கவிதை - ஈழமண்ணுக்காய் நீங்கள் போராட

.
ஈழமண்ணுக்காய் நீங்கள் போராட

ஈழமண்ணைவிட்டு நாங்கள் ஓடினோம்
மண்ணுக்காய் நீங்கள் மண்ணுக்குள் விதைக்கப்பட்டீர்கள்
மண்ணின் நினைவை மண்ணுக்குள் நாங்கள் புதைத்தோம்
காட்டிலும் மேட்டிலும் ஈழக்கனவோடு நீங்கள் படுத்துறங்க
கட்டிலில் படுத்திருந்து காசுக்கனவுகண்டோம் நாங்கள்

தியாகங்கள் பல படைத்தீர் நீங்கள் ஈழம் கிடைப்பதற்கு அதை
நியாயமாய் காட்டினோம் நாங்கள் புகலிடம் கிடைப்பதற்கு
சாதிகள் பேதங்கள் வேண்டாமென்று நீங்கள் போராட
சந்தி சந்தியாய் நின்று நாங்கள் சாதிச்சண்டை பிடித்தோம்
கலை கலாச்சாரத்தை பேணிட நீங்கள் பாடுபட்டீர்கள்
கலை விழாக்கள் என்று சொல்லி நாங்கள் கலையை கொலை செய்தோம்

பூவையரை புதுமைப்பெண்ணாக்கி நீங்கள் உயர்ந்த இடத்தில் வைத்தீர்
பூப்புனிதநீராட்டு என்று உலக அழகிகள் போல படம் எடுத்தோம் நாங்கள்
சீதனங்கள் கொடுக்க வேண்டாம் என நீங்கள் சொன்னீர்
சீட்டுக்கள் பல எடுத்து நாங்கள் போட்டிக்கு சீதனம் கொடுத்தோம்
கல்லறைக்குள் நீங்கள் தூங்குகிறீர்கள் தமிழ்மானம் காக்க
சில்லறைக்காய் தமிழ்மானம் விற்கிறோம் நாங்கள்

அன்னை மொழிக்காய் நீங்கள் உம்முடலை கருக்கினீர்கள்
அன்னிய மொழி மட்டும் பேசி நாங்கள் பெருமைப்பட்டோம்
கண்ணீரில் வாழும் எம்மினத்திற்காக நீங்கள் கையில் துவக்கு எடுத்தீர்கள்
தண்ணீரில் மூழ்குவதற்கு நாங்கள் கையிலே போத்தல் எடுத்தோம்

போராட்டம் நீங்கள் ஆமியுடன் நடாத்த
தேரோட்டம் நாங்கள் சாமிக்கு நடத்தினோம்
கோவில்கள் விகாரைகளாகாமல் அங்கே நீங்கள் தடுக்க
கோவில்கள் பலகட்டி இங்கே மார்தட்டிகொள்கிறோம் நாங்கள்
ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் தமிழுக்காய் உச்சரிக்க
ஒரு வார்த்தையில் கூட நாங்கள் உங்களை வாழ்த்த மறந்தோம்

நீங்கள் எங்களுக்காய் விதைக்கப்பட்ட புனிதர்கள்
நாங்கள் எங்களால் சிதைக்கபட்ட பிணங்கள்
எங்களில் சிலர் பிணங்களாய் இருப்பதால்தான்
எங்களுக்கென்று ஒர் நாடும் இல்லை கேட்க நாதியுமில்லை
உங்கள் தியாகங்களை ஒரு கணம் நினைத்தால்
நாங்கள் மனிதர்களாகலாம் நினைப்போமா …….?

டென்மார்க்கில் இருந்து நக்கீரன் மகள்

1 comment:

kirrukan said...

நல்ல கவிதை தந்த நக்கீரன் மகளுக்கு நன்றிகள்


நீங்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்தீர்கள்
நாங்கள் மனிதசாமியார்களுக்கு பிறந்தநாள் கொண்டாடினோம்