இளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்!சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை சார்ந்தவை இரண்டு. அவை புறநானூறும், பதிற்றுப்பத்தும் ஆகும்.
பதிற்றுப்பத்து சிறப்புப் பார்வையில் சேர மன்னர்கள் பற்றிய வரலாற்றுப் பதிவாய் அமைந்தது.

புறநானூறு, கடவுள் வாழ்த்து உள்பட 400 அகவற்பாக்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பெயர்கள் தெரியவில்லை. இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த புறநானூற்றில் 243ம் பாடலாக இடம் பெற்றிருப்பது தொடித்தலை விழுத்தண்டினார் பாடல்,

"ஒரு சிறு சொல்லேனும் வறிதே விரவாமல் உய்த்துணருந்தோறும் "நவில்தொறும் நூல் நயம் போலும்" என்னும் முதுமொழிக்கிணங்க, இன்பஞ் செய்வன சங்கப் பாடல்களேயாகும்" (உரைநடைக் கோவை: 2 ம் பாகம், ப.96) என்னும் பண்டிதமணியின் புகழாரத்துக்குப் பொருத்தமான ஓர் உதாரணமாக விளங்கும் இப்பாடலின் திறத்தினைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்:

"இப்பொழுது நினைத்தால் வருந்தத் தக்கதாக உள்ளது" (இனி நினைந்து இரக்கம் ஆகிறது) எனத் தொடங்கித் தம் இளமைக் கால அனுபவங்களை -இன்றைய ஊடக மொழியில் குறிப்பிடுவது என்றால் மலரும் நினைவுகளை - ஒவ்வொன்றாகப் பதிவு செய்ய முற்படுகிறார் முதியவர் ஒருவர்.
சிறுவர் விளையாட்டில் மணலைத் திரட்டிச் செய்யப்பட்ட தெய்வ வடிவுக்கு - பாவைக்கு - பறித்த பூவைச் சூட்டியதும்; குளிர்ந்த பொய்கையில் விளையாடும் இளம் பெண்களோடு கைகோர்த்துத் தழுவும் போது தழுவியும், அசைந்தாடும் போது அசைந்தாடியும் ஒளிவு மறைவு என்பவை அறியாத வஞ்சனை இல்லாத கூட்டத்தோடு விளையாடி மகிழ்ந்ததும்; உயர்ந்த கிளைகளை உடைய மருத மரத்தின் உயரம் தாழ்ந்து நீரோடு படிந்து காணப்பெற்ற கிளையைப் பற்றி ஏறி, சிறப்பு மிகக் கரையில் நிற்பவர் வியப்பவும் அலைத்துளி மேலே எழும்பவும் ஆழமிக்க நீண்ட அந்த நீர் நிலையில் "துடும்" என்று ஒலி உண்டாகக் குதித்து மூழ்கி அடிமணலை அள்ளிக் காட்டியதும் ஆகிய அந்தக் களங்கமில்லா இளமை வருந்தச் செய்கிறது. இனி அது எப்பொழுது வாய்க்கும்?

"இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ?"

இங்கே பதினொரு அடிகளில் முதியவர் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த மூன்று பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து மனம் மகிழ்கிறார்; நெகிழ்கிறார். "இனி நினைந்து இரக்கம் ஆகின்று" என்னும் முதல் அடியிலும், "கல்லா இளமை, அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ?" என்னும் பத்து, பதினொன்றாம் அடிகளிலும் முதியவரின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் ஆழ்ந்த ஏக்கம் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. "மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு" என்னும் பாடலின் ஐந்தாம் அடி ஒளிவுமறைவு, சூதுவாது என்பவை அறியாத - களங்கமோ, வஞ்சனையோ துளியும் இல்லாத - இளமைப் பருவத்தை நன்கு அடையாளம் காட்டி நிற்கிறது.

பாடலின் கடைசி மூன்று அடிகள் அழகிய சொல்லோவியமாய் அமைந்து முதியவர் ஒருவரை நம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன. பூண் பிடித்த வளைந்த உச்சியை உடைய பெரிய கம்பினை ஊன்றி, தளர்ந்து நடுங்கியவாறு, இருமலின் இடையிடையே சில சொற்களைச் சொல்லும் ஒரு பெரிய முதியவரைப் படம் பிடித்துக் காட்டும் அடிகள் இதோ:

"தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே."

இதைவிட இரத்தினச் சுருக்கமாய் வேறு எவராலும் முதுமையைச் சித்திரிக்க முடியாது. இப்பாடலைப் பாடிய புலவரின் இயற்பெயர் தெரியாது.

முதுமையின் அடையாளமான கைத்தடியினை(walking stick) "தொடித்தலை விழுத்தண்டு" என்னும் அழகிய சொற்றொடரால் சுட்டியமையால், இவர் "தொடித்தலை விழுத்தண்டினார்" என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றார்.

குண்டலகேசி உணர்த்தும் யாக்கை நிலையாமை:

"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின் றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ?"

என்பது உடம்பின் நிலையாமையை எடுத்துரைக்கும் குண்டலகேசிப் பாடல்,
"பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் ஏற்படுகிறது.
காளைப் பருவம் செத்து, காதலுக்குரிய இளமைப் பருவம் பிறக்கிறது.
அதுவும் மாறி முதுமை உண்டாகிறது.

இவ்வாறு ஒரு நிலை செத்து அடுத்த நிலை ஏற்படுவதால், நாம் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறோமே! நமக்காகவே நாம் அழவேண்டி இருக்கிறதே! அவ்வாறு அழாதது ஏனோ" என வினவுகிறது இப்பாடல்.

இதன் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்கும்போது தொடித்தலை விழுத்தண்டினாரின் புறநானூற்றுப் பாடலைக் கையறுநிலைத் துறையில் சேர்த்திருப்பது பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

பேராசிரியர் இரா. மோகன்
நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: டாக்டர் கண்ணன் நடராஜன்