எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்?

எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்?

அறுபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் பதினைந்து நள்ளிரவில் நாடெங்கிலும் மக்கள் சுதந்திரம் பெற்று விட்டதாக ஆனந்தமாய் குதூகலித்திருந்த போது அந்த மகிழ்ச்சியில் முழுமையாக பங்கு பெற இயலாதவராய் சர்தார் வல்லபாய் படேல் சொன்னதைச் சற்று நினைவு கூர்ந்திடுவோம்:
"நாம் பெற்றிருப்பது 'சுதந்திரம்' அல்ல. அந்நியரிடமிருந்து 'விடுதலை' மட்டுமே!".



அவர் பார்வையில் எதுதான் சுதந்திரம்? அவரே சொல்கிறார்:

'சாதி இன வேறுபாடு மறைந்து, தீண்டாமை ஒழிந்து, பட்டினியால் வாடுவோர் வளம் பெற்று, மக்கள் ஒன்றுபட்டு வாழுகையிலும்; சுருங்கச் சொல்லின், புதியதொரு வாழ்வை உருவாக்க மக்களின் மனங்களிலும் பார்வையிலும் மாபெரும் மாற்றம் நிகழுகையிலும்தான் சுதந்திரம் வரும்!'



சத்தியமான வார்த்தைகள். அன்றைய நிலைமையோடு ஒப்பிட்டால் அத்தகு மாற்றங்கள் பலவும் நிகழ்ந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பிட்ட இனத்தவர் கோவில்களுக்குள் செல்ல இயலாமல் இருந்த காலமெல்லாம் பல தலைவர்களின் முயற்சியால் மாறி விட்டன. மாறி வரும் தலைமுறையில் நடக்கின்ற கலப்புத் திருமணங்களால் சாதி, மதங்கள் இன்று பின் தள்ளப் படுகின்றன. பயணம் செய்கின்ற பொது வாகனங்கள், பொது இடங்கள், கல்விக்கூடங்கள், அலுவலகங்களில் எந்த வேறுபாடுமின்றி எல்லோரும் சமமாக நடத்தப் படுகின்றனர்.



அன்று எதிர்க்கப் பட்ட எத்தனையோ விஷயங்கள் இன்று ஏற்புடையதாகி விட்டன. உதாரணத்துக்கு 1928-ஆம் ஆண்டு சென்னை சட்டசபையில் டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் பால்ய விவாகத்தை எதிர்த்து பெண்களின் திருமண வயது பதினான்காகவேனும் அமையட்டுமெனக் கோரி ஒரு மசோதாவைக் கொண்டு வர முயற்சித்த போது, படித்தவர்களும் பெரிய பதவிகளில் இருந்தவர்களும் மதத்தின் பெயரால் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் வாசித்தறிந்தேன். எதிர்ப்புகளால் தள்ளிப்போன் மசோதா மறுஆண்டு நிறைவேறியதாம்.



அதுபோல இன்றைய காலக் கட்டத்தில் எதிர்க்கப் படும் நல்ல விஷயங்கள் நாளை ஒருநாள் புரிதலுடன் ஏற்கப்பட்டே தீரும். இன்னமும் ஒருசில பின்தங்கிய கிராமங்களில் இருந்து வரும் பால்ய விவாக நடைமுறையும், தீண்டாமையும் கூட காலப் போக்கில் மாறுமென நம்புவோம். பெண்களுக்கான சுதந்திரம் பெருமளவில் வந்தடைந்திருப்பதும் கண்கூடு. பெண்களுக்குப் படிப்பே தேவையில்லை என்றிருந்த காலமெல்லாம் காணாது போய், இன்று அவர்கள் மின்னாத துறையே இல்லை என்றாகி விட்டது.



அறுபதுகளிலே நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது அந்நியரிடம் தானியத்தைத் கையேந்தித் தானமாகப் பெற்றோம். ஆனால் அயராத முயற்சியுடன் அதே கைகளால் பசுமைப் புரட்சி செய்து தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். ஏழை மக்களை மனதில் கொண்டு அரசு ரேஷன் மூலமாக குறைந்த விலையில் உணவுப் பொருட்களைக் கொடுத்து அவர்களது தேவைகளை கவனிக்கவும் செய்கிறது. எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் சொல்லப் பட்டாலும், தரமான மருத்துவ சேவை இலவசமாக எளிய மக்களுக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.



இத்தகைய பல மாற்றங்களால் வியக்கத்தகு பொருளாதார வளர்ச்சியும் சாத்தியப்பட்டிருக்க, இன்னொரு பக்கம் அவ்வப்போது வெடிக்கின்ற கலவரங்களும் மோதல்களும் ‘தீர்வே பிறக்காதா?’ எனும் ஆதங்கத்தையும், கூடவே ‘சட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது?’ எனும் கேள்வியினையும் எழுப்பியபடி இருக்கின்றன. நூற்றுப் பத்து கோடி மக்களுக்குமான பாதுகாப்பை இன்னபிற வளர்ந்த நாடுகளை விடவும் நம் அரசு இயன்றவரை சிற்ப்பாகச் செய்ய முயற்சித்தபடியேதான் இருக்கிறது. சமூக விரோத செயல்கள் குறைவதும் மறைவதும், ஊழல் அற்ற சமுதாயம் மலருவதும், சரியான பாதையில் முன்னேற்றம் தொடர்வதும் நாடு உண்மையான சுதந்திரம் பெற்றால் மட்டுமே நடக்கும்.



எப்போது கிடைக்கும் அத்தகு சுதந்திரம்? எல்லோரும் அறிந்த பாடலே எனினும் இவ்விடத்திற்குப் பொருத்தமாய் இருப்பதால் இரவீந்திரநாத் தாகூர் படைத்த ‘கீதாஞ்சலி’யின் முப்பத்தைந்தாவது பாடலை இங்கே தமிழ் படுத்தித் தந்திருக்கிறேன்:



"எப்போது மனம் பயமின்றி இருக்கிறதோ

எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ;

எங்கே அறிவு தடையின்றி வளர்கிறதோ;

எங்கே உலகம் குறுகிய மனப்பான்மையெனும்

சுவர்களால் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ;



எங்கே வார்த்தைகள் உண்மையின்

ஆழத்திலிருந்து வருகிறதோ;

எங்கே அயராத முயற்சி நேர்த்தியை

நோக்கித் தன் கரங்களை நீட்டுகிறதோ;



எங்கே நோக்கமானது

தொடர்ந்து விரிந்து கொண்டே செல்கின்ற

எண்ணத்தாலும் செயலாலும்

வழிநடத்தப் படுகிறதோ-

அந்த சுதந்திரமான சுவர்க்கபூமியில்,

என் நாடு விழித்தெழட்டும்"



இப்படியாக இறைவனை இறைஞ்சுகிறார் தாகூர். இதை மனதில் உள்வாங்கி ஒவ்வொரு குடிமகனும் ‘தான், தன் வாழ்க்கை, தன் குடும்பம், தன் இனம், தன் மொழி, தன் மதம்’ என்கிற வட்டங்களை விட்டு வெளிவந்து ‘நாம், நம் நாடு, நாட்டின் நலம்’ என்பதில் அக்கறை காட்டினால் சுதந்திரத்துக்கான உண்மையான அர்த்தம் கிடைக்கும்.



வாழ்க்கையைப் போலவே சுதந்திரம் என்பதும் ஒரு தொடர் பயணம். கடக்க வேண்டிய மைல்கற்கள் எவ்வளவோ இருக்கின்றனதான். ஆயினும் இலக்கை அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி என்றால் என்றைக்கும் வராது எதிலும் திருப்தி. கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக! பெற்ற விடுதலையை அர்த்தமுள்ள சுதந்திரம் ஆக்கி, அதைப் பேணி வளர்ப்போம்! வாழ்க பாரதம்!

No comments: