செ.பாஸ்கரன்
முற்றத்து மணற்பரப்பில் விரித்தபாயும்
வேப்பமர நிழலில் கயிற்றுக் கட்டிலுமாய்
வீற்றிருந்த என் வீடும் வளவும்
தூசி படிந்து தூர்ந்து கிடக்கிறது
வளையோசையும் வாய்ப்பாட்டு ராகமுமாய்
வலம் வந்த என் அம்மை
கழுவித்துடைத்து அழகுக்கோலமிட்ட அரண்மனை
தூண்களும் கல்லுமாய் அடையாளம் தருகிறது
பிரசவத்துக்காய் காத்துக் கிடந்த
முப்பது வருடங்களின் முற்றுப்பெறாத கருக்கலைப்பு
மக்கள் மௌனித்திருந்த நகரத் தெருக்களும்;
மரணித்திருந்த மானிட நேயமும்
ஊட்டச்சத்தின்றி உலாவிவரும் பிள்ளைபோல்
எழுந்து நிற்க எத்தணிப்புச் செய்கிறது
சாவிலிருந்து தப்பியவர்களில் சவாரிவிட காத்திருக்கிறது
சாதிப்பேயும் பிரதேச வேறுபாடும்
காதல் வரி பாடி கழித்திருந்த காலம்
மீண்டும் துளிர்விட்டு பசுமைதருமென்று
காத்திருக்கும் பெரிசுகளும்
அம்மன் கோயில் தேராக அசைந்துவரும் காதலியின்
விழிபார்த்து காத்திருக்கும் இளசுகளும்
கேலிச் சிரிப்பும் கெக்களமும் கொட்டி
சேர்ந்து மகிழ்திருக்க
நாம் நடந்த நகரம் மீண்டும்
திரும்பும் என காத்திருப்போம்
1 comment:
நல்ல கவிதை .
மக்கள் மௌனித்திருந்த நகரத் தெருக்களும்
மரணித்திருந்த மானிட நேயமும்
ஊட்டச்சத்தின்றி உலாவிவரும் பிள்ளைபோல்
எழுந்து நிற்க எத்தணிப்புச் செய்கிறது
அருமையான வரிகள்
விமலன் அரவிந்தன்
Post a Comment