பன் நெடுங்காலமாக இலங்கையில் வாழ்ந்து வரும் எமது
மக்கள்---மூதாதையர்கள்---ஆவணங்களைக் பாதுகாத்து வைப்பதிலும், பதிவு செய்வதிலும்
தவறிவிட்டார்கள். யாழ்.நூலகம்
எரிந்து
போனதும், போர் காரணமாக பல ஆவணங்கள் அழிந்து போனமையும் துர்ப்பாக்கியமாகும்.
அவுஸ்திரேலியாக்கண்டம் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது.
ஆனால் அதற்கு முன்னரே அங்கு ஆதிவாசிகள் வசித்து வருகின்றார்கள். அவர்களுக்கு பல
இன்னல்கள் நேர்ந்த போதிலும், ஓரளவிற்கு அவர்கள் தமது ஆவணங்களை பாதுகாத்து
வைத்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில்கூட அவர்களிடமிருந்து
பறிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் சிலவற்றை அவுஸ்திரேலிய அரசு மேற்கு
அவுஸ்திரேலியாவில் மீளக் குடுத்திருக்கின்றது. அவுஸ்திரேலிய முன்னைநாள் பிரதமர்
ஹெவின் ரட் 2008 ஆம் ஆண்டு, ஆதிக்குடிகளுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை ஒரு மனித
உரிமை மீறல் என அறிவித்து அவர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
இந்தக் கட்டுரை மெல்பேர்ணில், டண்டினோங் மலைச்சாரலில்
இருக்கும் ஆதிவாசிகள் பற்றிய சிற்பங்கள் ஓவியங்களைப் பற்றிச் சொல்கின்றது. ஆனால்
இந்தப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆதிவாசி அல்ல. வில்லியம் பில் றிக்கெற்ஸ் (William
Bill Ricketts) எனப்படும் வெள்ளையினத்தவர் ஆவார்.
வில்லியம் பில் றிக்கெற்ஸ்…
மெல்பேர்ணில் சனத்தொகைப் பெருக்கம் மிகவும் குறைவாக
இருந்த காலப்பகுதியில், தங்கவேட்டை காரணமாக பலர் புலம்பெயர்ந்து வரத்
தொடங்கியிருந்தார்கள்.
இவரது தாத்தா வில்லியம் றிக்கெற்ஸ் 1857 ஆம் ஆண்டளவில்
தனது மனைவி மேரி ஆன் சகிதம் பிரித்தானியாவில் இருந்து மூன்று நான்கு மாத கடல்
பிரயாணத்தின் பின்னர் மெல்பேர்ண் வந்து சேர்ந்தார். இவர்களுக்கு 12 பிள்ளைகள்
பிறந்தார்கள். அவர்களில் அல்பிரட் என்பவர் சுசான் என்னும் பெண்மணியைத் திருமணம்
செய்தார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்தார்கள். கடைசிப் பிள்ளையாக பில் 1898 ஆம்
ஆண்டு பிறந்தார். இவர்கள் றிச்மண்ட்
என்னும் பகுதியில் குடியிருந்தார்கள்.
பில் தனது ஆரம்பக்கல்வியில் பெரிதும் நாட்டம்
கொள்ளவில்லை. பாடசாலையை விடுவது என்று தீர்மானித்ததும் தமது உறவினரின் நகை
செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பயிலுனராகச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது பதின்னான்கு. இசையில்
ஆர்வம் கொண்ட இவர் வயலின் வாசிப்பதில் கெட்டிக்காரர்.
வில்லியம் பில் றிக்கெற்ஸ், 1935 ஆம் ஆண்டளவில் மவுன்ற்
டண்டினோங் பகுதியில் நாலரை ஏக்கர்
நிலப்பரப்பை வாங்கினார். அது முதற்கொண்டு அங்கேயே வசிக்கலானார். இயற்கை எழில்
கொஞ்சும் சரிவுப்பாங்கான அந்தப்பகுதியின் பாதை மருங்கிலும் குகைகளிலும்
களிமண்ணினால் ஆன உருவங்களைச் செய்து வைத்தார்.
ஆதிவாசிகளின் நம்பிக்கை வாழ்க்கை முறைகளினால்
ஈர்க்கப்பட்ட மிகச்சில வெள்ளை இனத்தவர்களில் இவரும் ஒருவர். விலங்கு தாவரம் மனிதன்
இயற்கை – இந்தப்பின்னணியில் இவரது படைப்புகளின் தொனி அமைந்திருக்கும். இவரது
கற்பனையில் உருவாகும் படைப்புகளிற்கு பூர்வீகக்குடிகளின் சின்னங்களை குறியீடாகப்
பாவித்துள்ளார். இவரது காப்பகத்தின் முக்கியமான படைப்புகள் ஆதிவாசிகளின்
உருவங்களாகும். அவை ஆதிவாசிகளினதும், அவர்களுக்கும் பூமிக்குமிடையேயான பரிசுத்தமான
தொடர்புகள் பற்றியனவுமாகும்.