலுக்கு தன் குடும்ப மருத்துவரான ஆண்ட்ரியாவுடன் தொடர்பு இருந்து வருகிறது.
இதனால் குடும்பத்தில் அவ்வபோது சலசலப்பு எழ, ஜெயராம் ஒரு கட்டத்தில் கமலை சந்தித்து உங்களுக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறார் என குண்டை போடுகிறார். இதைகேட்ட பிறகு எப்படி தூக்கம் வரும், அவர் யார் என்று தேட பார்வதி மேனன் அறிமுகமாகிறார்.
கமலுக்கு திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது, அந்த பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கமலின் மாமனார் அவர் கர்ப்பத்தை கலைக்க சொல்கிறார், ஆனால், அவர் அதை செய்யாமல் குழந்தை பெற்று கொள்கிறார்.
பார்வதி மேனன் கமலை ஒரு வில்லனாகவே பார்க்கிறார், இதற்கிடையில் கமலுக்கு உடல் நிலை சரியில்லாமல் இன்னும் சில நாட்களில் இறக்கப்போவதாக மருத்துவர்கள் கூற, அதற்குள் தன் ரசிகர்களுக்கு நல்ல ஒரு நகைச்சுவை படத்தை கொடுக்க வேண்டும் என தன் உண்மையான ஆசான் கே.பியிடம் கேட்கிறார். ஆனால், கே.பிக்கும் கமலுக்கு சற்று உரசல் முன்பே இருக்க, இதற்கு அவர் சம்மதித்தாரா? கமல் குணமானாரா? தன் பெண் பிள்ளையிடம் நற்பெயர் வாங்கினாரா? என்பதை மிகவும் உணர்ச்சி முடிச்சுகளாக கூறியுள்ளனர்.
படம் பற்றிய அலசல்
கமல்ஹாசன் இந்த ஒரு வார்த்தை போதும், இப்படி ஒரு மகா கலைஞர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது நம் பாக்கியம், இந்த கலைஞனை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் அவர்களை இந்த தமிழ் சினிமாவே பாதம் தொட்டு வணங்க வேண்டும். கே.பி இயக்கத்தில் மட்டும் இல்லை, நடிப்பிலும் சிக்ஸர் அடிக்க, ஆனால், அவர் வரும் காட்சிகளில் ஏதோ கண்ணீர் நம்மை அறியாமல் வெளியே வருகிறது.
கமலின் மேனேஜராக வரும் M S பாஸ்கரின் திறமைக்கு இக்கதாப்பாத்திரம் தான் சரியான தீனி. நகைச்சுவை வசனங்கள் பேசும் போதும் சரி உணர்ச்சிப்பூர்வமான வசனங்கள் பேசும் போதும் சரி, இவரின் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும்
கமலின் மகனாக வரும் சிறுவன் தன் பங்கிற்க்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கே. பாலசந்தர் கமலை இயக்கும் நாடககாட்சிகள் அனைத்தும் அரங்கத்தை சிரிப்பொலியில் மூழ்கடிக்கிறது, அந்நாடகத்தில் முத்தரசனாக வரும் நாசர் நடிப்பு பேஷ் பேஷ்
ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், ஜெயராம், விஸ்வநாத் என அனைவரும் கமலுடன் வாழ்ந்திருக்கிறார். ஜிப்ரான் இசைப்புயலும், இசைஞானியும் சேர்ந்து செய்த கலவை போல் மனதை வருடி செல்கிறார். படத்தின் ஒளிப்பதிவு இரண்டு விதமான கலர் டோன்களில் நம்மை கவர்ந்து இழுக்கிறது.
க்ளாப்ஸ்
கமல், கமல், கமல் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம், அந்த அளவிற்கு தன் அனுபவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ரமேஷ் அரவிந்த் இயக்கிய முதல் தமிழ் படம் இது என்று துளியும் எங்கும் தெரியவில்லை.
கே.பியின் யதார்த்த நடிப்பை இதில் பார்த்தால், இவரை நாம் ஒரு நடிகனாக ஏன் இத்தனை நாட்கள் பார்க்கவில்லை என்ற ஏக்கத்தை தரும். ஜிப்ரான் அவர் எடுத்து வைத்த முதல் அடியிலேயே, 100 அடி பாய்ந்து விட்டார். வசனம் கமலுக்கே உண்டான பாணியில் சிந்திக்க வைத்து சிரிக்க வைக்கின்றது. படத்தில் குறிப்பாக கமல் மற்றும் பார்வதி மேனன் பேசும் காட்சி மனதை கொள்ளை கொள்கிறது.
படத்திற்கேற்ப க்ளைமேக்ஸ் அமைக்கப்பட்டதற்க்கு பாராட்டுக்கள்.
பல்ப்ஸ்
கமல் படத்தில் என்ன குறை சொல்ல வேண்டியிருக்கிறது, கொஞ்சம் பல்ப்ஸ் இருந்தாலும் இப்படி ஒரு மனித உணர்வுகளை தமிழ் சினிமா பார்த்து நீண்ட நாளாகி விட்டது, அதன் காரணமாகவே ஏதும் கூற மனம் வரவில்லை.
மொத்தத்தில் கமல் என்றுமே சினிமா ரசிகனுக்கு உத்தமர் தான் என்று மீண்டும் இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.