சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வு வசந்த மாலை 2010

.
                                                                            xxxxxxx ஆதித்தன் xxxxxxxxxx
             



சிட்னி தமிழ் மக்களுக்கு அறிவுக்கருவூலமாக விளங்கும் ஒரே நிறுவனமான சிட்னி தமிழ் அறிவகத்தின் தலையாய பணியாக விளங்குவது அதன் நூலகமே.


வாரத்தில் ஐந்து நாட்கள் திறந்திருக்கும் இந்நூலகத்தின் இரவல் வாங்கும் பகுதியில்  ஏழாயிரத்திற்கும்   மேற்பட்ட நூல்கள் கிடைக்கின்றன. சிறுவருக்குரிய நூல்களிலிருந்து நாவல்கள் கவிதைகள் கட்டுரைகள் மற்றும் சமய இலக்கிய வரலாற்று நூல்கள் சஞ்சிகைகள் என பலவகைப்பட்ட நூல்கள் இங்கு கிடைக்கின்றன.
இவ்வறிவகத்தை திறம்பட நடாத்துவதற்குப் போதிய நிதியை அங்கத்துவப் பணத்திலிருந்து பெறமுடியாது என்பதால் வருடந்தோறும் வசந்த மாலை என்னும் நிதிசேகரிப்புக்கான கலை நிகழ்ச்சியை நடாத்தி நுழைவுச் சீட்டுகள் மூலமும் விளம்பரங்கள் மூலமும் கிடைக்கும் நிதியை பயன்படுத்துகிறது அறிவகம்.



இவ்வகையில் 2010ஆம் ஆண்டிற்கான வசந்தமாலை கடந்த சனிக்கிழமை 08.05.2010 மாலை ஆறுமணிக்கு றைட் சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு மண்டபத்திற்குச் சென்ற போது அங்கு வாயிலில் உள்ளே செல்வதற்கு ஐந்தாறு பேர் காத்திருந்தனர். நாம் செல்வதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் அங்கு வந்திருப்பார்கள் போலும். வரிசையில் நின்று எமது முறை வந்தபோது உள்Nள சென்றால் தூக்கிவாரிப் போட்டது போல் இருந்தது. மண்டபத்தில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே இருந்தனர். முதல் நிகழ்ச்சியில் பங்குபற்றவென இருபதுக்கும் மேற்பட்டோர் மேடையில் வரிசையாக அமர்ந்திருந்தனர். மிருதங்க வித்துவானும் வயypd; வித்துவானும் தமது கருவிகளை சரிபார்த்துக்கொண்டிருந்தனர்.




 அன்றைய தினம் சிட்னி தமிழர்கள் பங்குபெறும் வேறு இரு நிகழ்ச்சிகளும் நடைபெற்றதால் விழாவுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்கிற பதட்டம் சில அறிவக நண்பர்களிடம் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. எனினும் தலைவர் குணரஞ்சிதன் பதட்டமின்றி இருந்தார். விற்று முடிந்த நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கையே அவரின் மன உறுதிக்கு காரணம் என அறிய முடிந்தது. ஆறு மணியை நெருங்கும்போது கூட்டம் வர ஆரம்பித்தது.
இன்னமும் மேடையில் இருப்பவர்களின் ஒலிவாங்கி சோதனை முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. முதல் நிகழ்ச்சி ஒர் இசை நிகழ்ச்சி எனப் புரிந்தது. மூன்று நான்கு பேர் இந்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை அவசரத்துடன் அங்குமிங்கும் ஓடித்திரிகின்றனர் என அருகிருந்த ஒரு நண்பரிடம் கேட்டேன். இசை ஆசிரியர் ஒலிவாங்கிப் பரிசோதனையில் மிகவும் கறாரானவர் என அப்போது அவர் சொன்னார். தமிழ் விழாக்களில் ஒலிபெருக்கிச் சேவையை வழங்குவதில் முன்னணி வகிக்கும் பத்மசிறீ (பப்பு) மண்டபத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். மண்டபத்தில் முக்கால்வாசி இடம் நிரம்பி விட்டது. கூட்டம் இன்னமும் வந்துகொண்டிருந்தது. கூட்டம் ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன. நிகழ்ச்சித் தொகுப்பாளினி யதுகிரி லோகிதாசன் வந்துவிட்டார். அறிவகத் தலைவர் அவருடன் விழாவை ஆரம்பிப்பது தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார். ஆறுமணியாகிவிட்டது. யதுகிரியின் அறிவிப்பு வருகிறது. ”விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும்” என்கிறது அது.
சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள் பளீர் சீருடையில் மேடையில் திரைக்கு முன்னே நிற்கின்றனர். தமிழ் அறிவகத்தின் நீண்டகாலத் தொண்டர்களில் ஒருவரும் அதன் முன்னாள் தலைவரும் சிட்னி சைவ மன்றத் தலைவருமாகிய திரு இ. விஜaரத்தpனம் அவர்கள் மங்கள விளக்கை ஏற்றி வைக்க யதுகிரி தனது இனிய குரலில் ”ஏற்றுக தீபம்” என தொடங்கும் ஒரு சிறிய பாடலை அழகாகப் பாடுகிறார். யதுகிரி தொகுப்பாளராகப் பங்குபெறும் நிகழ்வுகளில் மங்கள விளக்கேற்றலின்போது இப்பாடல் பாடப்படுவது இப்போது சிட்னியில் வழமையாகிவிட்டது.                
அதனைத் தொடர்ந்து ஹோம்புஸ் தமிழ்க்கல்வி நிலைய மாணவரின் தமிழ்மொழி வாழ்த்தும் அவுஸ்திரேலிய தேசிய கீதமும் இடம்பெறுகிறது. தோற்றத்திலும் தொனியிலும் கம்பீரம் குறையாது தமிழ்வாழ்த்தும் தேசிய கீதமும் இசைப்பதில் ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலைக்கு நிகர் அதுவே என சொல்லும்படியாக அவர்களே இப்போது அதிக விழாக்களில் பங்குபற்றுகின்றனர். இரண்டு நிமிட நேரம் அக வணக்கம் செய்து விழா தொடங்குகிறது. ஈழத்தில் தமிழருக்கெதிராக நடைபெற்ற போரில் தம்மின்னுயிர் நீர்த்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அது. எல்லோரும் எழுந்து மௌனமாக நிற்கின்றனர். சிலர் தலை குனிந்து அஞ்சலி செலுத்துகின்றனர். ஓரிருவர் அங்கும் இங்கும் நடப்பதும் படம் எடுப்பதுமாக இருந்தது என்னவோ போல் இருந்தது.



தமிழ் மொழி வாழ்த்து தேசிய கீதம் இசைக்கப்படும்போதும் அகவணக்கம் செலுத்தும் போதும் யாரும் வேறு எதுவும் செய்யாது அமைதியாக இருக்கவேண்டும் என்பதே சரி. அவ்வேளையில் மண்டபத்தின் வாயிலில் இருப்போரும் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது. இந்நெறிப்பட்ட செய்கை எமது தமிழ் நிகழ்ச்சிகளில் இனிமேலாவது நடைபெற வேண்டும். அதனை விழா ஏற்பாட்டாளர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.


தொடர்ந்து தமிழ் அறிவகத்தின் துணைத்தலைவர் திரு ந.கருணாகரன் அவர;கள் வரவேற்புரையாற்ற அழைக்கப்பட்டார். அவர் வந்து ஒலிவாங்கி முன் நின்ற விதம் ஒரு பண்பட்ட பேச்சாளர் என்பதைக் காட்டியது. வரவேற்புரையென்பது எமது தமிழ் நிகழ்ச்சிகளில் ஒரு சம்பிரதாய உரையேயாயினும் அதனை சற்றி வித்தியாசமாக செய்தார் கருணாகரன்.
சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சந்திப்பில் திருமதி பாலம் லக்ஸ்மணன் அம்மையாரிடம் தான் கேட்ட இலக்கியச் செய்தியொன்றுடன் தனது உரையைத் தொடங்கிய அவர் தனது அனுபங்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொண்டதோடு இத்தகைய அனுபவங்களைப் பெற அறிவகத்தில் தொண்டராக இணைந்து பணியாற்றுங்கள் என வினயமாக வேண்டி வந்தோரை வரவேற்று அமர்ந்தார். நிகழ்ச்சி நிரலில் உள்ளோரை ஒவ்வொருவராக பெயர் சொல்லி ”வருக வருக என வரவேற்கிறோம்” எனக் கேட்டுப் பழகிப் போன காதுகளுக்கு கருணாகரனின் வரவேற்புரை சற்று வித்தியாசமாக இருந்தது.


இப்போது முதல் நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்த்தால் யதுகிரி அழகான பாடல் ஒன்றைப் பாடத்தொடங்கிவிட்டார். வாத்தியங்கள் ஒத்திசையவில்லையா என ஒருவர் அவசரமாகச் சென்றுகொண்டிருந்த தலைவர் குணரஞ்சிதனிடம் கேட்க ”இல்லையில்லை இன்னும் சிலர் வரவேண்டும். பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வேண்டியவர்கள் அவசியம் முதலில் இருந்தே பார்க்கவேண்டிய நிகழ்ச்சி இது” என்று சொல்லிவிட்டு அப்பால் நகர்கிறார். என்ன இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறார் என அந்த அன்பரை மற்றவர் பார்க்கிறார். குணரஞ்சிதன் சொன்னதில் தவறில்லை எனப் புரிந்தது நிகழ்ச்சி ஆரம்பமானபோது.

 சுருதிலயா இசைப்பள்ளி வழங்கும் மதுரகானம் முதல் நிகழ்ச்சி. அழகிய கோல உடையில் (ஆமாம்! எல்லோரும் நீல வண்ண ஆடை உடுத்தியிருந்தார்கள்) அவர்கள் முதல் பாடல் ஆரம்பித்தபோதே சபை அப்படியே கப்சிப் ஆனது. எல்லோர் கண்களும் மேடையை நோக்கியே குவிந்திருந்தன. இசையாசிரியர் திருமதி மாலதி சிவசீலன் மேடையில் இடப்புறமாக அமர்திருக்கிறார். அவர் அருகில் வயலின் வித்துவான் கோபதிதாஸ். வலது புறத்தில் மிருதங்கவித்துவான் சிவசங்கர். அணிசெய் இசைக்கலைஞர்கள் இருவருமே ஆற்றலும் அனுபவமும் வாய்ந்தவர்கள்.
நடுவே இரண்டு வரிசையில் இசைபயிலும் இளவயது மாணவர்கள். அவர்களில் நடுவில் மூன்று ஆண்கள். அவர்கள் சிறுபான்மையானதினால் நடுவே இருத்தியிருப்பார்கள் போலும்! மதுரகானம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் நிறைவு வரை கேட்போரை இசைவெள்ளத்தில் ஆழ்த்தியிருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. இசையாசிரியர் இலங்கையில் யாழ்பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பிரிவில் இசைக்கலைமணிப் பட்டம் பெற்றவர். அதற்கு முன்னர் வட இலங்கைச் சங்கீத சபையின் உரிய பரீட்சைகளில் சித்தியடைந்து சங்கீத கலாவித்தகர் பட்டமும் பெற்றவர். அவரின் பழுத்த அனுவமும். ஆசிரியத்துவமும் ஒலித்தொழில்நுட்பத்தில் அவர் காட்டிய கரிசனையும் அவர் மாணவரின் ஆற்றலில் தெரிந்தது. வசந்த மாலை களைகட்ட மதுர கானம் உதவியது.            தொடர்ந்து அறிவகத்தின் தலைவர் திரு வீ. குணரஞ்சிதன் அவர்கள் உரையாற்றினார். அறிவகத்தின் தேவைகளை நாசூக்காகப் பட்டியலிட்டு தனது நிதி சேகரிப்பு முயற்சிகளைக் கோடி காட்டி ஆதரவு வேண்டியமைந்தது அவரின் தலைமையுரை. வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நூலகப் பொறுப்பாளர்களாகத் தொண்டு அடிப்படையில் கடமையாற்றிய மூத்த குடிமக்கள் கௌரவிக்கப்பட்டமை வசந்த மாலையின் முக்கிய நிகழ்வு எனக் கொள்ளலாம். தொண்டர்கள் இன்றி அறிவகத்தின் இயக்கம் இல்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டதனால் அறிவகம் இக்கௌரவிப்பை பல ஆண்டுகளாக நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடைபெற்றது வாத்திய இசை. இதனை வழங்கியவர் அபர்ணா சுதந்திரராஜ் (ஸக்ஸபோன்) மற்றும் கணேசா தயாபரன் ஆகிய இளங்கலைஞர்கள். அவர்களின் வாத்திய இசைக்கு அணி செய்த இசைக்கலைஞர்கள் ஜனகன் சுதந்திரராஜ் (மிருதங்கம்) ரமே`; ஹரிச்சந்திரா (கஞ்சிரா) கிரிசான் சேகரம் (கடம்) மற்றும் பாலா சங்கர் (தபேலா) ஆகிய இளங்கலைஞர்கள். இந்த இளங்கலைஞர்களின் வாத்திய இசையில் மயங்காதார் யாருளர்?. பாரம்பரிய இசைவடிவங்களிலும், இசை வாத்தியங்களிலும் பரிச்சயம் மிக்க ஒரு இளைய தலைமுறை எம்மிடையே வலுவாக அமைந்திருக்கிறது என்பதையிட்டு நாம் எல்லோரும் பெருமைப்படலாம். அவுஸ்திரேலியாவில் வாழும் ஏனைய பல இனத்து இளைய தலைமுறையிடம் பாரம்பரிய இசை எவ்வித முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்பதோடு அவர்கள் ஆங்கில திரைப்படங்கள் மற்றும் இசை அல்பங்கள் மூலமாக ஆபிரிக்க-அமெரிக்கக் கலப்புப் பண்பாட்டினாலேயே மிகவும் கவரப்பட்டிருக்கிறார்கள் என்பதும் நாம் மனங்கொள்ளத்தக்கது. இளைஞர்களின் வாத்திய விருந்துக்கு அடிப்படையான ஒருவரை கூறாவிட்டால் அது முறையாகாது. ஆம்! பல இசைக் கலைஞர்களை சிட்னியில் உருவாக்குவதில் முன்னிற்கும் இசையாசிரியர் திரு சுதந்திரராஜ் அவர்களே இதன் கர்த்தா! அவரே கைகளில் தாளம் போட்டு மேடையில் கலைஞர்களை நெறிப்படுத்தும் பணியில் இருந்தார். அவர் நடத்தும் ஞானாலயம் இசைப் பள்ளியின் மாணவர்களே இவ்விசைக் கலைஞர்கள். வசந்தமாலைக்கு மெருகு சேர்த்த மற்றொரு நிகழ்ச்சி இவ்வாத்திய இசை.
இடைவேளையின் பின் சிட்னி பரதலயா நடனப் பள்ளி மாணவர் மூவரின் நடனம் இடம்பெற்றது. புஸ்பாஞ்சலி அலாரிப்பு ஜதீஸ்வரம் என விரிந்த அவர்களின் நிகழ்ச்சியை தயாரித்து நெறிப்படுத்தியவர் திருமதி அபிராமி குமாரதேவன். லிங்காலயா நடனப்பள்ளியில் தனது ஏழு வயது முதல் நடனம் பயின்று அரங்கேற்றம் கண்ட அபிராமி ஒரு கண்டிப்பான நடன ஆசிரியர் என்கிறார் ஒரு பெற்றார். இளம் நடன ஆசிரியரான அபிராமியிடம் இளமையில் நடனம் பயிலும் இளமயில்கள் ஆருதி குமணன் பரூல் சட்டர்ஜி விஜயாள் விஜே ஆகியோர் உண்மையிலேயே அதிஸ்டசாலிகள் தான். அவர்கள் நடன நிகழ்ச்சியில் விறுவிறுப்பாகத் தொடங்கியது வசந்தமாலையில் இடைவேளைக்குப் பின்னரான நிகழ்ச்சிகள்.
அறிவகத்தின் பொருளாளர் திரு ந. கௌரிதாசனின் சுருக்கமான நன்றியுரையுடன் ஆரம்பமாகியது சங்கமம் நிகழ்ச்சி. இது திரையிசைப் பாடல்களுக்கான நடன நிகழ்ச்சி. சிட்னியில் நெடுங்காலமாகவே சிறுவர்களை வைத்து அழகிய திரையிசை (பொலிவூட் நடனம்) பரதம் மற்றும் கிராமிய நடன நிகழ்வுகளை எதுவித கைமாறுமின்றி ஒழுங்கு செய்து பயிற்றுவித்து மேடையேற்றும் பல்மருத்துவ கலாநிதி யசோதரபாரதி சிங்கராயர் அவர்களே சங்கமத்தின் தயாரிப்பாளர் மற்றும் நெறியாளர். அவரின் பொலிஃபிற் நடனக் கலையகம் (Bollyfit Dance Studio) பெருமையுடன் வழங்கிய நடனங்களில் 45 சிறுவர் சிறுமியர் பங்குகொண்டமை சிறப்பம்சம். மேலும் அவர்கள் வெவ்வேறு பாடல்களுக்கும் பல்வேறு வண்ண வண்ண ஆடையணிந்து மேடையில் ஆடியது சபையோரின் பெருவரவேற்பைப் பெற்றது. பழைய பாடல்கள் புதிய பாடல்கள் மற்றும் இடைக்காலப் பாடல்களில் மாணவர்கள் தூள் கிளப்பினர். ”வரவு எட்டணா செலவு பத்தணா” என்ற பாடலுக்கு சின்னஞ்சிறுசுகள் வெள்ளையுடையில் ஆடிய நடனம் மெய்மறக்க வைத்தது. கரிகாலன் காலைப்போல கறுத்திருக்குது குழலு என்ற புதிய பாடலுக்கு நடனம் ஆடிய நடனம் பார்போரை சொக்கவைத்தது. ஒரு நடனத்திற்கும் மற்றோரு நடனத்திற்கும் இடையே சில வேளைகளில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டது. காரணம் புரியாது சபையோர் சிலர் விசனப்பட்டனர். முதல் நடந்த நடனத்தில் பங்குபற்றிய சில குழந்தைகள் அடுத்த நடனத்திலும் வேறு உடையில் தோன்ற வேண்டியதனால் ஏற்பட்ட காலதாமதம் என்று அறிய முடிந்தது. நிறைவு நடனத்துக்கு முன்னால் ஏற்பட்ட கால இடைவெளியில் சபையோரின் விசனத்தைப் போக்குமுகமாக தொகுப்பாளர் யதுகிரி லோகிதாசன் மூதறிஞர் ராஜாஜியின் “குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடலை உள்ளுணர்ந்து பாடினார். மென்மையான அவரின் குரலில் மூதறிஞரின் வார்த்தைகள் உண்மைப்பொருள் காட்டி நின்றன.


சங்கமம் திரைப்படத்தில் வைரமுத்துவின் வரிகளுக்கு ஏ.ஆர் இரகுமான் இசையில் உருவான ”மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்” என்ற பாடலுக்கு ஆடியவர் ஒரு மாணவரல்ல. ஒரு மாணவரின் தந்தை. கதிர் என்ற அந்தத் இளவயதுத் தந்தையின் மகளும் இந்நிகழ்ச்சிகளில் ஆடியிருந்தார். இரு சிறுவர்களுடன் மிக வேகமானதும் விறுவிறுப்பானதுமான சங்கமம் படப்பாலுக்கு நடுநாயகமாக நின்று ஆடிகொண்டிருந்த கதிரின் ஆட்டம் யசோதரபாரதியின் சங்கமத்திற்கு மட்டுமல்ல வசந்தமாலைக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது எனலாம். விரைவான தாளக்கட்டிற்கு ஈடுகொடுத்து ஆடிய கதிரின் நடனம் பார்ப்போரைக் கட்டிப்போட்டது. பாட்டு முடியும் நேரத்தில் எல்லா மாணவரும் மேடையில் தோன்றி வரிசையாக நிற்க இறுதிவரிகளுக்கு கதிர் ஆடிக்கொண்டிருந்தார். உடல் பொருள் ஆவியெல்லாம் கலைஞர் சங்கமம் என்ற வரி எத்தனை நித்தியமானது எனபது உண்மைக் கலைஞர்களுக்கு புரியும். அப்போது எழுந்த கரகோசம் வானைப் பிளந்தது.


வசந்தமாலை 2010 நிகழ்சிக்கென ஒரு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. சிட்னி தமிழ் அறிவகத்தின் வரலாறு பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒவ்வொரு பக்கத்தில் ஆக்கங்கள் இருந்தன. தமிழ் சமூகத்திற்கு அறிவகத்தின் வேண்டுகோள் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. வருடாந்தம் தேவைப்படும் பதினாலாயிரம் வெள்ளிகள் தேவைப்படுவதாகவும் நிதிமிகுந்தவர் தாராளமாக உதவவேண்டுமெனவும் கோருகிறது அவ்வேண்டுகோள். மேலும் கீழுமாக இரு கரங்களில் சிட்னி தமிழ் அறிவகத்தின் இலட்சினையைத் தாங்கி முகப்பு அட்டைப்படம் அமைந்திருந்தது. சிட்னி தமிழ் சமூகத்திடம் அறிவகத்தினர் எதிர்பார்பது என்ன என்று புரிந்தது.


அடுத்த வசந்தமாலையை வடிவமைக்கும்போது நிகழ்ச்சிகளில் இன்னும் சற்று கவனம் செலுத்தினால் தரமானதாக மட்டுமல்ல நேர்த்தியான ஒரு விழாவாகவும் குறித்த காலத்தில் நிறைவடையும் விழாவாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சிட்னி தமிழ் அறிவகத்திற்குக் கைகொடுக்க வேண்டியது சிட்னி தமிழ் சமூகத்தின் கடமையாகின்றது.

1 comment:

Anonymous said...

பல இசைக் கலைஞர்களை சிட்னியில் உருவாக்குவதில் முன்னிற்கும் இசையாசிரியர் திரு சுதந்திரராஜ்.....!

Money minded.