வசந்த கால கோலங்கள் Sep 1 - செ.பாஸ்கரன்

.

ஞாயிறு காலை படுக்கையில் இருந்து கண் விழிக்கிறேன் படுக்கை அறை கதிரவனின் தழுவல்களால் நிறைந்து வெளிச்சமாக இருக்கிறது. சின்னக் குருவிகள் தொடக்கம் குக்கபரா குருவிகளின் ஆரவாரம். வெவ்வேறு விதமான சப்த ஜாலங்கள், அந்த பறவைகளின் காதல் மொழியாக இருக்கலாம். யன்னலூடாக பார்வை வெளிச்செல்கின்றது இலைகளற்று  நின்ற மரக்கொப்புகளில் இளம் குருத்துப்பச்சை நிறம் தோன்றியிருக்கிறது . மயிர்க்கொட்டியின் உடலெங்கும் இருக்கும் மயிர்கள்போல் கொப்புகள் எங்கும் குருத்துக்கள். ஓங்கி உயர்ந்து நின்ற கமுகமரத்தின் ஓலைகள் காற்றோடு சரசமாடுகின்றது .வானத்து வெண்முகில்கள் ஒன்றையொன்று கலைத்து விளையாடி களிப்புறுகிறது.

கடந்த மூன்று நாட்களாய் மழையும் குளிரும் மாறிமாறி விரட்டியபோது யன்னல் கதவுகள் அனைத்தையும் இழுத்து மூடி அதன் மேல் தடித்த திரையும் போட்டு படுக்கையுள் பதுங்கியிருக்கும் நிலை மாறி என்ன இன்று காற்றுவந்து கேசத்தை வருடிச் செல்கிறது . எனக்கு முன்பே எழுந்துவிட்ட என்மனைவி வசந்த கால ஆரம்பத்தின் அழகு கண்டு யன்னல்களையும் கதவுகளையும் திறந்து விட்டிருக்கிறார். அதன் பயன் தான் நான் கண்விழிக்கும்போது கண்டதும் கேட்டதும்.

நாளை வசந்தகாலம் அது நமக்குமட்டுமல்ல பறவை ,பட்சி, மரம், செடி, கொடி எல்லாவற்றுக்குமே வருகின்ற வசந்தமல்லவா. அதுதான் இத்தனை வரவேற்பு. எழுந்து ஜன்னலருகே சென்று நிக்கிறேன் சின்னக் குருவிகள்கூட ஒன்றையொன்று கொஞ்சி விளையடிக்கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களும் இவை எங்கிருந்தன என்மனது எண்ணத்தொடங்குகிறது. போர்வை கூட இல்லாமல் இவை எப்படி இந்த விண்டர் குளிரை தங்கியிருக்கும் . விடையில்லாத அந்த கேள்வியோடு வசந்தகாலத்தின் வருகையை எதிர்கொள்ள வெளியில் இறங்குகிறேன்..








No comments: