02 Jan, 2025 | 04:44 PM
ராஜ்குமார் ராஜீவ்காந்
2006ம் வருடம் மாலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை திருகோணமலை ஒரு திகிலான அனுபவத்தை சந்தித்தது.
அதே இடங்களில் எம் நண்பர்களில் பலர் இருந்தார்கள் எத்தனையோ சாட்சிகள் இருந்தது.
கடற்கரையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த அப்பாவி 5 மாணவர்களை, எந்த அர்த்தமும் இல்லாமல் வெறித்தனமாக கொன்றது இலங்கை இராணுவம்.
அதி காலையில் வைத்தியசாலையில் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட அந்த உடல்களைப் பார்த்தது நான் இறக்கும் வரை மறக்காது.
அன்று முழு நகரமும் பேரதிர்ச்சியில் மூழ்கிப்போயிருந்தது, அதன் பின் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் இறுதிச் சடங்கு இடம்பெற்றது.
இதன் பின்னர் நீதி கேட்ட பெற்றோர்கள் மிரட்டப்பட்டார்கள், இந்த கொலை நிகழ்ந்து 31வது நாள் நிகழ்வில் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெளத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பான பல தகவல்களை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த எம் அன்பின் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை முன் எடுத்துச் சென்ற பெற்றோரில் ஒருவரான வைத்தியர் மனோகரன் அவர்கள் மிக மோசமாக மிரட்டப்பட்டார்.
சென்ற வருடம் இந்த வழக்கின் நிலையும் அடுத்த கட்டமும் தொடர்பாக மீண்டும் சர்வதேச மன்னிப்பு சபையிடம் பேசியிருந்தேன்.
மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச , ஹொட்டகதெனிய என்று இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பட்டியல் நீழ்கிறது.
கடற்படையினர் சிலர் கைதாகி போதிய சாட்சியம் இல்லை என்று விடுதலையாகியிருந்தனர்.
இலங்கை அரசின் கொலைகள் ஆயிரக்கணக்காக இருந்தாலும் இந்த கொடூரக் கொலை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், யுத்தம் கூட இடம்பெறாத பகுதியில் இடம்பெற்றது.
இதற்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. யாரை நாம் நோவது.
;