இலங்கைச் செய்திகள்

ஈரானிய கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

ஈரானிய கப்பலில் இருந்து 30 பேர் மீட்பு: கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதி

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடனான தமிழரசின் சந்திப்பு..!

வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான இணக்கம் ஆரம்பம்; தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பில் முக்கிய நகர்வு

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! 



 ஈரானிய கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு 

Published By: Digital Desk 3

05 Mar, 2026 | 09:27 AM

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியிருப்பதை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க யுத்த விவகார செயலாளர் பீட் ஹெக்செத் ஈரானியக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததை உறுதிப்படுத்தினார்.

"சர்வதேச கடல் பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட டோர்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் அழித்துள்ளோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 180 பணியாளர்களுடன் பயணித்த "ஐஆர்ஐஎஸ் டெனா" கப்பல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இதுவரை பின்வரும் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடலில் மிதந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவை மேலதிக பரிசோதனைகளுக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

32 பேர் கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் இருந்த ஏனைய சுமார் 64 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

1979 ஆம் ஆண்டின் சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மாநாட்டின் உடன்படிக்கையின்படி, இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்ததால், மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணிகளை முன்னெடுக்கும் சர்வதேச கடப்பாடு இலங்கைக்கு உண்டு. 

நேற்று புதன்கிழமை (04) அதிகாலை 5.08 மணியளவில் கிடைத்த அபாய சமிக்ஞையைத் தொடர்ந்து, கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தலைமையிலான குழுவினர் விமானப்படையின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

இச்சம்பவம் பிராந்தியத்தில் ஒரு நேரடி யுத்தச் சூழலை உருவாக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.  நன்றி வீரகேசரி 




ஈரானிய கப்பலில் இருந்து 30 பேர் மீட்பு: கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதி 

04 Mar, 2026 | 04:50 PM

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் மூழ்கும் நிலையில் இருந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சர்வதேச கடல்சார் சட்டம், கடல்சார் உடன்படிக்கைகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் மீட்கப்பட்டார்கள் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்  சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (04)  நடைபெற்ற அமர்வின்  போது  தெற்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்க  வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் முன்வைத்த கேள்விக்கு  பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் ஈரான் கடற்படைக்கு சொந்தமான ஐடிஸ் - டேனா என்ற கப்பல் அனர்த்தத்துக்குள்ளாகி மூழ்கும் நிலையில் இருப்பதாக இன்று காலை 05.08 மணியளவில் இலங்கை கடற்படைக்கும், சமுத்திர பாதுகாப்பு அதிகார சபைக்கும் தகவல் கிடைக்கப்பெற்றது.

இந்த கப்பல் பற்றி ஆராய்வதற்கு கடற்படை மற்றும் விமான படை கூட்டாக இணைந்து செயற்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை 06 மணிக்கு முதலாவது மீட்பு குழுவினரும், காலை 7 மணிக்கு இரண்டாவது மீட்பு குழு கப்பலும் அந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 180 பேர் இருந்துள்ள நிலையில்,  அவர்களில் 30 பேர்  மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்  பாதுகாப்பாக மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடல்சார் சட்டம், கடல்சார் உடன்படிக்கைகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்கள். கடல்சார் சட்டத்துக்கமைய இலங்கையின் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் ஏதேனும் கப்பல் விபத்துக்குள்ளானால் ஆரம்பக்கட்ட உதவிகளை வழங்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.   நன்றி வீரகேசரி 





நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடனான தமிழரசின் சந்திப்பு..! 

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 03:10 PM

நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (03) சந்தித்துள்ளனர். 

இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின் வாழ்வாதார சவால்கள், ஜனநாயக செயல்முறைகள், மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் அவசியம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து திறந்த மனதுடனும் ஆழ்ந்த புரிதலுடனும் கலந்துரையாடப்பட்டதாக இரா.சணக்கியன் குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நீடித்து வரும் அரசின் பொறுப்புணர்வு தொடர்பான கேள்விகள், நீதியை நிலைநிறுத்தும் செயல்முறைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வது, மற்றும் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டிய சூழல் குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. 

அத்துடன், அரசியல் அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் அவசியம், மற்றும் தமிழர் மக்களின் நீண்டநாள் அரசியல் உரிமைகளை மதிக்கும் வகையில் அர்த்தமுள்ள மற்றும் நிலையான தீர்வை உருவாக்குவதின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. 

மேலும், நோர்வே நாட்டுடன் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஜனநாயக மதிப்புகள், மனித உரிமைகள், மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதில் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது. 

எமது பிரச்சினைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் தொடர்ச்சியான கவனம் செலுத்தி வருகிற நோர்வே அரசாங்கத்திற்கும், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் பணியில் செயற்பட்டு வரும் தூதர் மே–எலின் ஸ்டெனெரின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்கும் நன்றி கூறியதாக இரா.சணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 





வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான இணக்கம் ஆரம்பம்; தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பில் முக்கிய நகர்வு 

Published By: Vishnu

02 Mar, 2026 | 09:59 PM

(க.சிவலிகமூர்த்தி)

தமிழ் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக சிதறிக்கிடக்கும் தமிழ் கட்சிகளின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலமான முறையில் முன்னிறுத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (02) இடம்பெற்றது.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான சட்டக் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைத்து இனப்பொதுப் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிய பயணத்தை வேகப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும் என தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள துவாரகா மண்டபத்தில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையே திங்கட்கிழமை (02) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிதையாமல் பாதுகாப்பதற்கும் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் ஒருமித்த குரலில் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இவ்வாறானதொரு மேடை அவசியமாகின்றது.

வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்றக் கட்சிகள் யாவும் ஒரு சில முக்கியமான விடயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு மூடிய அறை கூட்டமாக அமைந்திருந்ததுடன் அங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் அந்தந்த அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகக் கருதப்படும். வரும் காலங்களில் மிக விரைவில் மீண்டும் கூடி பிரதானமான பல முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் மேலும் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கருத்தைப் பகிர்கையில் இது ஒரு வெற்றியென்பதை தாண்டி ஒரு தொடக்கம் மாத்திரமே. இனப் பிரச்சினை சம்பந்தமாக ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தமிழ் கட்சிகள் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் அதன் நுணுக்கமான விபரங்கள் குறித்து இனிவரும் சந்திப்புகளில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இக்கூட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. நீண்டகாலமாக நிலவும் இனப் பிரச்சினைக்கு அரசியல் சாசனம் ஊடாகத் தீர்வு காண்பதற்கான தொடர்ச்சியான நகர்வாக இது அமைவதோடு தமிழ் கட்சிகள் யாவும் ஒரே சட்டக் குடையின் கீழ் ஒன்றிணைந்திருப்பது ஒரு பாரிய வெற்றி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கூறுகையில் இச்சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றது. இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அடுத்தகட்டச் செயற்திட்டங்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையே மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை இனிவரும் காலங்களில் தமிழ் கட்சிகளை இணைக்கும் பாலமாகச் செயற்பட வேண்டும். தனித்தனியாகப் பிரிந்து நின்று செயற்பட்ட நிலையை மாற்றி மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் ஒரே குரலில் சொல்ல வேண்டிய காலம் கனிந்துள்ளதாகவும் இக்கூட்டு முயற்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு பலமான செய்தியைச் சொல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை (02) இச்சந்திப்பில் அரசியல் பிரமுகர்களாக சிவஞானம் சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா சட்டத்தரணி வ.ச.நிரைஞ்சன் சட்டத்தரணி ஞா.கா.ரனித்தா மற்றும் சட்டத்தரணி ம.யூட் தினேஷ் உள்ளிட்ட முக்கிய சட்ட வல்லுநர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இந்தச் சந்திப்பானது நீண்டகாலமாகத் தனித்தனியாகப் பயணித்த தமிழ் அரசியல் சக்திகளை ஒரு பொதுவான இலக்கின் கீழ் கொண்டு வருவதற்கான முதல் படியாக அமைகின்றது. தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் நடுநிலையான வழிகாட்டலில் எட்டப்பட்டுள்ள இந்த ஆரம்பகட்ட இணக்கப்பாடானது வரும் காலங்களில் ஒரு பலமான அரசியல் அழுத்தக் குழுவாக உருவெடுக்க வழிவகுக்கும். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விபரமான ஆவணங்களைத் தயாரித்து அடுத்தகட்டச் சந்திப்புகளில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.






காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! 

02 Mar, 2026 | 02:22 PM

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வழமைபோல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் இந்த கப்பல் சேவையில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 







No comments: