ஊன்றுகோல்

.
                                                                                            - கவிஞர் க. கணேசலிங்கம்


இளைமையில் அவளோ டிணைந்தஅந் நாட்களில்

எதனையும் செய்திடும் மனத்துரன் இருந்தது.

'தனிமையில் அவளால் எதுசெய முடியும்?என்

திறன்இலை எனிலவள் செயலெது?' என்றுளம்

எண்ணிய நாட்களோ ஏகின! இன்றோ

எடுத்ததற் கெல்லாம் அவள்துணை வேண்டி

இருந்திடும் நிலையொரு முதுமையாய் எழுந்ததே!

வீட்டிலும் வெளியிலும் தெருவிலும் கடையிலும்

விளங்குமெய்த் துணையென அவளின் றாகினள்!

உலகினில் இனிஅவன் உலவிட அவள்தான்

ஊன்றுகோல்! இதுதான் முதுமையின் நியதியோ?
No comments: