எழுத மறந்த குறிப்புகள் - முருகபூபதி

.
பயிர்   வளர்   மண்ணில்  உயிர்ப்புடன்   வாழும்   தம்பதியர்
தொடர்பாடல்தான்     இயந்திர  யுகத்தில்   ஆரோக்கியத்திற்கு   அவசியம்   தேவைப்படுகிறது.
                                                                                                                   

பலரதும்  வாழ்க்கை   ஏதோ   ஒருவகையில்   தூண்டுதல்களுடன்தான் தொடருகின்றது.   எனது    வாழ்வும்   அப்படியே   சமீபத்தில்   நான்   வெளியிட்ட   எனது   சொல்ல   மறந்த  கதைகள்  நூலை  வெளியிட முன்வந்தபொழுது   அதுதொடர்பாக   நான்   வழங்கிய   வானொலி நேர்காணல்   மற்றும்   வெளியான    விமர்சனங்களையடுத்து   அவற்றை செவிமடுத்த -   கவனித்த   சில  இலக்கியவாதிகள்   எனக்கு   வாழ்த்து தெரிவித்திருந்ததுடன்    நூலின்   பிரதியும்   கேட்டிருந்தார்கள்.    அவர்களில் ஒருவர்    ஜெர்மனியில்   வதியும்   எழுத்தாளர்   ஏலையா  முருகதாசன்   என்ற   அன்பர்.
 இவர்  அண்மைக்காலமாகத்தான்   என்னுடன்   மின்னஞ்சல்   தொடர்பில் இருப்பவர்.    ஒரு   நாள்   இரவு   தொலைபேசியிலும்  தொடர்புகொண்டு உரையாடினார்.





எனது   வானொலி   நேர்காணலில்  குறிப்பிட்ட   அந்த   சொல்ல  மறந்த கதைகளில்   இடம்பெற்ற   முன்னைய   சோவியத்தின் இராஜதந்திரியிடமிருந்த    சங்கத்  தமிழ்  இலக்கியம்  தொடர்பான பார்வையைப்பற்றி   அறிந்ததும்   எனக்கு   பின்வரும்  மின்னஞ்சலை அனுப்பினார்.   அதனை    காலத்தின்   தேவை   உணர்ந்து    வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டு   -   இனி    நான்  எழுதப்போகும்    எழுத  மறந்த  குறிப்புகள் தொடருக்குள்    பிரவேசிக்கின்றேன்.
அதற்கு   முன்னர்   மெல்பனில்   வதியும்   இலக்கிய   நண்பர்  டொக்டர் நடேசன்   இங்கு   நடந்த   நூல்  வெளியீட்டு   அரங்கில் -   தமிழர்களாகிய நாம்  எம்மவர்கள்  பற்றிய   வரலாறுகளை    எழுதுவதில்  ஏனோ பின்தங்கியிருக்கின்றோம்   எனவும்  தமது    உறவினர்கள்   மறைந்தவுடன் அவர்களை    நினைவுகூரும்   கல்வெட்டுகளை   எழுதுவதற்கும் மற்றவர்களின்    தயவை   நாடுவதாகவும்   கவலை   தெரிவித்தார்.   அத்துடன்   சமூகத்தில்   முக்கியமான   ஒருவர்    மறைந்தபின்னர்   அவர் பற்றி   எழுதுவதிலும்    பார்க்க   அவர்   வாழும்    காலத்திலேயே எழுதிவிடல்வேண்டும்   என்றும்   வேண்டுகோள்   விடுத்தார்.
முருகதாசனின்   மின்னஞ்சலும்    நடேசனின்   குரலும்   எனக்கு   இந்த   எழுத மறந்த   குறிப்புகள்   தொடரை   எழுதுவதற்கு   தூண்டியிருக்கின்றன என்றே   கருதுகின்றேன்.
முருகதாசனின்  மின்னஞ்சல்
வணக்கம்.  உங்கள்  செய்தியை   படித்தேன்.   புதிய   தகவலை   அறிந்து மகிழ்கிறேன்.   இந்தச் செய்தியை   எனது   முகநூலில்  பதிவு   செய்ய இருக்கிறேன்.
எமது  வரலாற்றை   நாம்   அறிந்து   கொண்டதைவிட   அந்தந்த   துறைசார் கல்வியியலாளர்களும் - உலக  வரலாற்றாசிரியர்களும்   இராஜதந்திரிகளும்    எம்மைவிட   மிக   அதிகமாகவே   நிரூபணங்களுடன் அறிந்து    வைத்திருக்கிறார்கள்.


எங்களிடம்  எங்கள்   கிராமத்தைப்   பற்றியே   அறிந்து  கொள்ள  விரும்பாத அலட்சியப்  போக்கு  நிறையவே  உண்டு.   எதையும்   ஆர்வத்துடன்   ஊன்றி படிப்பதுமில்லை -  உள்வாங்கிக்   கொள்வதுமில்லை.
வரலாறுகள்  சம்பந்தப்பட்டவையை   விடுவோம்.   எமது  அன்றாட வாழ்வோடு   சம்பந்தப்பட்ட   காய்கறிகளையோ   வேலிகளில்   படர்ந்திருந்த    மூலிகைகளான    குறிஞ்சா  -   தூதுவளை   மொசு மொசுக்கை -   கொவ்வை -  முசுட்டை -  முல்லை  போன்றவற்றின் மருத்துவக்குணங்களை   அறிந்து   கொள்வதில்  ஆர்வம் காட்டதாவர்கள்தானே    நாங்கள்.

அதுபற்றி  சொல்பவர்களை  கேலியுடன்  பார்ப்பது  கிண்டலடிப்பதுதான்     எம்மவர்   வேலையாக   இருந்தது.   அவற்றின்   மகத்துவம்  பற்றி  சொன்ன என்னை    என்னூரில்   சிலர்   கேலி  செய்திருக்கிறார்கள்.
இந்த   விடயத்தில்  சிங்கள  மக்களை  நான்  போற்றுவேன்.    நான் நீர்கொழும்பு  -  கொச்சிக்கடையிலும்  சிலாபத்திலும்   இருந்த போது அவர்களின்   வாழ்க்கையைப்  பார்த்து   மகிழ்ந்திருக்கிறேன்.


எமது   பிரச்சினை  பற்றி    இங்குள்ள  சமூக  அமைப்பினர்   எம்முடன் கலந்துரையாடிய போதெல்லாம்   அவரகள்   எமது   வரலாறு   பற்றிய ஆவணங்களை  உள்ளடக்கிய   கோப்புகளை   கொண்டு   வந்து   மேசையில் வைத்தவுடன்   நான்   அதிர்ந்து  பின் வெட்கிப் போயிருக்கிறேன்.
நடைபெறும்   நூல்   வெளியிடு   சிறப்பாக  நடைபெற  எனது   அன்பையும் வாழ்த்தையும்   தெரிவிக்கிறேன்.  தொடர்வோம்.........
அன்புடன்  ஏலையா க.முருகதாசன்

கடந்த  23  ஆம்  திகதி   அதிகாலை  எழுந்து   இந்த   மின்னஞ்சலைப்பார்த்த பின்னரே   எனது   நூல்   வெளியீட்டு   அரங்கு   நிகழ்வுக்கு  புறப்பட்டேன். வீடு    திரும்பியதும்   எனக்கு   வந்திருந்த   மின்னஞ்சல்களை   பார்த்தபொழுது   அவுஸ்திரேலிய    குவின்ஸ்லாந்து   மாநிலத்தில்   வதியும் நண்பர்   தர்மசேகரம்   அவர்கள்   எனக்கு   அனுப்பியிருந்த  படங்கள்  என்னை   வியப்பில்   ஆழ்த்தின.


கடந்த  மார்ச்   மாதம்  இம்மாநிலத்தில்    நடைபெற்ற   கலை - இலக்கிய சந்திப்புக்கு    சென்றிருந்தபொழுது    தர்மசேகரம்   அவர்களின்    இல்லத்தில் தங்கியிருந்தேன்.    அந்த   தம்பதியரின்    அன்பான  உபசரிப்பில்  திழைத்திருந்த  எனக்கு    அவர்களின்  வீட்டு காய்கறித்தோட்டத்தைப்பார்த்தவுடன்   வியப்பும்  சொல்லில் வடிக்கமுடியாத   உணர்வுகளும்   தோன்றின.
இயற்கையையும்   பிராணிகளையும்   மரங்கள்  செடி   கொடிகள்  மலர்களையும்   ஆழமாக    நேசிப்பவர்களின்   உலகம்   தனித்துவமானது. அவர்களிடம்   இருக்கும்   அவை   தொடர்பான   நுண்மையான   அறிவு எம்மை    வியக்கவைப்பவை.
மனிதர்களுக்கும்   அவர்களின்    குழந்தைகள்  அவர்கள்   வளர்க்கும்  செல்லப்பிராணிகளுக்கும்    அதே வேளை  ஊர்களுக்கும்    நதிகளுக்கும் சமுத்திரங்களுக்கும்   மலைகளுக்கும்   பெயர்வைப்பவர்களைப்பற்றி எப்படியோ    அறிந்துகொள்கின்றோம்.
ஆனால் -   மரங்கள்   செடி -   கொடிகள்  -  புற்கள் -   தாவரங்கள்  -  காய் கனிகள்  -  மூலிகைகள் -  தானியங்களின்  பெயர்களின் ரிஷி மூலம் எமக்குத் தெரிவதில்லை.
நண்பர்  தர்மசேகரத்தை   நாம்   சுருக்கமாக  தர்மா  என்றே  அழைப்போம். அவரை  நான்  அவுஸ்திரேலியாவில்  1987   இல்   பிரவேசித்த சமயத்தில்தான்    சந்தித்தேன்.    என்னைப்போன்று    இந்தநாட்டில்   அகதி அந்தஸ்து   கோரி   விண்ணப்பித்தவர்களுக்கு   தகவல்    அமர்வு   சந்திப்பு ஒன்றை   இங்கு   பிரபலமான   சட்டத்தரணி   ரவீந்திரன்   அவர்கள்  தமது இல்லத்தில்   குறிப்பிட்ட  1987 ஆம்   ஆண்டு   காலப்பகுதியில் நடத்தியபொழுதுதான்  அங்கு   தர்மாவைக்கண்டேன்.
அவருக்கும்   என்னைப்போன்ற  பலருக்கும்   இந்நாட்டில்   நிரந்தர  வதிவிட அனுமதி   கிடைப்பதில்   தாமதங்கள்   நீடித்தது.   அதனால்   நாம்  அனைவரும்   இணைந்து   தமிழ்   அகதிகள்   கழகத்தை  உருவாக்கினோம்.
ஏற்கனவே  தொழில்  முறை   விசாவில்  வந்து   குடியுரிமை பெற்றவர்களுக்கும்   எம்மைப்போன்று   அகதிகளாக  வந்து   குடிவரவு குடியகல்வு   திணைக்கள   கலங்கரை   விளக்கத்தின்    பச்சை  நிற  விளக்கு சமிக்ஞைக்காக   காத்திருந்தவர்களுக்கும்   இடையில்  இனம்புரியாத இடைவெளி    நீடித்துக்கொண்டிருந்தது.


மூத்த  சங்கமான  விக்ரோரியா  இலங்கைத்தமிழ்ச்சங்கத்தில்   எம்மை சாதாரண   உறுப்பினர்களாகவும்   இணைத்துக்கொள்வதற்கு   தயக்கம் காட்டினார்கள்.   இந்நிலையில்  எமது   பரிதாபகரமான    நிலைமையை உணர்ந்த   சில   அன்பர்களின்   தூண்டுதலினால்   எமக்கென  ஒரு அமைப்பாக   தமிழ்   அகதிகள்   கழகத்தை  உருவாக்கினோம்.
இந்த  அமைப்பு   மேற்கொண்ட   பல   ஆக்கபூர்வமான  பணிகள்  பற்றியும் காலப்போக்கில்   அந்த   அகதிகள்   கழகமே    அகதியாகிப்போய்விட்ட துர்ப்பாக்கியம்   பற்றியும்    எழுதுவதற்கு    தனியாக  ஒரு   அத்தியாம் தேவைப்படும்.
அந்த  அகதிகள்  கழகத்தில்   தர்மாவும்  இணைந்து    ஒத்துழைப்பு  நல்கினார். அவர்   மிகவும்    சுறுசுறுப்பானவர்.
அதிகாலையிலேயே   எழுந்தவிடுவார்.   சனி - ஞாயிறு   விடுமுறை நாட்களிலும்   அவர்   அப்படித்தான்.   அக்காலப்பகுதியில்   அவரிடம்   ஒரு கார்   இருந்தது.   கார்   இல்லாத   நண்பர்களை   சனிக்கிழமைகளில் காலையில்   அவரது   தொலைபேசி    அழைப்புத்தான்  துயில்  எழுப்பும்.
எதற்கு ?  ஷொப்பிங்கிற்கு  அழைத்துச்செல்வதற்கு.
அன்றுதான்  ஒரு  வாரத்துக்குத்தேவையான   காய்கறி  -  இறைச்சிவகைள் - வீட்டுக்குத்தேவையான  பொருட்களை  -   எங்கு   மலிவாகக்கிடைக்கும்  -என்ற தேடுதலுடன்   ஒவ்வொவரும்   ஓடும்  நாள்.
தர்மாவுடன்   நானும்  நண்பர்களும்  நெருங்கிப்பழகுவதற்கும்   ஒருவர் காரணமாக   இருந்தார்.    அவர்   சாம். ஆறுமுகசாமி.   அவரும்   தமது  மனைவி  பிள்ளைகளை   ஊரில்   விட்டுவிட்டுத்தான்   வந்திருந்தார். தன்னிடம்    வந்தவர்களுக்கு   வேலை    தேடிக்கொடுப்பதிலும்   அவர்  வெகு சமர்த்தர்.   அவரை   எனக்கு   அறிமுகப்படுத்தினார்   நீர்கொழும்பூரின்   எனது   பால்ய  கால  நண்பர்    இராஜரட்ணம்  சிவநாதன்.
மனித வாழ்வு  இப்படித்தானே   அறிமுகங்களுடன்    பயணிக்கிறது.    வாழ்வு நீண்ட   பயணம்.   சிலர்   தொடர்ந்து   உடன்   வருவார்கள்.    சிலர்   இடையில்    கழன்றுவிடுவார்கள்.    கிட்டத்தட்ட    ரயில்  பயணங்கள்தான் இந்த   வாழ்வும்   நாம்   சந்திக்கும்   மனிதர்களும்.
தர்மா  1987  முதல்   இற்றை  வரையில்   என்னுடன்  நட்புறவுடன்தான் இணைந்திருக்கிறார்.
1987  இல்  தமிழ்  நாட்டிலிருந்து   பழ. நெடுமாறனை   இங்குள்ள தமிழ்ச்சங்கம்   அழைத்து   மெல்பன்   பல்கலைக்கழக  கல்லூரி   மண்டபத்தில் உரையாற்ற   வைத்தபொழுது   இறுதியில்  கேள்வி   நேரத்தில்   அவரிடம் நான்   ஒரு   கேள்வியை   தொடுத்தேன்.
அந்தக்கேள்வியின்   சாரம்:
பாரத   நாட்டிலிருந்து   முதலில்   பாக்கிஸ்தான்  பிரிந்தது.   பின்னர் பாக்கிஸ்தானிலிருந்து    பங்களா தேஷ்    பிரிந்தது.    எனினும்    காலப்போக்கில்  இவற்றுடன்   இந்தியாவுக்கு  ஆரோக்கியமான  உறவு   இல்லை. பாக்கிஸ்தானில்    அடிக்கடி   இராணுவப்புரட்சியும்    நடக்கிறது. இந்நிலையில்    இந்தியா  இலங்கையில்  தனிநாட்டுக்கோரிக்கைக்கு உதவமாட்டாது.    வங்கம்   தந்த   பாடம்  என்று   ஈழ  விடுதலை  இயக்கம் ஒன்றும்   நூல்   வெளியிட்டிருக்கிறது.    எனவே    இலங்கையில்   தனித்தமிழ்   ஈழம்   உருவாவது  சாத்தியமில்லை.
அதற்கு - நெடுமாறன்    வழக்கம்போலவே  -   ஈழத்தமிழர்களுக்கு   இன்னல் விளைந்தால்    இந்தியாவில்   வாழும்   கோடிக்கணக்கான   தமிழர்கள் வெகுண்டு    எழுந்து    போராடுவார்கள்   என்று    உணர்ச்சிகரமாகச்சொன்னார்.
 சபை  பலத்த  கரகோசம்  எழுப்பி  அவரது   உரைக்கு   அங்கீகாரம் வழங்கியது.
உடனே  நண்பர்  தர்மா  எழுந்து   என்னைச்சுட்டிக்காட்டி   இவர்களுக்கு கேள்வி    எழுப்பவே   தெரியும்   என்று   கரகோசம்    எழுப்பியவர்களுக்கு ஆதரவு    தெரிவித்தார்.


இவ்வாறு   நாம்   இருவரும்   அடிக்கடி   அரசியல்   கருத்துக்களில் முரண்பட்டிருந்தாலும்   நாம்   தனிப்பட்ட   முறையில்   பரஸ்பரம் ஆரோக்கியமாகவே   நட்புறவை   தொடர்ந்தோம்.
பழ. நெடுமாறன்   வன்னியில்  நீடித்த  போரினால்   பாதிப்புற்றவர்களுக்கும் காயப்பட்டவர்களுக்கும்    மருந்துவகைகளை   சேகரித்து செஞ்சிலுவைச்சங்கம்   ஊடாக   கப்பலில்   அனுப்புவதற்கு   முயன்ற மனிதாபிமானி.
எனினும் -   அவர்   விடுதலைப்புலிகளுக்குத்தான்   அவற்றை   அனுப்ப முயற்சிக்கிறார்   என்று   நம்பிய   இலங்கை   அரசு   அதனைத்தடுத்தது. இறுதியில்   பழ. நெடுமாறன்   உண்ணாவிரதம்  இருந்தும்    போராடினார். அந்தப்போராட்டமும்   வழக்கம்போன்று    கைவிடப்பட்டது.
அவர்  படகுகளிலே   ஆயிரக்கணக்கானோரை   அழைத்துக்கொண்டு புறப்பட்டபொழுதும்   அந்த   முயற்சியும்   பலிதமாகவில்லை.
இவ்வாறு   வடக்கில்  வாழும்   ஈழத்தமிழர்களுக்காக  அவர்  பல மனிதாபிமான   முன்னெடுப்புகளை   மேற்கொண்ட    காலங்களில் யாழ்ப்பாணத்தில்   சூப்பர்   ஸ்டாரின்   திரைப்படங்கள்   ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக    காண்பிக்கப்பட்டன.
இதுபற்றி  உரையாடுவதற்கு   நண்பர்    தர்மாவை   அச்சமயங்களில் தேடுவதுண்டு.
தர்மா   பல  தொழில்கள்   தெரிந்தவர்.    அத்துடன்   மெல்பனில்  அவர்  பல விடயங்களில்   மற்றவர்களுக்கு   முன்மாதிரியாகவும்    திகழ்ந்தவர்.    அவர் சிறந்த    வீடியோ   ஒளிப்பதிவாளர்.
மெல்பனில்  பல   தமிழ்   அன்பர்களின்   குடும்ப   நிகழ்வுகள்  ((திருமணம் -  பிறந்த நாள்  -  சாமத்திய சடங்கு ) மாத்திரமல்ல    தமிழர்களின் பொது   நிகழ்வுகளும்   தர்மாவால்   ஒளிப்பதிவு   செய்யப்பட்ட  காலம்   முன்னர் இருந்தது.
தர்மா  விடியோ   என்ற   அவரது   சேவை   பலருக்கும்  தேவைப்பட்டது.
மெல்பனில்   ஹைடில்பேர்க்   என்ற   இடத்தில்   முதல்   முதலில்  இங்கு வாழும்   ஈழத்தமிழர்களுக்காக   ஒரு   பலசரக்கு    கடையையும் தொடக்கினார்.
1987 -  1991  காலப்பகுதியில்  அவரது   கடையைத்தான்  நாம் எமக்குத்தேவையான   இலங்கை   தயாரிப்புகளுக்கு    நாடுவோம்.    இலங்கை பத்திரிகைகள்   -   பிரான்ஸிலிருந்து  வெளியான   பாரிஸ்  ஈழநாடு   நாம் வெளியிட்ட   மக்கள்  குரல்  கையெழுத்து  பிரதிகளும்  இவரது   கடையில் கிடைக்கும்.
சண் - கலைஞர் - ஜெயா - விஜய்  தொலைக்காட்சி  சேவைகள்  மெல்பனில் அறிமுகமாவதற்கு   முன்னர்  எமது   தமிழ்த்திரைப்பட   ரசனைக்கும்  தர்மா உதவினார்.   தமிழ்த்திரைப்பட   விடியோ  நாடாக்களுக்காக   அவரது கடையை   சனி - ஞாயிறு  விடுமுறை நாட்களில் முற்றுகையிடும் தமிழர்கள் அதிகம்.
நாள்   முழுவதும்   தமது   கடையில்   அவரும்   அவரது   அருமை   மனைவி ஞானியும்   இருக்கவேண்டியிருந்தமையால்   நண்பர்களின்   குடும்ப நிகழ்வுக்கு   செல்ல  முடியாதிருக்கும்  சிரமங்களையும்   என்னுடான உரையாடலில்   தெரிவிப்பார்.


   மனைவிக்கு   கடை  வியாபாரத்தின்  சூட்சுமங்களை  அவர் பயிற்றுவித்தவாறு   தனது   வீடியோ   ஒளிப்பதிவு   வேலைகளிலும் ஈடுபாட்டுடன்   உழைத்தார்.
தொடர்ச்சியாக   இயங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு   உடலில்   களைப்பு ஏற்படலாம்.   ஆனால்  -  அவர்களது   உள்ளம்  சோர்வடையாது.    அவ்வாறு எதனையிட்டும்    சோர்வடையாத   அவரது    இயல்பு   என்னைப்பெரிதும் கவர்ந்தது.
சில  நாட்கள்   மெல்பனில்   ஸ்டேடியங்களில்   கிரிக்கட் -  உதை பந்தாட்டப்போட்டிகளை  ரசித்துக்கொண்டிருக்கும்   ஆயிரக்கணக்கான   மக்கள்   மத்தியில்   தர்மா   பத்திரிகைகளை விநியோகித்துக்கொண்டிருப்பதையும்   கண்டிருக்கின்றேன்.
என்னை   பல  சந்தர்ப்பங்களில்   இவ்வாறேல்லாம்   வியக்கவைத்த   நண்பர் தர்மசேகரம்   குவின்ஸ்லாந்து   மாநிலத்துக்கு   சில   வருடங்களுக்கு முன்னர்   மனைவியுடன்    இடம்பெயர்ந்தார்.
காரணம் -  மெல்பன்   பருவகாலம்தான்.  இங்கு   கோடையும்  கொடுமை. குளிரும்  கொடுமை.
தினமும்   நான்கு  பருவகாலங்கள்   மாறி   மாறி   வந்துகொண்டிருக்கும். தர்மாவை   ஆஸ்த்துமா   உபாதை  சிறுகச்சிறுக   பாதித்தமையினால்   அவர் இலங்கை   பருவகாலத்தை   ஒத்த  குவின்ஸ்லாந்து  மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார்.
மெல்பனில்   தமிழ்  பலசரக்கு  வர்ததகக்  கடைகள்   பெருகியதும்   தனது கடையை    மூடினார்.   வீடியோ  ஒளிப்பதிவாளர்கள்   அதிகரித்ததும் அந்தப்பணியையும்    குறைத்துக்கொண்டார்.
ஸ்ரேடியங்களில்   பத்திரிகை   விநியோகிப்பதையும்   நிறுத்திக்கொண்டார்.
இலங்கையில்   போர்   முடிவுற்றதும்   யாழ்ப்பாணத்திற்கு   அவ்வப்பொழுது சென்று   திரும்பினார்.    இறை  பக்தராகவும்   சாயி   பக்தராகவும் இருப்பதனால்   தாவர  பட்சணியாக  தன்னை   மாற்றிக்கொண்டார்.   அடிக்கடி இந்திய   திருத்தல   யாத்திரைகளும்  மேற்கொண்டார்.
இந்தத்தம்பதியர்களுக்கு  குழந்தைகள்  இல்லை.   எனினும்   அந்தக்குறையை   பொருட்படுத்தாமல்   ஊரில்  தனது   உறவினர்களின் பிள்ளைகளை   படிக்கவைத்தார்.   அவர்களுக்கு   பல்வேறு    வழிகளில்   கல்வி   மற்றும்   அத்தியாவசிய  தேவைகளில்   உதவுகின்றார்.
குவின்ஸ்லாந்து   மாநிலம்   சென்ற   பிறகும்  கோயில்  திருப்பணிகள் தொடருகின்றன.   அவரை   நீண்ட  காலமாக   நான்    அறிந்தவன்   என்பதனால்   இவற்றினால்   அவர்   என்னை  வியப்படையச்செய்யவில்லை.
குவின்ஸ்லாந்தில்   அவரது  வீட்டுத்தோட்டத்தில்  அவரும்   அவரது மனைவியும்  பராமரிக்கும்   காய் கறித் தோட்டத்தையும் கீரைத்தோட்டத்தையும்    தென்னை - மா - வாழை - வேம்பு - முருங்கை - கறிவேப்பிலை - மாதுளை - கொய்யா - மிளகாய் - கத்தரி - தக்காளி -அன்னாசி - தோடை - அப்பிள் -  எலுமிச்சை - மன்டரின் - பப்பாளி - உட்பட  பல  பயன்  தரு மரங்களையும்   கண்டு   உணர்ச்சிவசப்பட்டேன்.
திராட்சை - புடலங்காய் - பயிற்றங்காய் - பாகற்காய்  - அவரைக் கொடிகளையும் பரவசத்துடன்   பார்த்து  ரசித்தேன்.   அவரது   வீட்டு   முற்றத்தில்   மல்லிகை - முல்லை - கனகாம்பரம் - ரோஜா - செவ்வரத்தை -  நந்தியாவட்டை   உட்பட இன்னபிற   மலர்களும்   பெயர்   தெரியாத   செடி   கொடிகளும்   எனது கண்களுக்கு   விருந்து   படைத்தன.
குலை  தள்ளிய  வாழை   மரங்களை  குழந்தையை   அரவணைப்பது போன்று    தழுவிக்கொண்டேன்.
கொடிகளில்   தொங்கிய  நீண்ட   புடலங்காய்களை   தடவிப்பார்த்தேன்.
அந்த   பசுஞ்சோலையில்  சில  மணி   நேரங்களை   செலவிட்டேன்.
இந்த   உழைப்பிற்கு   நல்ல   மனமும்   வேண்டும்.    நல்ல  மண்ணும் வேண்டும்.   அவை   தர்மா   தம்பதியருக்கு   சிறந்த   கொடுப்பினை. வரப்பிரசாதம்.
சமீபத்தில்தான்   எனது   திரும்பிப்பாரக்கிறேன்  தொடரில்   இலங்கை வடக்கின்   உரும்பராய்   அச்செழு   பண்ணையார்  அமரர்   தம்பையா அண்ணர்   பற்றிய   பதிவை   எழுதியிருந்தேன்.
தர்மாவுடைய  பூர்வீகமும்  உரும்பராய்தான்.
குவின்ஸ்லாந்தில்   வதியும்  நண்பர்    தர்மசேகரம்    எனக்கு   மின்னஞ்சலில் அனுப்பிய   இந்தப் படங்களை   பார்த்ததும்   கடந்த  மார்ச்  மாதம்   அங்கே நான்   தரித்து  நின்ற   சில   மணிநேரங்கள்தான்   மீண்டும்   என்னிடம்  ஓடிவந்தன.
அன்று  மதியம்  நான்   சிட்னிக்கு   புறப்படும்பொழுது   திருமதி  ஞானி தர்மசேகரம்   தங்கள்   தோட்டத்தில்   பறித்த   சுவையான கொய்யாப்பழங்களை   கழுவித்துடைத்து   சிறு   சிறு துண்டுகளாக நறுக்கித்தந்தார்.   மீண்டும்    இங்கு   வந்தால்   அவசியம்   வாருங்கள்   என்று   எனக்கு   விடைகொடுத்து  மதிய  உணவும்  பார்சலில்   தந்துவிட்டார்.
உடல்   நலத்தை  கவனித்துக்கொள்ளுங்கள்  என்று   பாசமழை   பொழிந்தார்.
தர்மா   என்னை   அவரது   ஊருக்குச்சமீபமாக    இருந்த   ரயில்  நிலையத்திற்கு    அழைத்து  வந்து  ரயில்   புறப்படும்  வரையில்   நின்று கையசைத்தார்.
அங்கிருந்து  பிரிஸ்பேர்ண்   விமான   நிலையம்   செல்லும் வரையில் அவர்கள்   தந்துவிட்ட   கொய்யா   பழத்துண்டுகளை  சுவைத்தவாறு அந்தத்தம்பதியரின்  தொடர்ச்சியான  உழைப்பும்  அவர்கள்   குழந்தைகளை பராமரிப்பது    போன்று   வளர்த்துவரும்    பயன்தரு   பயிரினங்களும்தான் எனது   நினைவுகளில்   தொடர்ந்து   வந்தன.
சிட்னியில்   இறங்கியதும்   கவிஞர்    அம்பியின்   இல்லத்தவர்களுக்கும்   தர்மா   தம்பதியர்   என்னிடம்   தந்த   கொய்யா  மற்றும் கறிவேப்பிலைகளை   கொடுத்து  மனம்   நிறைவடைந்தேன்.
யாம்   பெற்ற   இன்பம்   பெருக   இவ்வையகம்.
மெல்பன்   திரும்பியதும்   தொலைபேசியில்    தர்மா   தம்பதியரின்   அன்பான   உபசரிப்புக்கு   நன்றி    தெரிவித்துவிட்டு   அவரது வீட்டுத்தோட்டத்தில்   அவர்   அன்று  எடுத்த   படங்களை அனுப்பிவைக்குமாறு   கேட்டிருந்தேன்.   அவரது   கணினியில்   நேர்ந்த  தொடர்   சிக்கலினால்  தாமதமானது.    அதனாலும்   எழுத  மறந்த இந்தக்குறிப்புகளும்   தாமதித்தன.
இறுதியாக  வாசகர்களுக்கு  ஒரு   செய்தி:   வெளியூர்களில்  அல்லது வெளிநாடுகளில்    எவரதும்   வீடுகளுக்கும்   விருந்தினர்களாக   சென்றால் திரும்பியதும்   குறைந்த   பட்சம்   நன்றி   தெரிவித்து  ஒரு    தொலைபேசி அழைப்பையோ   அல்லது   ஒரு   மின்னஞ்சலையோ    அல்லது   ஒரு வாழ்த்து    மடலையோ   அனுப்பிவிடுங்கள்.
இந்தத்  தொடர்பாடல்தான்  இந்த   இயந்திர  யுகத்தில்  எமது ஆரோக்கியத்திற்கு   அவசியம்   தேவைப்படுகிறது.
நாம்  கொண்டாட   வேண்டியவர்கள்   உலகில்   பல    இயல்புகளுடனும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.
---0---
letchumananm@gmail.com









No comments: