பிறவிப் பெருங்கடல் நீந்தாதார் யார்?

மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் இயற்கை வகுத்த நியதிப்படி வாழ்ந்து மடிவதுதான் இயற்கையின் உட்பொருள். அந்த உட்பொருளின் சூட்சுமம்தான் நிலையாமை என்ற அடிப்படை தத்துவம். உயிர்களுக்கு வகுக்கப்பட்ட நியதி பண்பட்ட உயிரான மனிதனுக்கும் பொருந்தும்.


ஆறறிவுக்கு கீழ்பட்ட உயிரினங்கள் யாவும் இந்த இயற்கை நியமித்த சுழற்சியில் சுழலும்போது ஆறறிவு பெற்ற மனிதன் மட்டும்
இந்ந சுழற்சி முறையை உடைக்கப் பார்க்கிறான். உடைத்து விடமுடியும் என்றும் எண்ணுகிறான். உடைத்து விட்டாதாகவும் எண்ணி இறுமாப்படைகிறான். பெண் வயிற்றில் கருவுற்று வளரும் கால அளவைக் குறைக்க இயலுமா?

அப்படியே கால அளவு குறைந்து வெளிவரும் உயிரை குறைப்பிரசவம் என்கிறோம்.
அதுபோன்று வாழ்ந்து முடியாத வாழ்வும் வாழ்வல்ல. பிறவி என்பது பிறந்து வளர்ந்து எளிதாக கடந்து சென்றுவிடக் கூடிய ஒன்றல்ல. பிறவி என்பது பெரிதாக கடந்து செல்லவேண்டிய ஒன்று. அதனால்தான் அதனைப் பிறவிப் பெருங்கடல் என்றான் வள்ளுவன்.

ஏன் கடல் என்று சொல்லியிருக்கலாமே வள்ளுவன் ஏன் பிறவிப் பெருங்கடல் என்றான்? இவ்வாறு எண்ணினால் மட்டுமே வள்ளுவன் குறளின் பொருள் காணமுடியும். கடல் என்பதை நீந்தி விடலாம். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆறா ஓடுகிறதா? கடல் தானே. அதை நீந்தி விடமுடியும். ஆனால் நீந்த முடியா பெருங்கடல் உலகில் இருக்கிறதல்லவா? ஆகையால் பிறவியை பெருங்கடல் என்றான்.

ஆகையால் பிறவியை வாழ்ந்து முடிப்பது அவ்வளவு எளிதல்ல. மற்ற உயிரினங்கள் வாழ்வை அவை தீர்மானிப்பதில்லை. இயற்கை ஓட்டத்தில் இழுத்துச் செல்லப் படும்போது மனிதன் மட்டும் இயற்கையின் சுழற்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும் என்று எண்ணி ஏதேதோ செய்கிறான்.
ஆனால் இந்த பிறவியை இயற்கை வகுத்தபடி வாழ்ந்து முடிக்க முடியும் என்று வள்ளுவன் உறுதியாக நம்பினான்.

ஆதலால் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்றான். கடல் என்றால் அமைதியாகவும் இருக்கும். ஆர்ப்பரித்தும் எழும். அதில் சிறு சிறு மீன்களும் இருக்கும் பெரிய திமிங்கலங்களும் இருக்கும். வாழ்வும் அப்படித்தான் இன்பமாகவும் இருக்கும் துன்பமாகவும் இருக்கும். வாழ்நாள் முழுதும் இன்பமாக இருந்தவரும் இல்லை. துன்பத்தோடே வாழ்ந்தவரும் இல்லை.

துன்பம் வரும்போது ஓடிவிடச் சொல்லவில்லை வள்ளுவன். அதை எதிர்கொண்டு முயற்சி செய் முயற்சி திருவினையாக்கும் என்றான். இடுக்கண் வருங்கால் நகுக என்றானே ஒழிய எவராவது அல்லது ஏதாவது ஒன்று வந்து உன்னைக் காப்பாற்றும் என்று வள்ளுவன் சொல்லவையில்லை. உன் வினையை நீதான் அறுக்க வேண்டும். இந்த நியதியைத்தான் அழுதாலும் பிள்ளையை அவள்தான் பெறவேண்டும் என்ற கருத்தினை நம் முன்னோர் விதைத்துச் சென்றுள்ளனர்.

ஆதலால் இன்பமும் துன்பமும் நிறைந்த பெருங்கடல் போன்ற வாழ்க்கையை வாழ்ந்தே ஆகவேண்டும். அதைத்தான் நீந்துவர் என்றான். நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் பலர் இன்பமாக இருக்கிறார்கள் பலர் துன்பத்தில் உழல்கிறார்கள் என்று. எல்லோரும் இன்ப துன்பத்துடனே வாழ்ந்து வருகின்றார்கள். பெருஞ்செல்வந்தர்கள் இன்பமாக இருக்கிறார்கள் என்று சொல்லவும் முடியாது. மிகவும் வறியவர் துன்பத்தோடே வாழ்கிறார்கள் என்று எண்ணவும் முடியாது.

பஞ்சு மெத்தையில் குளிரூட்டிய அறையில் தூங்குவது செல்வந்தனுக்கு இன்பம் என்றால் துண்டை விரித்து மரத்தடியில் குளுகுளுவென்ற காற்று வீச உறங்குவது வறியயவனுக்கு இன்பம். ஆனால் இருவருமே கிடக்காத ஒன்றின் மேல் ஆசைப்படுவார்கள். இதுதான் வாழ்க்கை. ஆதலால் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதுதான் வாழ்க்கை.
இந்த வாழ்க்கையைத்தான் இன்ப துன்பங்களை ஏற்று பெருங்கடலெனும் வாழ்வை வாழ்வை வாழச்சொல்கிறார்.

வாழ்க்கை துன்பம் சூழ்ந்த பெருங்கடல் அதிலிருந்து விடைபெற்று ஓடிவிட வேண்டும் என்றோ அதற்கு வழிகாண வேண்டும் என்றோ அவர் கூறவில்லை. காலங்களின் சுழற்சியே இளவேனிற்காலம், கோடைகாலம், இலையுதிர் காலம், மற்றும் குளிர்காலம் என்றுள்ளது. அதையொட்டுயே மரங்களும் செழித்து வளர்ந்து காய் கனிகளைக் கொடுத்து இலைகளை உதிர்க்கின்றன.

அதுபோன்றே இயற்கையின் சுழற்சியில் மனிதன் பிறக்கின்றான்  இன்ப துன்பங்களோடு வாழ்கின்றான். இனவிருத்தி செய்கின்றான். இலையுதிர் காலமாய் மடிகின்றான். இந்த இயற்கைச் சுழற்சியை அதன் வழி நின்றே அணுக வேண்டும். அதைவிட்டு இந்த சுழற்சியிலிருந்து விடைபெற வேண்டுமா? அப்படி சுழற்சி முறையை விரும்பாமல் விடுதலை அடையவேண்டுமென ஏன் எண்ணுகிறான்.

உண்மையிலையே விடுதலை அடைய விரும்புபவன் என்றால் அவன் தான் விரும்பவதை மற்றவர்களும் பெறவேண்டும் என்று எண்ணுவான். அப்படி எண்ணினால் அவன் இனவிருத்தி செய்யமாட்டான். நமக்கு ஒரு செடி கள்ளிச்செடி என்று தெரிந்தும் அதை உரமிட்டு வளர்த்து பின் அதை வெட்டுவோமா? நாமே பிறவியிலிருந்து விடைபெற வேண்டும் என்று எண்ணும்போது குழந்தைகளைப் பெற்று அவர்களை பிறப்பறுக்கும் வேலையில் தள்ளுவோமா?

வள்ளுவன் வாழச்சொல்கிறார். பிறப்பறுக்கும் யுக்தியில் ஈடுபடச் சொல்லவில்லை. அதனால்தான் அறம் என்று சொல்லி வாழும் வழிசொன்னார். வாழ்க்கைக்கு தேவையான பொருளீட்ட பொருட்பால் தந்தார். அருளில்லார்க்கு அவ்வுலகில்லை என்றார். அன்பானவர்களுக்குத்தான் அன்பாக மற்றவர்களுடன் வாழமுடியும் என்பதால் அன்பற்றவர்களுக்கு அன்பான உலகில்லை அந்த அன்பான உலகில் வாழும் தகுதியில்லை என்றார்.

அது போன்றே பொருளில்லார்க்கு வாழமுடியாது இவ்வுலகில் என்று பொருள் தேடச் சொன்னார். பொருள் தேடுவது வேறு எதற்காகவும் அல்ல. வாழ்க்கைத் துணைநலத்தை தேடி இல்வாழ்க்கை வாழ்ந்து வாழ்வை முழுமையாக வாழ்ந்து முடிக்கவே இன்பத்துப்பால் தந்தார். பிறவியை உண்மையிலேயே பெருங்கடலாக வள்ளுவன் எண்ணயிராவிட்டால் அறத்துப்பால் மட்டும் சொல்லிவிட்டப் போயிருப்பான்.

மிஞ்சிப்போனால் துறவுப்பால் என்றொரு இன்னொரு பாலையும் படைத்திருப்பான். வீணாக பொருட்பாலையும் இன்பத்துப் பாலையைம் படைத்திருக்க மாட்டான். ஆதலால் வள்ளுவனுக்கு துறவிலோ பிறப்பறுப்பிலோ நம்பிக்கை இல்லை எனலாம். இனி முடிவாக பிறவிப் பெருங்கடல் நீந்தாதார் யார் எனப்பார்ப்போம்.

இறைவனடி சேராதார் என்பவர்களைத்தான் நீந்தாதார் என்கிறார். இயற்கையை இறைவனாக ஏற்று வணங்கியவர்களே தமிழர்கள். பகலவனை வணங்கினர். சூரியநமஸ்காரம் என்று சுத்த தமிழில் சொன்னால்தான் நமக்கு தெரியும். ஏம்பா பஸ் ஸ்டாப்பில விடுகிறேன் என்று தமிழில் சொல்வியா? பேருந்து நிலையம் என்று புரியாத மொழியில் சொல்கிறாயே என்பதுபோல் நமக்கு அப்படிச் சொன்னால்தான் பரியும். மலைகளை அண்ணாமலை, பழனிமலை என்று வணங்கினோம்.

காவிரி, கங்கை என்று ஆறுகளை வணங்கினோம். அரசமரம், வேப்ப மரங்களை சுற்றி வந்து வணங்கினோம. இப்படிப்பட்ட இயற்கையை இறைவனாக நம்மை காக்கும் வாழ்வில் காக்கும் துணையாக எண்ணி வணங்கினோம். தமிழில் இடவாகு பெயர், உருவகம் என்றெல்லாம் இலக்கண முறைகள் உள்ளன. ஊரிலுள்ள மக்கள் சிரிப்பதை ஊர் சிரிக்கிறது என்பார்கள். அதுபோல் இங்கே இயற்கையை இறைவனாக உருவகப்படுத்தி இருக்கிறார் வள்ளுவர்.

எனவே இயற்கையின் நியதிப்படி வாழாமல் பிறவியை அதிலுள்ள இன்ப துன்பங்களை சமமாகக் காணாமல் அதிலிருந்து விடுதலை அடைய விரும்புவர்களைப் பற்றித்தான் பிறவிப் பெருங்கடல் நீந்தாதார் என்கிறார் வள்ளுவர். இயற்கையில் பகலவன் சுற்றவேண்டும். பூமி பகலவனை சுற்றிவர வேண்டும். இரவு பகல் வேண்டும். மழைவேண்டும் பயிர் வளர்ந்து நமக்கு உணவாகவேண்டும்.

இவை யாவற்றுக்கும் இயற்கை வேண்டும். இந்த அத்தனையையும் செய்ய இயற்கை வேண்டும். அந்த இயற்கை நமக்கு இறைவனாக மட்டும் வேண்டாம். என்ன நியாயமோ? இந்த கருத்தை விதைத்தவர் யாரோ? மற்றபடி கடவள் மேல் எனக்கு வெறுப்பொன்றும் கிடையாது. எனக்கும் கடவுளுக்கும் எந்த வாயக்கால் வரப்புத்தகராறோ பகையோ கிடையாது.


-சங்கர சுப்பிரமணியன்.

No comments: