ஒளி காட்டும் வழி

.

ஒளி காட்டும் வழியில் பயணப்பட்டு
ஒளிர்ந்தடங்கக்கூடும் உங்கள் திருநாட்கள்.
விழி காட்டும் ஒளியில் மாத்திரமே
விடியக்கூடும் எங்கள் இருள்நாட்கள்!
வழியறியாமலும் வாழ்வின் போக்கறியாமலும்  
தயங்கியோ முடங்கியோ தவித்துக்கிடப்பதில்லை,
சாலையிலும் வாழ்க்கைப்பாதையிலும்
கரடுமுரடுகளைக் கண்ட எங்கள் கால்கள்,

இடறும் சரளைக்கற்களால் தடுமாறி
இடவலம் புரியாது திசைகளின் தடம்மாறி
முச்சந்திகளில் தத்தளித்து நின்றாலும்….
அச்சச்சோவென்று அனுதாபம் கொண்டெவரும்
ஆதரவுக்கரம் நீட்டி அவமதித்திட வேண்டாம்.
சாலையின் விதிகளை மதித்து நடவுங்கள்,
சங்கடமின்றி சாலை கடப்போம் நாங்கள்.
இதை இறுமாப்பெனாது, தன்னம்பிக்கையென்பீராயின்
இறும்பூதெய்திடுவோம் உங்கள் பெருந்தன்மை கண்டு.


உதவும் எண்ணம் உண்மையில் இருப்பின்….
தீயும் மண்ணும் தின்னும் கண்களை மட்டும்
சற்றே மனங்கனிந்து எமக்களித்து உதவுங்கள்,
கடந்திடுவோம் பிறவிப்பெருங்கடலை
உம் கருணைக்கரங்களைப் பற்றியபடியே!
ஒளி காட்டும் வழியில் எம்மை உய்விக்கும்
உங்கள் உயர்குணந்தன்னை நினைந்து நினைந்து
நெஞ்சம் நெகிழ்ந்திருப்போம் வாழும் நாளெல்லாம். 
நன்றி geethamanjari.blogspot

No comments: