இன்று இலங்கை முழுவதும் நிலவுகின்ற பதட்ட நிலை, தமிழ்-சிங்களம் , இந்து-கிறிஸ்தவ-இஸ்லாமிய-பௌத்த என்ற மொழி, மத வேறுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் பாதித்து இருக்கின்றது. வெளி நாடுகளில் வாழ்கின்ற எம்மில் பலரும் , எமது மக்கள் - எமது நாடு என்ற துடிப்போடு இலங்கையில் நடக்கும் சம்பவங்களை அவதானித்து வருகின்றோம்.

எமது தமிழ் பாடப்புத்தகங்களில் ஒரு பாட்டு உண்டு " சிங்களர்-தமிழர் -முஸ்லீம் யாம் , சீருடன் பயின்று இணைந்தாலே , மங்களம் பொங்கும் நல்லுலகாய் மாண்புடன் விளங்கும் நம் இலங்கை". நம்மை எதிர் கொண்டு இருப்பது ஒரு சமூகப்பிரச்சனை-அது பூதாகரமாக வெடிக்காமல் , முளையிலே கிள்ளி எறிவது, சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரினதும் சமூகக் கடமை. இதற்கு அரசியல் தலைமைத்துவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், எம்மால் முடிந்த சமூகத் தலைமைத்துவத்தை ஓருவருக்கொருவர் வழங்க முன்வருவது எமது கையில் இருக்கின்றது.
வெளி நாட்டில் இருப்பவர்களோ உள் நாட்டில் இருப்பவர்களோ, வெறுமனே தகவல்களை மட்டும் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் சுடச்சுட பகிர்ந்து கொண்டு, 'எமோஜிக்களில்' மட்டும் வாழ்க்கையை நடத்தாமல் , நாட்டைப்பற்றிய உண்மையான உணர்வுடன் செயற்பட வேண்டும் .
சமீபத்தில் நடந்த சம்பங்களில் உயிர் இழந்தோ, காயப்பட்டோ , அன்புக்குரியவர்களை இழந்தோ தவிப்பவர்கள் அனுபவிக்கும் உயிர் வலி, இழப்பைத் தம் வாழ்க்கையில் எதோ ஒரு விதத்தில் எதிர்கொண்ட ஒவ்வொருவருக்கும் முழுமையாகத் தெரியும். இலங்கையை சுற்றுலாப் பயணிகளாகப் பார்க்க வந்து குடும்பத்தினரை இழந்து இடிந்துபோயிருக்கும் வெளி நாட்டவர்களும் சாதாரண மனிதர்கள் தான் . அவர்களது வலியும் வேதனையும் விலை பேச முடியாதவை.